Thursday, November 4, 2010

இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ஒபாமா?



உலகத் தலைவர்களில் பலர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பதிலும் உலகத் தலைவர்களில் பலர் அதிக அக்கறையாக உள்ளனர். ""மாற்றம் தேவை'' என்ற தாரக மந்திரத்துடன் புஷ்ஷின் அரசைத் தோற்கடித்த அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் மாற்றம் வராதா என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
கொம்பியூட்டர் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்தியர்கள் பலர் அமெரிக்காவிலேயே தொழில் புரிகின்றனர். வேலை இல்லாத அமெரிக்கர்
களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்பப் பணிகளை ஒபாமா குறைத்து விட்டார்.
ஒபாமா ஜனாதிபதியான பின்பு வெளிநாட்டினரின் விஸாக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒபாமாவின் விஜயத்தினால் இதற்கான தீர்வுகள் கிடைக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் பரம எதிரியான சீனா இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகிறது. சீனாவின் எதிர்ப்பை முறியடித்து ஐ.நா.வில்
பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு ஒபாமா உதவக் கூடும் என்று இந்தியா நம்புகிறது.
காஷ்மீர் விவகாரத்தினால் இந்தியாவின் மீது திணிக்கப்படும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒபாமாவின் வருகை உதவும் என இந்தியா நினைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி முதலில் இந்தியாவுக்கு விஜயம் செய்வதும் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதும் வழமையாகி விட்டது. 2011 ஆம் ஆண்டு ஒபாமா பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானும் சீனாவும் எல்லையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஒபாமாவின் விஜயத்தின் மூலம் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களும் தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்கலாம். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் பின்னர் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் சில இன்னமும் அமுலில் உள்ளன. ஒபாமாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் அந்தத் தடைகள் விலக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அமெரிக்காவுக்குப் போட்டியாக ரஷ்யா இருந்த போது ரஷ்யாவுடன் இந்தியா மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. அதனால் அமெரிக்காவும் அமெரிக்கா சார்பு நாடுகளும் இந்தியா மீது அதிக அக்கறை காட்டவில்லை. ரஷ்யாவின் பிரிவினைக்குப் பின்னர் அமெரிக்காவுடன் நட்புறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதேவேளை இந்தியாவின் பொருளாதாரத் தொழில்நுட்பம், இராணுவ வளர்ச்சி காரணமாக இந்தியாவை கவர வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் செய்ய முன்னர் 22 வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி எவரும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை.
ஏர் போர்ஸ் 1 என்ற விசேட விமானத்திலேயே ஒபாமா பயணம் செய்வார். நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 630 மைல் வேகத்தில் பறக்கும் ஆற்றல் உள்ளது. விமானியின் அறைக்குக் கீழே உள்ள தளத்தில் ஒபாமாவின் அறையும், அதன் அருகில் அலுவலகமும் உள்ளது. அதனை அடுத்து மருத்துவர்கள் அலுவலகம் உள்ளது.
விமானத்தின் நடுப் பகுதியில் விருந்தினர்கள் அறையும், பாதுகாப்பு அலுவலர்கள் அறையும் உள்ளன. வால் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கான அறையும் விமான ஊழியர்களுக்கான அறையும் உள்ளன. விமானத்தில் பறந்தபடியே உலகில் எந்த இடத்துக்கும் தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப வசதி உள்ளது.
ஒபாமா இந்தியாவில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட விசேடமான கார் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 அடி நீளமும் 5 அடி 10 அங்குல உயரமும் உள்ள இக்கார் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணம் செய்யும். கார் முழுவதும் எட்டு அங்குலத்துக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. எதையும் தாங்கும் சக்தி உள்ள கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயரில் சிறு சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதல் போன்றவற்றினால் காருக்கு சிறுசேதம் கூட ஏற்படாது.
ஒபாமாவின் இருக்கைக்கு முன்னால் கொம்பியூட்டர், தொலைபேசி வசதிகள் உள்ளன. அவர் காரில் இருந்தபடியே துணை ஜனாதிபதி, அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் உட்பட உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். இரவில் பார்க்கும் கண்ணாடி, நவீன துப்பாக்கி, கண்ணீர் புகைக் குண்டு வீசும் கருவி ஆகியன உள்ளன. ஒபாமாவின் இரத்த குரூப் காரில் இருக்கும். அமெரிக்க உளவுத்துறையின் சிறப்புப் பயிற்சி பெற்றவர் சாரதியாக இருப்பார்.
ஒபாமாவின் இந்திய விஜயம் தீர்மானிக்கப்பட்டதும் அமெரிக்க அதிகாரிகளும், உளவு அதிகாரிகளும் இந்தியாவுக்குச் சென்று பாதுகாப்புப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். உலகின் அதிக உச்சப் பாதுகாப்புப் படையுடன் ஒபாமா நாளை இந்தியா செல்கிறார். அவர் செல்லும் இடங்களில் 5 கிலோ மீற்றர் தூரம் வரை செல்போன்கள் ரிமோட் கொன்ட்ரோல்கள் என்பனவற்றைச் செயலிழக்கச் செய்யும் கருவிகள் கொண்டு செல்லப்படும். ஆள் இல்லாத விமானங்களுடன் வெளியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.
மகாத்மா காந்தியை நேசிக்கும் ஒபாமாவின் விஜயத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்ற இந்தியா காத்திருக்கிறது.


சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 05/11/10

No comments: