Tuesday, August 17, 2010

விஜயகாந்த் முதுகில் சவாரி செய்யதயாராகிறார் டாக்டர் ராமதாஸ்


கருணாநிதியின் முதுகிலும், ஜெயலலிதாவின் முதுகிலும் சவாரி செய்து அரசியலில் உச்சக்கட்டத்தை அடைந்த டாக்டர் ராமதாஸ் இப்போது தனது பரம எதிரியான விஜயகாந்தின் முதுகில் சவாரி செய்யத் தயாராகி விட்டார்.
வன்னியரின் எதிர்கால வளமான வாழ்வுக்காக இயக்கம் ஒன்றை ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் காலத்தின் கட்டாயத்தினால் வன்னியருக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போது பல உறுதிமொழிகளை வழங்கினார். அவற்றில் பலவற்றை அரசியல்வாதிகளின் தனித்துவத்துக்கு ஏற்ப மீறினார்.
தமிழக அரசியலில் படிப்படியாக முன்னேறிய டாக்டர் ராமதாஸின் அரசியல் கட்சி மத்திய அமைச்சரவையிலும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.
தமிழகத்தில் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்ற மாயையில் தனக்குத் தேவையான தொகுதிகளைப் போராடிப் பெற்றார். தனது மகன் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அடிக்கடி கூட்டணி மாறினர் என விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ், தனது மகனின் நாடாளுமன்றப் பதவியைத் தக்க வைப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் உதவியைப் பெறுவதற்காகத் தூதனுப்பினார். டாக்டர் ராமதாஸின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த முதல்வர் கருணாநிதி பட்டும் படாமலும் பதிலளித்தார். தனது மகனின் நாடாளுமன்றப் பதவி பறிபோய் விடும் என்பதைப் புரிந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வெறுப்பின் உச்சிக்கே சென்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் டாக்டர் ராமதாஸை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் முன்னுரிமை வழங்கினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர், புதிய கூட்டணிக்காக அத்திவாரமிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸுக்குப் பிடிக்காதவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் நடிகர்கள். தமிழக அரசியல் கட்சிகள் நடிகர்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளன. நடிகர்களைத் தூற்றுவதில் பாட்டாளி மக்கள் கட்சி முதலிடம் வகிக்கிறது. டாக்டர் ராமதாஸின் எதிரிகள் பட்டியலில் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் உள்ளனர். ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் ரசிகர்களும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் பலமுறை மோதியுள்ளனர். இவை இவ்வாறு இருப்பினும் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
மக்களுடன்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தி வரும் விஜயகாந்தும் கூட்டணி சேரும் எண்ணத்தில் உள்ளார். அவரது முதலாவது தெரிவு காங்கிரஸ் கட்சி. அது திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக்கு சூசகமாக அறிவித்துள்ளார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிபணிய வைக்க விரும்பும் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடத் தயாராக இல்லை.
காமராஜரின் ஆட்சிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவாரி செய்து தேர்தல்களில் ஜெயித்த காங்கிரஸ் கட்சி இப்போது முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் என்ற இரட்டை வண்டியில் சவாரி செய்யத் தயாராக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்கு பலர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணியில் சேர்வதற்குத் தான் தயாராக இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சமிஞ்ஞை காட்டியுள்ளார்.
ராகுல் காந்தி, இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்பவில்லை. சோனியா, மன்மோகன், தங்கபாலு போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்புகின்றனர். கருணாநிதி, விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர். ஜெயலலிதா, விஜயகாந்த், காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக ஆலோசனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி விஜயகாந்துடன் இணைந்தால் அக்கூட்டணியில் தான் சேர்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த ஆலோசனைக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ காங்கிரஸும் விஜயகாந்தும் பதிலளிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தோற்கடிக்கும் பலம் தன்னிடம் உள்ளதாக ராமதாஸ் கருதுகிறார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இருமுனையில் போட்டியிட்டாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சிரமம். கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் தனது தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெறும் என்ற அசையாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது.
முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸுக்கு முதல் மரியாதை கொடுத்த காலம் மலையேறி விட்டது. ஏதாவது ஒரு கூட்டணியில் என்னைச் சேர்க்கிறீர்களா என்று டாக்டர் ராமதாஸ் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பங்காளியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியையே எதிர்க்கட்சியை விட மோசமாக விமர்சித்தது. தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் தவறு என்று மேடைக்கு மேடை முழங்கியது.
தமிழக அரசு செயற்படுத்த முனைந்த பல திட்டங்களை முடக்கியது. எல்லாவற்றையும் பொறுமையுடன் அவதானித்த முதல்வர் கருணாநிதி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது டாக்டர் ராமதாஸை ஒதுக்கி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் விருட்சங்களைப் பற்றிப் படர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று பற்றிப் பிடிக்க கொழுகொழும்பு இன்றித் தவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற முடியாது என்ற இறுமாப்பு அடங்கிப் போயுள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/08/10

1 comment:

Anonymous said...

nandri,melum ethirpaarkirom.