Wednesday, September 22, 2010

விஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி



விஜயகாந்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரை இரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமிழக முதலமைச்சராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி விஜயகாந்தை முதல்வராக்குவதற்கு முயற்சி செய்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று அறிக்கை விடுகிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன், இளங்கோவன் ஆகிய பலமிக்க தலைவர்கள் தமக்குப் பின்னால் பலரைச் சேர்த்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணி எதுவும் இல்லாத தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பெரும் கோஷ்டி மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தேர்தலில் யுவராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் இளைஞர் காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையின் போது ராகுல் காந்தி விஜயம் செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் இல்லாத இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார். அதிலும் தமது செல்வாக்கைக் காட்ட தமிழகத் தலைவர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் வாசனின் விருப்புக்குரிய யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ், விஜயகாந்தை இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கரிஸ் தலைவர்கள் வாய் கிழியப் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் ஆசீர்வாதம் பெற்ற யுவராஜ், விஜயகாந்தைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின்றி இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தை தலையெடுக்க விடக் கூடாது என்று ஜெயலலிதா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அதற்குரிய செயற் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்ற திட்டங்களுடன் செயற்படுகிறார் ராகுல் காந்தி.
யுவராஜ், விஜயகாந்த் ஆகியோர் சந்தித்தது பற்றி பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானபோது இருவரும் இதனை மறுத்து அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸின் ஆதரவில் உள்ள தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்தை, யுவராஜ் சந்தித்ததற்கான நம்பக் கூடிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடிய பலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் மட்டுமே உள்ளது. இந்தியத் தேசியக் கட்சியான காங்கிரஸினதும் தமிழகத்தின் சிறிய கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சியைக் கைவிட தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வதற்கு என்று ஜெயலலிதா துடிக்கிறார்.
இந்தியத் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வலு விழந்த நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்குத் தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட விரும்பவில்லை. தமிழகத்தின் சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கே தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் முண்டியடிக்கின்றன. காங்ககிரஸுடன் விஜயகாந்த் இணைந்தால் தமிழகத்தின் சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் சேர்வதற்கு முண்டியடிக்கும் நிலை ஏற்படலாம்.
காங்கிரஸுடனான விஜயகாந்த் நடத்திய பேச்சுவார்த்தை விஜயகாந்துக்குத் திருப்தியளிக்கவில்லைப் போல் தெரிகிறது. 30, 40 தொகுதிகளுக்கு கூட்டணி சேரத் தயாராக இல்லை என்று விஜயகாந்த் பகிரங்க அறிக்கை விட்டிருப்பது அவர் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தும் விஜயகாந்தின் தயவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்துள்ளன.
விஜயகாந்தின் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்திருப்பதை நன்றாக அறிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணியைத் தீர்மானிப்பது சோனியா காந்தி தான் என்பது வெளிப்படையானது. சோனியா காந்தி இன்னமும் விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஆகையினால் கூட்டணிக்குள் இப்போதைக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் கருணா
நிதி தெளிவாகத் தெரிந் துள்ளார். விஜயகாந்தின் பக்கம் காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்
துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிக்க வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளியீடு 12/09/10

No comments: