Monday, April 7, 2014

பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழகத்தின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் தலைவர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் தமது கட்சி வேட்பாளர்களுக்கான பிரசாரத்தை முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ளனர். மத்திய அரசில் இடம்பிடிக்கவேண்டும் என்ற நோக்கமே பிரசாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது. தமது கட்சி வெற்றிபெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக புதிய உத்திகளுடனான சூறாவளிப் பிரசாரம் களைகட்டியுள்ளது. 
ஜெயலலிதாவின் பிரசாரம் அதிஉச்சத்தில் உள்ளது. ஹெலியில் பறந்து பறந்து பிரசாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் காருக்கு கும்பிடு போட்ட அமைச்சர்கள் ஹெலியைக் கும்பிடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தையும், காங்கிரஸையும் மிக மோசமாகத் தாக்கிப் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா. மோடியை விமர்சனம் செய்வதைத் தவிர்த்துள்ளார். தனது அரசியல் எதிரியான அழகிரியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஸ்டாலினையும்  கருணாநிதியையும் எதிர்த்து அழகிரி அறிக்கை விடுவதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதிப்படி அழகிரியை நண்பனாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. 
இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதாவின் ~நாப்பதும் நமக்கே| என்ற கோஷம் சற்று அடங்கியுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ ஆகிய தமிழகத் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜெயலலிதா, மோடியை எதிர்ப்பதற்குப் பின்னடிக்கிறார். நாப்பதும் நமக்கே என்ற ஜெயலலிதாவின் பேராசையில் இடிவிழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடையும் தொகுதிகள் பற்றிய விவரத்தை உளவுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. 15 முதல் 20 தொகுதிகளில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் என்று அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றிபெறுவது மிகவும் சிரமமானது. 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குவங்கியின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்று ஜெயலலிதா நம்புகிறார். மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்குத்தான் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பது வழமை. ஆகையால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வாக்கு விகிதத்தில் சரிவு ஏற்படும் நிலை உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடுகின்றன. கட்சிகளின் வாக்கு வங்கியைவிட வேட்பாளர்களின் செல்வாக்குத்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகிறது. 
அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஆட்சி அமைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், மத்திய அரசுக்கு ஆதரவு வழங்க ஜெயலலிதாவும் கருணாநிதியும் தயாராக உள்ளார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கருணாநிதிக்குத்தான் அதிக சந்தர்ப்பம் கிடைக்கும். 10 வருடங்களுக்கு முன்னர் தேநீர் விருந்தின் மூலம் பாரதீய ஜனதா அரசை குப்புற வீழ்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. அப்போது பாரதிய ஜனதாக் கட்சிக்கு முட்டு கொடுத்தவர் கருணாநிதி. அந்தப் பாசம் இப்போது இல்லை. அன்ய பாரதீய ஜனதாக்கட்சி வேறு. இன்ய பாரதீய ஜனதாக்கட்சி வேறு என்று தனது காங்கிரஸ் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

உடல்நிலை காரணமாக வெளியூர்ப் பயணங்களை கருணாநிதி தவிர்த்துள்ளார். எனினும், சவாலாக தொகுதிகளில் பிரசாரம் செய்ய் உள்ளார் . திராவிட முன்னேற்றக் கழகப் பிரசாரம் ஸ்டாலினின் தலையில் வீழ்ந்துள்ளது. கருணாநிதியின் கையில் இருந்த கடிவாளம் ஸ்டாலினின் கைகளுக்குச் சென்றுள்ளது. வேட்பாளர் தெரிவு, கூட்டணிப் பேச்சு அனைத்திலும் ஸ்டாலினின் விருப்பமே முடிவானது. 
தமிழகம் எதிர்நோக்கியுள்ள சட்டமன்றத் தேர்தலாகவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குகிறார் ஸ்டாலின். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றிபெறவேண்டும் என்ற துடிப்புடன் பிரசாரத்தை மேற்கொள்கிறார். தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பேசிவருகிறார். ஸ்டாலின், மத்திய அரசில் தாம் இருக்கும்போது தமிழகம் கண்ட வளர்ச்சியை பட்டியலிட்டு விளங்கப்படுத்தி வாக்குக் கேட்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன்தான் அடுத்த மத்திய ஆட்சி அமையும் என்று தெளிவுபடுத்துகிறார்.

அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. சந்தர்ப்பவசத்தால் அவரது குடும்பத்திலிருந்து ஓர் அரசியல் எதிரி உருவாகிவிட்டார். ஜெயலலிதாவைப் போலவே ஸ்டாலினையும் தனது எதிரியாக நினைக்கிறார் அழகிரி. அதிரடி அரசியலின் மூலம் எதிரிகளைக் கதிகலங்கவைத்த அழகிரியை கதிகலங்க வைத்துள்ளார் ஸ்டாலின். கருணாநிதியைப் பின்னுக்குத் தள்ளிய ஸ்டாலின் தோல்வியடையவேண்டும் என்று அழகிரி விரும்புகிறார். 
ஸ்டாலினின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தால் அடுத்த தலைவராகத் தான் பரிணமிக்கலாம் என்று அழகிரி கனவு காண்கிறார். கழகத்தினுள் ஸ்டாலினின் கை ஓங்கியுள்ளதால், அழகிரியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக ஸ்டாலினிடம் சரணடைகிறார்கள். ஸ்டாலினின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தால் அடுத்த நிமிடம் அவர்கள் தனது பக்கம் வந்துவிடுவார்கள் என நம்புகிறார் அழகிரி. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நட்சத்திரப் பட்டாளங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தன. நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் தனி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். காங்கிரஸ் அரசின் தவறுகளுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாது சுதந்திரமாக தேர்தல் பிரசாரத்தை நடத்துகிறார் ஸ்டாலின். 

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகப் பிரசாரம் செய்கின்றன. தனி  ஆளாக விஜயகாந்த் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். வைகோ வீட்டிற்குச் சென்ற விஜயகாந்த் தமது பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தலைவர்கள் இருவரும் ஒன்றானதால் தொண்டர்களும் வெற்றிக்குப் பாடுபடுவார்கள். வைகோவின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் விஜயகாந்தின் தொண்டர்களும் வைகோவின் தொண்டர்களும் இணைந்து செயற்படும் நிலை தோன்றியுள்ளது. 
மிகுந்த பிரயாசையின் மத்தியில் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இடம்பிடிக்க பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை. விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் சேர்வதில்லை என்ற முடிவில் இருந்த தாஸின் மனதை மாற்றியவர் மகன் அன்புமணி. குந்தளவு வாக்கு வங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியால் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியாது என்பதை உணர்ந்த அன்புமணி, தகப்பனின் மனதைக் கரைத்து கூட்டணிக்குச் சம்மதிக்க வைத்தார்.
எதிர்பார்த்த தொகுதிகள் கை விட்டுப்போனதால் பிரசாரத்துக்குப் போகாமல் ஒதுங்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் பிரசாரத்துக்குச் சென்றால்தான் வெற்றிபெற முடியும்  என்பதை பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். கூட்டணிக்குள் பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ராமதாஸின் பிரசாரத்திலேதான் உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச். ராஜா ஆகியோர் தமது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்கின்றனர். மோடி ராஜ் தாத் சிங், வெங்கையா நாயுடு போன்ற பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தமது தொகுதியில் பிரசாரம் செய்யவேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி பிரசாரம் செய்யவேண்டும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். 
பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைவர்கள் தமது தொகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டும் என வைகோ, விஜயகாந்த், அன்புமணி ஆகியோரும் விரும்புகின்றனர். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யாது ஒதுங்கி இருக்கின்றனர். இடதுசாரிகள் தாம் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் கடுமையான பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
கட்சித் தலைவர்களின் சூறாவளிப் பிரசாரங்களை பொறுமையாகக் கேட்டும் மக்கள் தமது நாள் வரும்வரை அமைதியாக இருக்கிறார்கள். 

வர்மா 
சுடர் ஒளி 06/04/14

No comments: