Sunday, November 21, 2010

இராணுவத்துடன் போராடும்ஜனநாயகப் போராளி

இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் ஜனநாயகம் தளைத்தோங்க வேண்டும் என்பதற்காக மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆங் சாங் சூகி கடந்த சனிக்கிழமை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராட்டக் குழுத் தலைவரான ஜெனரல் ஆங் சான், கின் கி தம்பதியருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தவர்.
யாங் கூனில் பிறந்த ஆங் சாங் சூகி தனது வாழ்நாளில் அதிக காலத்தை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கழித்தார். டில்லியின் தனது படிப்பை மேற்கொண்ட ஆங் சாங் சூகி, இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியற்றில் பட்டம் பெற்றார். மிக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டிஷ்காரரை மணமுடித்தார்.
ஆங் சாங் சூகியின் தகப்பன் ஜெனரல் ஆங் சான் 1947 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 1988 ஆம் ஆண்டு மியன்மார் திரும்பினார். அப்போது இராணுவ ஆட்சிக்கு நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பைக் கண்டு மக்களின் விடுதலைக்காக தேசிய ஜனநாயக லீக் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1962 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராடிய ஆங் சாங் சூகிக்கு மியான்மார் அரசு கொடுத்த பரிசு வீட்டுக் காவல்.
ஆங் சாங் சூகியின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்ட மியன்மார் அரசு 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு உலக நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்தன. அவை எவையும் மியன்மார் அரசின் போக்கை மாற்றவில்லை. சிறையில் இருந்தபடி தனது போராட்டத்தை நடத்தினார் ஆங் சாங் சூகி, அவரது நியாயமான போராட்டத்தை அங்கீகரித்த நோபல் பரிசுக் குழு 1991 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கிக் கௌரவித்தது.
தாயைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய ஆங் சாங் சூகி தாய் நாட்டை விடுவிப்பதற்காகப் போராட்டத்தில் இறங்கியதால் கணவனையும் பிள்ளைகளையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. புற்றுநோயாளியான ஆரிஸ் தன் மனைவி ஆங் சாங் சூகியைக் கவனிப்பதற்காக மியன்மாருக்குச் செல்ல விரும்பினார். மியன்மார் அரசு அவருக்கு விஸா வழங்க மறுத்து விட்டது. கணவனைப் பார்க்க ஆங் சாங் சூகி விரும்பிய போது இங்கிலாந்துக்குச் சென்றால் நாடு திரும்பக் கூடாது என்று மியன்மார் அரசு நிபந்தனை விதித்தது. விடுதலையா, கணவனா என்ற கேள்வி எழுந்தபோது தனக்கு நாட்டு மக்களின் நலனே முதன்மையானது என்று முடிவெடுத்தார். 1999 ஆம் ஆண்டு சூகியின் கணவர் பிரிட்டனில் மரணமானார்.
1990 ஆம் ஆண்டு மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த இராணுவ அரசு ஆட்சியை ஒப்படைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஆங்சாங் சூகியின் வீட்டுக் காவல் முடிவடையும் வேளையில் அவரது வீட்டில் அமெரிக்கரான ஜோன் எட்வேட், என்பவர் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகவும் அதற்கு ஆங் சாங் சூகி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறி குற்றம் சாட்டி 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை அவரது வீட்டுக்காவலை நீடித்தது.
நவம்பர் 7 ஆம் திகதி மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆங் சூங் சூகி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியை முடக்குவதற்குரிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஆங் சாங் சூகி அறிவித்தார். இதனால் அவரது கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஆங் சாங் சூகியின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றனர்.
மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த போது அவருக்கு இரண்டு பெண் உதவியாளர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசி இணைய வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சாங் சூகியின் வீட்டின் முன்னால் திரண்ட மக்கள் கூட்டம் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தியது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான ஆங் சாங் சூகி என்ன செய்யப் போகிறார் என்பதே உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தன்னை சிறையிட்டவர்களின் மீது கோபப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மியான்மாரின் அரசியலில் சிக்கலான நேரத்தில் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ அரசு அங்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. உலக நாடுகள் இராணுவ அரசைக் கண்டித்ததே தவிர உறுதியாக எதிர்ப்புக் காட்டவில்லை. ஆங் சாங் சூகியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால் இராணுவச் சாயம் பூசப்பட்ட அரசைக் களைய வேண்டும். மியன்மார் அரசு இராணுவ அரசு அல்ல. ஜனநாயக அரசு என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதிரடி அரசியலில் ஆங் சாங் சூகி ஈடுபட மாட்டார். அமைதி வழி சென்றுதான் நினைத்ததைச் சாதிக்கும் ஆளுமை ஆங் சாங் சூகியிடம் உள்ளது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 19/11/10

No comments: