Wednesday, April 9, 2014

திசைமாறும் அரசியல் அரங்கம்

இலங்கையில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.ம.சு.மு. வெற்றிபெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதற்கு விதிவிலக்காக வடமாகாணம் உள்ளது என்பதனால் பலத்த இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றில் எதிர்பார்த்ததுபோலவே ஆளும் ஐ.ம.சு.மு. வெற்றிபெற்றது. 
பிரசாரம் இல்லாது வெற்றிபெறும் வல்லமை ஐ.ம.சு.முக்கு உண்டு. என்றாலும், தேர்தல் என்றால் பிரசாரம் தேவை என்பதனால் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்ட ஐ.ம.சு.முவின் வெற்றி எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே உள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 17 ஆசனங்களை ஆளும் கட்சி இழந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

வாக்குறுதி, தேர்தல் விஞ்ஞாபனம் எதுவுமில்லாது  புலிகளை அழித்த அரசு என்ன மாயையில் இதுவரை வெற்றிபெற்றுவந்த அரசுக்கு இரண்டு மாகாணசபைத் தேர்தல்களும் சற்றுப் பின்னடைவைக் கொடுத்துள்ளன. அபிவிருத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது நாடு. அதிவேக  விரைவு நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய வீதிகள் என்பன வெற்றியைத் தேடிதரும் என அரசு நம்பியிருந்தது. 
விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, சர்வதேச விளையாட்டரங்கு, சர்வதேச விமானநிலையம் என அம்பாந்தோட்டை அபிவிருத்தி கண்டுள்ளது. இந்த அபிவிருத்தியின் பின்னணியில் நடந்த தேர்தலில் கடந்த முறையைவிட இம்முறை குறைந்த வாக்கு விகிதத்தையே ஆளும் கட்சி பெற்றுள்ளது. 


ஐ.ம.சு.மு. மேல் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 64.73 சதவீத வாக்குகளைப் பெற்றது. இம்மு 53.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. தென் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 67.88 சதவீத  பெற்றது. 58.06 சதவீத வாக்குகளை இம்முறை பெற்றது. யுத்தம் முடிந்து மக்கள் சுதந்திரமாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்கள் என அரசு பரப்புரை செய்துவருகிறது. ஆனால், மேற்கும் தெற்கும் அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

ஆட்சியைப் பிடிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கையில் எடுத்தார். சந்திரனுக்குப் போய் என்றாலும் இலவச அரிசி தருவேன் என ஆட்சிபீடம் ஏறினார் அவரின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. கொடுமையான யுத்தத்துக்கு முடிவுகட்டப்போவதற்காக சமாதானப்புறாவாக அரியணை ஏறினார் அவர்களின் மகள் சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க. சந்திரிகாவின் சமாதானப் பாதையில் பயணத்தைத் தொடர புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அசைக்கமுடியாத தலைவராக விளங்குகிறார். 

அரசை வீட்டுக்கு அனுப்ப ரணிலும் அவரது சகபாடிகளும் பல தடவைகள் நாள் குறிப்பிட்டும் அவர்களது எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐ.ம.சு.மு.க்கும் தலையிடியைக் கொடுக்கும் மூன்றாவது சக்தியாக உயர்ந்த ஜே.வி.பி. பலமான எதிர்ப்புகளைக் காட்டிவிட்டு ஓய்ந்துவிடுகிறது. புலிகளை இல்லாமல் செய்த யுத்த வீரர்கள் என்று சிங்கள மக்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட சரத் பொன்சேகா ஓரிரவில் தனது பெருமைகள் எல்லாவற்யும் இழந்தார். அரசியல் அரங்கில் தன்னை முழுமையாக நிறுத்துவதற்கு மிகுந்த பிரயாசைப்படுகிறார்.

தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் புதிய தெம்பை அளித்துள்ளன. சரத் பொன்சேகாவும் தன்னை ஓர் அரசியல் தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார். கணிசமான வாக்குகளையும் அங்கத்தவர்களையும் பெற்றுள்ளார். மூன்று சிங்கள அரசியல் கட்சிகளும் மூன்று திக்கில் நின்று தேர்தலைச் சந்தித்தால் அது ஆட்சி பீடத்திலுள்ள ஐ.ம.சு.முக்கு இலாபமாக இருக்கும். மூன்று கட்சிகளும் ஒன்றிணையாவிட்டால் அவர்கள் நினைப்பது நிவேறாமல் போய்விடும். 
அரசியல் அரங்கில் பல காட்சிகளைக் கண்டு அனுபவப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பை ஜே.வி.பி. வெளியிடுவது சாத்தியமில்லை. புதிய அரசை அமைப்பதற்கு பொதுமக்கள் தயாராக இருந்தாலும், அரசியல் கட்சிகள் இப்போதைக்குத் தயாராக இல்லை.




தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் பார்வை மேல் மாகாணத்தையே நோக்கியது. மேல் மாகாணத்தில் சிங்கள மக்கள் சிறுபான்மையாகிவிட்டனர் என்ற வதந்தியை தேர்தல் பொய்யாக்கியுள்ளது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஆட்சிசெய்யும் ஐ.ம.சு.முவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதை மேல் மாகாணசபைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. ஐ.ம.சு.முவில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்குகள் சிதறவில்லை. தமிழ் வாக்காளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸும் தனித்தனியாகக் களம் கண்டன. இரண்டு கட்சிகளிலும் மூன்று வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். அவை இரண்டும் அமைச்சர்களின் கட்சிகள் என்பதனால் அரசுக்கு எதிரான அணியில் அதன் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது.

கூட்டணி சேராது தனித்துத் தேர்தலைச் சந்தித்த மனோ கணேசனின் கட்சி உறுப்பினர்கள் இருவர் வெற்றிபெற்றனர்.  அரசின் பங்காளியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தனியாக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. 
மேல் மாகாண மக்களும், தென் மாகாண மக்களும் தமது மனதில் இருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டனர். எதிர்க்கட்சியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கை அறியும் களமாகவே தேர்தல்களை நோக்குகின்றனர். இவர்களின் பிரிவினையால் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படப்போவதில்லை.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் 54 பேர் தோல்வியடைந்துள்ளனர். பிரமில் கொஸ்தா, ரி.ராஜேந்திரன், பி.ராம், கலாநிதி குமரகுருபரன், நௌசர் பௌசி ஆகியோர் தோல்வியடைந்தவர்களில்  முக்கியமானவர்கள். 

வானதி
 சுடர் ஒளி 06/04/14  

No comments: