Thursday, May 12, 2011

ஒரு நடிகை நாடாள்கிறாள்



தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா கடந்த வாரம் தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளின் படி தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்றது புதிய சட்டப் பிரச்சினையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
1991 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக முதன்முதல் பதவியேற்ற ஜெயலலிதா தற்போது இரண்டாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே சி.இராஜகோபாலாச்சாரியார் (193739, 194952), எம்.ஜி.இராமசந்திரன் (197780, 198087) ஆகியோர் இரண்டுமுறை முதலமைச்சராக இருந்தார்கள். கலைஞர் கருணாநிதி (196976, 198991, 19962001) மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தார்.
1967 ஆம் அண்டின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தை ஆட்சிசெய்து வருகின்றன.
ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ஜெயராம் சந்தியா தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். இவர்களது பூர்வீகம் ஸ்ரீரங்கம்.
ஜெயலலிதாவின் தாயார் பிரபல நடிகையாக இருந்ததால், இவர் சென்னையில் தனது படிப்பை மேற்கொண்டார்.
சென்னை சேர்ச் பாக் கொன்வென்றில் படித்த இவர் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.யு.சி படித்தார்.மெட்ரிகுலேசன் பரீட்சையில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் தவிர ஆங்கிலம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசுவார்.
தாயாரின் சினிமா செல்வாக்கு காரணமாக ஜெயலலிதாவின்17 ஆவது வயதில் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. வெள்ளிவிழா படங்களின் இயக்குநர் ஸ்ரீதரின் படத்தில் ஜெயலலிதா முதன்முதல் அறிமுகமானார்.
வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். நிர்மலா, மூர்த்தி ஆகியோரின் பெயருடன் இன்றும் வெண்ணிற ஆடை என்ற பெயர் இணைந்துள்ளது.
வயது வந்தவர்களுக்குரிய படமாக வெண்ணிற ஆடை வெளியானதால் ஜெயலலிதாவால் அந்த படத்தைப் பார்க்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் திலகங்களின் பிடியில் தமிழ் சினிமா கட்டுண்டிருந்தபோது ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஜெயலலிதாவின் இரண்டாவது படம் இலட்சக்கணக்கான தமிழ் இதயங்களில் இடம்பிடித்த எம்.ஜி.ஆரின் படமாக வெளியானதால்எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஜெயலலிதாவின் மீதும் மதிப்பு வைத்தார்கள்.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா 28 படங்களில் கதாநாயகியாக நடித்தார். சுமார் ஐந்து வருடங்கள் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் மட்டும் நடித்ததால் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகின.
1970 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மஞ்சுளாவை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தியதால் எம்.ஜி.ஆர்ஜெயலலிதாவுக்கிடையே இருந்த சினிமா உறவு முறிவடைந்தது.
உலகம் சுற்றிம் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார். லதா, மஞ்சுளா இருவரும் அவருக்கு கதாநாயகிகளாக நடித்தார்கள்.
ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 கண்காட்சியில் உலகம் சுற்றும் வாலிபன் படம்பிடிப்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர் தன்னை ஒதுக்கிவிட்டு வேறு நடிகைகளை ஜப்பானுக்கு அழைத்துச் சென்றதைப் பொறுக்க முடியாத ஜெயலலிதா ஜப்பறீýதண் சென்று கண்காட்சியை பார்வையிட்டார்.
கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் சிவாஜியுடன் ஜெயலலிதா முதன் முதலில் ஜோடியாக நடித்தார். நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி என்ற பாடல் அந்தத் திரைப்படத்தில்ஆரம்பக்காட்சியாக அமைந்தது.
ஜெயலலிதா திரையுலகில் பிரபலமாக இருந்தபோது அவரின் தாயார் சந்தியா மரணமானார். 18 வருடங்கள் திரையுலகில் நிலைத்திருந்த இவர் 115 படங்களில் நடித்தார்.
அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை முதன்முதலில் பாடினார். அதன் பின்னர் பல படங்களிலும்பாடியுள்ளார்.
எபிசிங் என்ற ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்த இவர். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க முன் நாடகங்களில் நடித்தார். கதை, கவிதை, நாவல் என்பவற்றிலும் இவர் தனது திறமையைக் காட்டியுள்ளார்.
பரதம், ஓவியம், நடனங்களை முறையாக பயின்ற அவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடிகர் திலகத்தின் தலைமையில் நடைபெற்றது.
1965 ஆம் ஆண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க முதல் 1964 ஆம் ஆண்டு சின்னதே கொம்மே, மானே அலியா ஆகிய படங்கறில் நடித்தார்.
எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக அவர் அடையாளம் காணப்பட்டாலும் சிவாஜியுடன் நடித்த எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா அகிய படங்களின் மூலமே சிறந்த நடிகையெனப் பேசப்பட்டார்.
சினிமா உலகத்தை விட்டு விலகிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர் முன்னிலையில் 1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தார்.
ஜெயலலிதா கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கிடையில் அ.இ.அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். அரசியல் வாழ்வில் இவர் பெற்ற முதல் பதவி இதுவாகும்.
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாத அ.இ.அ.தி.மு.க மூத்த உறுப்பினர்கள் பலரது எதிர்ப்பையும் பொறுட்படுத்தாத எம்.ஜி.ஆர். 1984 ஆம் ஆண்டு கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவை நியமித்தார்.
இருவருக்குமிடையிலான உறவில் சில நேரங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தார்.
எம்.ஜி.ஆர்ன் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி பொதுமக்கள் மத்தியில் இவருக்கு பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருப்பதை உணர்ந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை அரசியலுக்கு இழுத்தார்கள். ஜெயலலிதா தலைமையிலும் ஜானகி தலைமையிலும் கட்சி பிளவுப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஜானகி முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இரண்டு அணிகளும் அ.இ.அ.தி.மு.க இரட்டை இலைச்சின்னம் தமக்குரியது எனத் தெரிவித்ததால் அந்தச் சின்னம் முடக்கப்பட்டு ஜெயலலிதா அணிக்கு இரண்டு கோழியும், ஜானகி அணிக்கு இரண்டு புறாவும் சின்னங்களாக வழங்கப்பட்டன.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 196 இடங்களில் போட்டியிட்ட கட்சி 26 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.
கருணாநிதி முதலமைச்சரானார். எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபைக்கூட்டத்தில் நடைபெற்ற ரகளையால் மனமுடைந்த ஜெயலலிதா சட்டசபைக்கு இனி வரமாட்டேன் எனக்கூறி சபையைவிட்டு வெளியேறினார்.
ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கிய போது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தனர். இரட்டை இலைச்சின்னம் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான கட்சிக்கு வழங்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ராஜூவ் காந்தி படுகொலை ஜெயலலிதாவுக்கு பாரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
ஜெயலலிதா முதல்வரானதும் திரைமறைவில் இருந்த உடன் பிறவா சகோதரி வெளிச்சத்தக்கு வந்தார். ஜெயலலிதாவின் சகல நடவடிக்கைகளும் சிசிகலாவின் வழிகாட்டலில் நடந்ததாகவே மக்கள் பேசிக்கொண்டார்கள்.
அவரின் காலத்திலே தான் கட்அவுட் கலாசாரம் தமிழகத்தில் முளைவிடத் தொடங்கியது. இவர் பயணம் செய்கையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முன்னும் பின்னும் சென்றது.
இவர் செல்லும் பாதையில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதால் பொது மக்களின் பயணத்துக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டன.
வளர்ப்பு மகன் என அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரனின் திருமணம் தமிழக மக்களைத் திகிலடையச் செய்தது. சிசிக்கலாவின் உறவினரான சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்திக்கும் நடைபெற்ற திருமணம் மக்களிடம் இவர் மீதிருந்த மதிப்பை இல்லாமல் செய்தது.
ஜெயலலிதாவின் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவரது ஆட்சி ஆடம்பர ஆட்சியென எதிர்க்கட்சிகள் வர்ணித்தன. 1991 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் ஜெயலலிதாவும் உடன் பிறவா சகோதரியும் கலந்து கொண்டார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் குளத்தில் நிராட முண்டியடித்ததில் பலர் மரணமானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தார்கள்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆடம்பர நாட்டத்தை முக்கிய பிரசாரமாக்கி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.
1991 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜீவின் மறைவால் உண்டான அனுதாப அலையால் வெற்றிபெற்ற ஜெயலலிதா தனது வெற்றிக்கு ராஜீவின் மரணம் காரணம் அல்ல எனக் கூறினார்.
காங்கிரஸ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரவிரும்பியபோது மூப்பனார் தலைமையில் தமிழக காங்கிரஸ் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமானது.
ஊழலுக்கு எதிரான மூப்பனார். கருணாநிதி ஆகியோர் பிரசாரம் செய்தபோது தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ரஜினியும் இவர்களுடன் இணைந்துகொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதா தேர்தலில் தோல்வியுற்றார். ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டான்சி நிலபேர ஊழல் வழக்கு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், கலர் ரி.வி. ஊழல் வழக்கு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு, அந்நிய செலாவணி மோசடி வழக்கு உட்பட பல வழக்குகள் ஜெயலலிதா மீது தொடரப்பட்டன.
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் ஜெயலலிதா நிரபராதியென விடுதலை செய்யப்பட்டார். ஆனால் டான்சி நில பேர ஊழல் வழக்கிலும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்கிலும் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை ஆட்சேபித்து தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கல்லூரி மாணவிகள் நால்வர் பஸ்ஸூடன் சேர்த்து எதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் அவருக்கு முறையே இரண்டு ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியிருந்த போதிலும் இந்த முறை தேர்தலுக்காக ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இதே வேளை இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் மேலதிக தொகுதிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என்ற சட்டத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிந்து கொண்டே சட்டத்தை ஏமாற்ற முயற்சித்து அப்பாவி மக்களிடம் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவுடன் முன்னர் கூட்டனி வைத்துக் கொண்ட வைகோ, ராமதாஸ் ஆகியோர் கருணாநிதியுடன் இணைந்தார்கள்.
கருணாநிதியுடன் துணையிருந்த மூப்பனார் ஜெயலலிதாவிடம் சரண்புகுந்தார். ராமதாஸ் மீண்டும் ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்தார். வைகோ கடைசி நேரத்தில் கருணாநிதியின் கையை விட்டு தனியாகச் சென்றார்.
ஜெயலலிதாவின் கூட்டணியின் உபயத்தால் அ.இ.அ.தி.மு கழகம் தனிபெரும்பான்மை பெற்றது.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பதவியேற்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளி ஒருவரே தன் மீது வழக்கு நடத்தும் புதிய அத்தியாயத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
பேரறிஞர் அண்ணாத்துரையின் சட்டம் ஒரு இருட்டறை என்ற வாசகம் ஜெயலலிதாவின் வாழ்வில் ஒளியேற்றவுள்ளது.
ஏ.ரவிவர்மா
தினக்குரல்,புதன்வசந்தம் 23/05/2001

No comments: