Sunday, August 1, 2010

காங்கிரஸை அரவணைக்க விரும்புகிறார் கருணாநிதிதமிழக ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறார் ராகுல்




தமிழகத்தில் இழந்து விட்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு ராகுல்காந்தி முனைப்புடன் செயற்படுகிறார். தற்போதைய ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முதல்வர் கருணாநிதி காய்நகர்த்துகிறார். தமிழக அரசியல்பற்றிய விபரங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் ராகுல்காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. தடுமாறுகின்றனர் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல்காந்தி நினைக்கிறார். இளங்கோவனைப் போன்ற ஒரு சில தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் இருப்பதற்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை ராகுல் காந்தி அறிவார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பமாகும்.
கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிவார்கள். ஆகையினால் காங்கிரஸ் கட்சியை கைவிட கருணாநிதி தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் செயற்பாடுகள் மெச்சும்படியாக இல்லை.
காமராஜரின் நினைவு தின நிகழ்வில் தனித் தனிக் கோஷ்டியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். பெருந் தலைவர் காமராஜரின் நினைவு தினத்தில் ஒன்றாகச் சென்று அஞ்சலி செலுத்தாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலக் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதிலேயே குறியாக உள்ளன. மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிவரும் ஆதரவில் எந்த விதமான தடங்கலும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் விடுக்கும் கோரிக்கைகளினால் காங்கிரஸ் கட்சிக்கு எதுவித சங்கடங்களும் ஏற்படவில்லை. அதேவேளை மத்திய அரசை மிரட்டும் தொனியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிப்பு எதனையும் வெளிவிடுவதில்லை.
வட பகுதியில் உள்ள மாநிலக் கட்சிகளின் நெருக்கடிகளில் இருந்து வெளியேறுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி காங்கிரஸ் கட்சிக்குத் தேவையாக உள்ளது. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் நான்கு வருடங்கள் உள்ளன. அதனையும் கருத்தில் கொண்டே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் விருப்பமாக உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு ஆசனங்களை ஒதுக்க வேண்டும். துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி பல கோஷ்டியாகப் பிரிந்துள்ளது. எந்தக் கோஷ்டிக்கு அதிக தொகுதி ஒதுக்குவது என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணை முதல்வர் பதவிக்கு பலர் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிதம்பரம், ஜி.கே. வாசன், இளங்கோவன் போன்றவர்களின் தலைமையில் தமிழக காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. இந்தத் தலைவர்களின் நடவடிக்கைகளினால் வெறுப்புற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் தலைமையிலான குழு ஒன்றைத் தமிழகத்தில் அமைக்கும் காலம் விரைவில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும்உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்தையும் இணைப்பதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் இறங்கியுள்ள விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் தாம் கை கொடுக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடுவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்புகிறார்கள். ராகுலும் இதைத்தான் விரும்புகிறார் என்று சூசகமாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு கருணாநிதி கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் ஜெயலலிதா கொடுக்கமாட்டார் என்பது வெளிப்படையானது. ஆகையினால் கூட்டணியில் மாற்றம் ஏற்படக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரது அபிப்பிராயம்.
தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வழங்கவில்லை. வட இந்திய மாநிலங்களில் ராகுலின் திட்டம் வெற்றியளித்துள்ளது. அதேபோன்ற திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி திராவிடக் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். வட இந்திய மாநிலக் கட்சிகளின் மாற்றுக் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆகையினால் ராகுல் காந்தியின் திட்டம் வெற்றியளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடாக காங்கிரஸ் கட்சி இல்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் எதிர்த்து களமிறங்கியுள்ள விஜகாந்த்தும் பலம் குன்றிய நிலையிலேயே உள்ளார். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் சாத்தியம் மிக மிக குறைவாகவே உள்ளது.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்லானாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. மத்திய அரசுடன் அனுசரித்துச் செல்லும் மாநில ஆளுநர்கள் எதுவித பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதில்லை. மத்திய அரசுக்கு எதிரான கட்சிகளின் கையில் இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் சட்டப் புத்தகமும் கையுமாகவே இருக்க வேண்டும். மாநில அரசின் சட்டம் ஒழுங்கு கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய அரசு எல்லை மீறி விட்டது எனக் கருதும் பட்சத்தில் அதுகுறித்த ஆதாரங்களை வழங்க மாநில ஆளுநர் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளார். தமிழக அரசுக்கு அவ்வப்போது ஏற்பட்ட நெருக்கடிகளைச் சாதுரியமாகத் தீர்த்து வைத்தார் ஆளுநர். சுஜிர்ஜித் சிங் பர்னாலான ஆளுநரின் மகன் மீது அவ்வப்போது பல புகார்கள் கூறப்பட்டன. மத்திய அரசும் மாநில அரசும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டு எதனையும் தமிழக அரசு சுமத்தவில்லை. சுர்ஜித் சிங் பர்னாலா போன்றே அடுத்து வரப் போகும் ஆளுநரும் இருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது.
ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லாவை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமானவர் நவீன் சாவ்லா என்ற கருத்தும் உள்ளது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவரை தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பமாட்டார். ஆகையினால் நவீன் சாவ்லாவை தமிழக ஆளுநராக நியமித்தால் காங்கிரஸ் கட்சியின் சில கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்ற இணங்குவார் என்பது காங்கிரஸ் தரப்பின் எதிர்பார்ப்பு.
தமிழகத் தேர்தல் காலத்தில் ஆளுநரின் கடமை மிக முக்கியமானது. தேர்தலின் போது ஏற்படும் குளறுபடிகளைத் தீர விசாரித்து முடிவு காண வேண்டிய பரிந்துரைகளை ஆளுநர் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இந்த ஏற்பாடு பற்றிய தகவல்கள் தமிழக முதல்வருக்கும் எட்டியிருக்கும். காங்கிரஸுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அடிபணியுமா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கு காங்கிரஸ் கட்சி இணங்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

வர்மாவீரகேசரிவாரவெளியீடு 01/08/10

3 comments:

Anonymous said...

காங்கிரசு தனியாக நின்றால் கட்டிய முன்தொகையைக் கூடப் பெற முடியாது.நடிகையின் நாக்கு சோனியாவைச் சுட்டெரித்தது தமிழ் தெரியாத ராகுலுக்குத் தெரியாதா இல்லை உண்மையென்று ஏற்றுக் கொள்கிறாரா ? நெற்றி வேர்வை என்றால் என்னவென்றே தெரியாத வாய்க்கொழுப்பு உளறல்கோவனும்,மண்டையைத் தவிர உடலெல்லாம் மூளை வழியும் பணமுதலையும் காமராசரின் கால் தூசிக்குக்கூடச் சமமாக மாட்டார்கள் என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிந்தவர்கள்.பாவம் ராகுல்,ஆசையிருக்குது,மீசையில்லையே.

raja said...

தம்பி... பீகார்ல மண்பாண்டம் தூக்கிட்டா தனக்கு இந்திய அரசியல் முழுக்க தெரிஞ்சிட்டதா நிணைக்கிறார்..
அந்த பருப்பு தென்னிந்தியாவில வேகாது என்பது என் அபிப்ராயம்.

Robin said...

இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது தற்கொலை முயற்சியாகவே அமையும்.