Tuesday, May 7, 2013

வடக்கே போகும் மெயில் வரவேற்புரை வதிரி.சி.ரவீந்திரன்.


எழுத்தாளர்,ஊடகவியலாளர்,ஓவியர் திரு.சூரன்..ரவிவர்மா அவர்களின் வடக்கே போகும் மெயில் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

 இன்றைய விழாவில் இரு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.ஒன்று நூல் வெளியீடு. மற்றையது காந்தண்ணா என்று நான் அன்புடன் அழைக்கும் அமரர் எழுத்தாளர் ராஜ ஸ்ரீ காந்தனின் நினைவுப்பேருரை ஆகும்.
 இன்றைய விழாவுக்குத்தலைமை வகிக்கும் மூத்த ஊடகவியலாளர் திரு.வீ.தேவராஜ் அவர்களைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை. அவர் அனைவருடனும் மிக நன்றாகப்பழகும் மிகத்தெரிந்தமுகம். பத்திரிகையாளன் என்ற வகையில் நடு நிலை வகிப்பவர்.அமரர் திரு ராஜகோபால் அவர்களைச்சந்திக்கும் போதெல்லாம் இவரையும் நான் கண்டுள்ளேன். ரவிவர்மா, இவரது ஆசிரியர் குழாமில் பணியாற்றியவர்.அந்த வகையில் திரு. தேவராஜ் அவர்கள் விழாவுக்குத்தலைமை வகிப்பது மகிழ்வைத்தருகிறது.அவருடைய வரவு நல்வரவாகுக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

  வாழ்த்துரை ஆற்ற வந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் இங்கு வரவில்லை அவரையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நூல் அறிமுக உரையை வழங்கும் என் அன்புக்குரிய பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள்கல்வியல் பீடத்தைச்சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.இலக்கியத்தை நன்கு கற்றவர்.இலக்கணத்தை பண்டிதர் வீரகத்தியிடம் படித்தவர்.எனவே அவரது நூல் அறிமுக உரையைக்கேட்பதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம்.பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களையும் வரவேற்பதில் நான் மகிழ்வடைகிறேன்.

 இன்றைவிழாவில் முதல் பிரதியைப் பெறுவதற்காக புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். இலக்கிய உலகுக்கு பெரும் மணியாகச்சேவையாற்றும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களை நான் வரவேற்பதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

   கருத்துரை ஆற்ற வந்திருக்கும் மூத்த ஆய்வாளர் ,விதந்துரையாளர் திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்களையும் எல்லோரும் அறிவோம்.
எல்லாத்திறமைகளும் கொண்ட இவர் பெருமை இல்லாத மனிதர்.மூத்த பிரஜையான இவர் தன்னை சிவா என்று அழையுங்கள் என எல்லோரயும் கேட்டுக்கொள்வார்.சிவா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

ஊடகத்துறையில் இளம் சிங்கம்.இலத்திரனியல் ஊடகத்துறையின் இளம் சிங்கம்.எதை எடுத்தாலும் மிக நேர்த்தியாகச்செய்யவல்லவர்.பல இலத்திரனியல் ஊடகங்களை வளர்த்துவிட்டவர்.திரு.வாமலோஷன் அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

  நூலாசிரியர் ரவிவர்மா அவர்களின் தந்தை திரு ஏகாம்பரம் அவர்கள் ஒரு சைவ சீலன்.தந்தையார் திரு சூரன் அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்.சிறந்த கவிஞர். சுதந்திரன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.சிறந்த மரபுக்கவிதையாளர்.மிகச்சிறந்த ஓவியர்.கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி,அல்வாய் ஸ்ரீ லங்கா வித்தியாசாலை,ஆகியவற்றின் கிரீடத்தை வரைந்தவர். மாத்தளை பாக்கியம் வித்தியாசாலையின் கிரீடத்தையும் இவரே வடிவமைத்தார்.
 
  அவர் மிக அமைதியான மனிதர்.மிக மெதுவாகப்பேசுவார்.நகைச்சுவையாக்கதைகூறுவார்.அமரர் திரு.ஏகாம்பரம் அவர்களின் புதல்வரான ரவிவர்மா அவர்கள் இன்னமும் ஒளி வீசிப்பிரகாசிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.

  வரவேற்புரையில் யாரையோ குறிப்பிடாது விட்டு விட்டேன் போலிருக்கிறது.நினைவுப்பேருரை ஆற்றவந்த நண்பன் மேமன் கவி அவர்கள், எந்த நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்த்தவேண்டும் என்ற கொள்கை உடையவர்.கவிதைத்துறையில் சாதித்த இவர்,ஆய்வுரை,விமர்சனம் என மேன்மை பெற்றுள்ளார்.அப்படியான ஈழத்து எழுத்துக்களை நன்கறிந்த நண்பர்,கவிஞர் திரு மேமன் கவி அவர்களையும் நான் வரவேற்கிறேன்.ராஜ ஸ்ரீ காந்தனுடன் இணைந்துமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயலாற்றிய  திரு. மேமன் கவி அவர்கள் இன்றைய நினைவுப்பேருரையாற்றுவது மிகவும் பொருத்தமானது என்பதை நான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.

  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய திருமதி. திலகா மகேஸ்வரன் அவர்களையும் நான் வரவேற்கிறேன்.இன்று இன்றைய நிகழ்ச்சிகளைத்தொகுத்தளிக்கும் தென்றல் வானொலி பணிப்பாளரும் வானொலி மேடை நடிகருமான டவுட்டு கணேசன் திரு இராஜபுத்திரன் யோகராஜா அவர்களையும் வரவேற்று, இங்கு வந்துள்ள அனைவரையும் வருக ருக என வரவேற்கிறேன்.
 நன்றி.வணக்கம்.

No comments: