Wednesday, September 22, 2010

புதிய கூட்டணிக்குஅச்சாரமிடும்தலைவர்கள்



தமிழக அரசியல் தலைவர்களை ஒரே இடத்தில் காண்பது அபூர்வம். தமிழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அரசியல் கட்சித்தலைவர்கள் ஒன்றõக அமர்ந்து உரையாடியது சகலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிடக் கட்சித் தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு, வாசன், இளங்கோவன் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக இருந்தமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக எதிர்ப்பவர் இளங்கோவன், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி பின்னர் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறும் விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிராக அரசியல் நடத்துபவர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். மூப்பனாரின் மகன் வாசன். முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டணிக் கட்சியின் பிரதான பங்காளராகிய தொல். திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடியமை புதிய கூட்டணியின் ஆரம்பமோ என்று பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன், விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் சொல்லி வரும் வேளையில் இவர்களின் சந்திப்பு புதிய ஆரூடத்துக்கு வழி கோலியுள்ளது.
விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது வரவேற்ற திருமாவளவன், கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்த் கூறியபோது, பச்சைக் கொடி காட்டியவர். விஜயகாந்தின் பிறந்த நாளன்று அதிரடியாக விஜயகாந்தைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலைக் கிளப்பியவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை எதிர்ப்பவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கூட்டணியுடனான கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் தங்க பாலு, எதிரும் புதிருமாக இந்த அரசியல் தலைவர்கள் ஒன்றாக அஞ்சலி செலுத்தியது. தற்செயலானதா அல்லது திட்டமிட்டு சந்தித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் தலைவர்கள் தமது அரசியல் எதிரி அங்கு வரும் நேரத்தைத் தவிர்த்தே செல்வது வழமையானது. இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பேõது அவர்களது ஆதரவாளர்கள் மோதும் சந்தர்ப்பமும் எழுவதுண்டு. ஆனால் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தும் வைபவத்தில் எல்லாம் நேர்மாறாக நடந்துள்ளது.
ரஜினிகாந்தின் வீட்டுத் திருமணத்தை தமிழக ஊடகங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த். சினிமாவில் செல்வாக்கு மிக்க ரஜினிகாந்தின் குரல் அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ரஜினிகாந்தை எதிர்க்கும் கட்சிகள். இக்கட்சிகளின் தொண்டர்களும் ரஜினிகாந்தின் ரசிகர்களும் பலமுறை முட்டி மோதியுள்ளனர். ரஜினிகாந்தின் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இக் கட்சிகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் வீட்டில் நடைபெறும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூட்டணி பற்றிய பரபரப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பலமுள்ள கட்சி கூட்டணி சேர்வது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பலமான கூட்டணியில் இணைந்து தமிழக அரசியலில் வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது செல்வாக்கினால் மத்திய அரசியலில் பலமான அமைச்சுப் பதவியைக் கேட்டுப் பெறும் வகையில் வளர்ச்சியடைந்தது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் புறந்தள்ளியுள்ளனர். காங்கிரஸின் தயவில் மீண்டும் தமிழகத்தில் கூட்டணி சேரலாம் என்ற கனவுடன் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை காங்கிரஸும் கைவிட்டு விட்டது.
பலமான கட்சிகளுடன் கூட்டணி சேரத் துடித்த பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலையை நன்கு உணர்ந்து கொண்டதனால் கூட்டணிக்குத் தலைமையேற்க முயற்சி செய்கிறது. வன்னியர் என்ற சமூகத்தினுள் அடங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் இணைவதற்கு ஏனைய சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் தயாராக இல்லை என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழக அரசின் கடந்த செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்களைப் பாடாய்ப் படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இப்போது விட்ட தவறுகள் தேர்தலின்போது பூதாகரமாக வெடித்து தோல்வியை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. புதியவர்களும் ஆட்சி பீடம் ஏறுவதையே ஸ்டாலினும் விரும்புகிறார். ஸ்டாலினை முதல்வராக்க, கருணாநிதி விரும்புகிறார். முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுவதை சோனியா விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பலரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூட்டணி சேர கட்சித் தலைவர்கள் ஆவலாக உள்ளனர்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/09/10

No comments: