Sunday, September 29, 2013

அசாத்தியம்

 புராணத்துச் சூரர்கள்
புரியாமலே வாசிக்கப்பட்டவர்கள் - என்னால்
அன்றோ !
கதைகேட்கும் வயதெனக்கு
கதாபாத்திரங்கள் மீது
கவனம் கிடையாது.
கால ஓட்டம் சூரர்களை
என்னுள் புரியவைத்தது.
அக்கிரமம்ஆணவம்
திமிர்அடக்குமுறை
இவற்றின் குறியீடுகளாக !
அவர்கள் நிஜமோ ? கற்பனையோ ?
இன்னும் எம்மோடு உலாவருகின்றார்கள் !
இது தற்போதைய எனது தெளிவு.
எப்படியோ சூரர்கள்
பேசப்பட்டார்கள்
அதுவும் கிழிபட்டே !
கிழித்தவர்கள்
சாமனியர்கள் அல்லர்
கடவுளர்கள் !
இங்கோ . . . . .
ஓர் எதிர்மறைச் சூரன்
கற்பனையல்ல
நிஜத்தின் நிஜம் !
வதிரி
வடபுல யாழ் மண்ணில்
ஓர் சிற்றூர்
இம்மண்ணோ
சாதிய ஒடுக்குமுறையின்
விளைநிலம் !
இதற்குள் அகப்படாது
நிமிர்ந்து நின்றது வதிரி !
இது அதன் தனித்துவம்
இதுவே இச்சூரனைப்
பிரசவித்துப் பாலூட்டித்
தாலாட்டியது .
இவ்வூட்டம் சூரனைச்
சொந்த மண்பற்றிச் சிந்திக்கவும்
நேசிக்கவும் வைத்தது.
இத்தனைக்கும் பெரும்
மேதாவிலாசம் அற்றவர்
இவர் தன்னை ஓர்
சமூகப் போராளியாகிச்
செய்த முதல் யுத்தம்
ஆண்டவர்களோடு அல்ல
ஆலய மிருக பலியோடு
துணிந்தார் ! தலையிட்டார் !
தலை கொடுத்தார் ! வென்றார் !
அன்றே அறியப்பட்டார்
சூரன்.
அடுத்த யுத்தம் ஆண்டவர்களோடு.
ஆம். அப்போது எம்மை
ஆண்டவர்கள் ஐரோப்பியர்கள்
அந்த எஜமானர்களின்
கையில் இந்துமதம்
மெது மெதுவாகத்
தன்னை இழந்தது
கல்வி கையுறையாகியது
ஆறுமுகம் ஆபிரகாம் ஆனார்.
கந்தசாமி கபிரியல் ஆனார்.
கொதித்த சூரனின் குருதிக்குள்ளிருந்து
கொப்பளித்ததுதான்
வதிரி தேவரையாளிச்
சைவ வித்தியாசாலை !
தகர்ந்தது
பிற்படுத்தப்பட்டவர் என்கின்ற
எமது கல்வித்தடை ! !
இங்கு சூரன் ஓர் கல்வி
விடுதலைப் போராளி
இவையாவும்
கலாநிதி சிவத்தம்பி , சிவலிங்கராஜா
கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி , கிருஷ்ணாழ்வார்
டானியல் உள்ளிட்ட
பல்துறை வித்தகர்கள்
சுட்டிக்காட்டிய
விவரணப் படங்கள் !
இவை இன்றும் எம் மனத்திரையில்
ஓடிக் கொண்டிருக்கின்றன
இவ்வாறு மனத்துள் வாழும் சூரன்
உதயமாகினான் சிலைவடிவில்
மிகப்பொருத்தமாக அவர் நிறுவிய
கல்லூரி வளாகத்து முன்றலில் !
ஆனால். . . . . . .
சூரர்களுடைய வரலாறுகளோ
கிழிபட்டே புகழடைந்தவை .
இங்கும் விதிவிலக்கில்லை .
புராணங்களில் கிழிபட்டுப்
புகழ் பெற்றார்கள்
இங்கு புகழ் பெற்றுக் கிழிபடுகின்றார் ! ! !
அதுவும் சுயங்களால் !
ஆக சூரர்கள்
கிழிபடவே உதயமானவர்களா . . . . . . . . ?
ஆனாலும் உண்மையொன்று
சூரிய ஒளியோ
தடுப்புக்குள் அடங்காது
தடுப்புப் போடுதலும்
அசாத்தியம்.

ஆக்கம்:-வதிரி.விஷ்ணுப்ரியா

No comments: