Wednesday, January 12, 2011

ராசாவுக்கு எதிராகஅழகிரி போர்க்கொடி

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எமது கூட்டணியைப் பிரிக்க பலர் சதி செய்கின்றனர். கூட்டணிக்கு மதிப்புக் கொடுத்து நாம் செயற்படுகிறோம். கூட்டணிக்குள் குழப்பம் இல்லை' என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கிளிப் பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரதமர் மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போது முதலமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பது மரபு. அந்த மரபை உடைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. அறிவியல் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழக அரசியல் பரபரப்பாகி விட்டது. பிரதமரின் தமிழக விஜயம் கூட்டணி பற்றிய பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அரசினால் அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றைத் திறந்து வைப்பார் என்று தமிழக செய்திக் குறிப்புத் தெரிவித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வர மாட்டார். அப்படி வந்தாலும் பூங்காவைத் திறந்து வைக்க மாட்டார் என்ற செய்தி பரவியது. அதேபோன்றே பிரதமர் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் பிரதமரை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்குச் செல்லாத முதல்வர் கருணாநிதி, வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்தச் செயல் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தயவில் தமிழக அரசை ஓட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்று அடித்துக் கூறும் முதல்வரின் இந்தச் செய்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பிணக்கு இருந்தாலும் பிரதமருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு விமான நிலையம் செல்லாத முதல்வர் கருணாநிதி இரவு ராஜ்பவனில் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரவு பிரதமரைச் சந்திப்பதற்கு முதல்வர் செல்லவில்லை. மறுநாள் காலையில் தான் ராஜ்பவன் சென்று பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி சேர்வது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில் முதல்வரின் இந்த நடவடிக்கைகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணிக்குப் பங்கம் ஏற்பட்டு விடு÷மா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் பாரதீய ஜனதா கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் தமிழகத்தின் சிறிய அரசியல் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மாட்டா. ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார்கள். விஜய், அஜித் போன்ற நடிகர்களும் முதல்வர் கருணாநிதிக்கு எதிராகக் களமிறங்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை திராவிட முன்னேற்றக் கழகம் முறிப்பதற்குத் தயõராகி விட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சம்பவங்களை அரங்கேறிய அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான டி. ஆர். பாலு, டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தார். அரசியல் அரங்கில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் அளவுக்கு மீறிப் பெரிதுபடுத்தியதால் தம் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காகவே டி. ஆர். பாலு, சோனியா காந்தியைச் சந்தித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் பகிரங்கமான இவ்வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு எதிராக அழகிரி போர்க் கொடி தூக்கியுள்ளார். கட்சிக்குள் பெரிய பதவி ஒன்றை எதிர்பார்த்திருக்க அழகிரிக்கு தென்மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கி திருப்திப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். கட்சிக்குள் இருந்து அடிக்கடி போர்க் கொடி தூக்கும் அழகிரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் அடங்கி விடுவார் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சரான பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிக கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அமைச்சரõன பின்னரும் தமிழகத்தை விட மனமில்லாத அழகிரி அடிக்கடி போர்க் கொடி தூக்கி வந்தார். இந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக தொலைபேசியில் உரையாடிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமொழி ஏற்பாடு செய்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்துச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியை அழகிரி இராஜினாமாச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று அடித்துக் கூறும் முதல்வர் கருணாநிதியால் அழகிரியின் முதலாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதற்கு கலைஞர் கருணாநிதி விரும்ப மாட்டார். அழகிரியின் இரண்டு கோரிக்கைகளை முதல்வர் இப்போதைக்கு நிறைவேற்ற மாட்டார். இதேவேளை அழகிரி தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் பரவியது. திராவிட முன்னேற்றக் கழகமும், அழகிரியும் இவற்றை மறுக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர் ராசாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு அவர்கள் பூரண ஆதரவு வழங்குவார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராசாவைக் கைவிட்டால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு ஸ்பெக்ரம் விவகாரம் வலுச்சேர்க்கும் என்றுதான் ராசாவை கட்சியில் வைத்திருப்பதா கைவிடுவதா எனத் தெரியாது தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழக எதிர்க்கட்சிகளுக்கு பதில் கூற வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு தமிழக முதல்வர் விமான நிலையத்துக்குச் செல்லாத சம்பவமும் அழகிரியின் கோரிக்கைகளும் முதல்வர் கருணாநிதிக்குப் பெரும் தலையிடியாக உள்ளன.வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/01/11

1 comment:

arasan said...

விரைவில் தமழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்தான் என்று நினைக்கிறேன் ...

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...