Thursday, April 7, 2016

ஆசை வார்த்தைகளால் கடனாளியாகும் அப்பாவிமக்கள்


வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருந்தால் வாழ்வு சிறப்பாகும். சிறுசிறு  சேமிப்பின் மூலம் மக்களைக்  கைதூக்கிவிட்ட  வங்கிகள் இன்று மக்களை கடன்காரராக்கியுள்ளது. போட்டி போட்டுக்கொண்டு பெருகிவிட்ட நிதி நிறுவனங்களும் தம் பங்குக்கு மக்கள் மீது கடன் சுமையை ஏற்றியுள்ளது. செல்வந்தர்களும் வியாபாரிகளும் வங்கிகளால் பெரும் பயன் பெற்றனர்.  வறுமைக் கோட்டின்  கீழே வாழும் மக்கள் வங்கியின் படிகளை மிதிக்க தகுதி இல்லாத காலம் ஒன்றிருந்தது. இன்று வங்கிக் கணக்கு இல்லாதவர்களைக் காண்பது அரிது. மக்கள் வங்கி,இலங்கை வங்கி ஆகிய அரச வங்கிகள் மட்டும் முக்கியமான நகரங்களில் நாடெங்கும் கிளைகளை வைத்திருந்தன. ஒருசில தனியார் வங்கிகள் முக்கிய நகரங்களில் மட்டும் தமது கிளைகளை திறந்து சேவை செய்தன. இன்று அரச வங்கிகளும் தனியார் வங்கிகளும்  போட்டி போட்டுக்கொண்டு நாடெங்கும் தமது கிளைகளைத் திறந்து  வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விளம்பரம் செய்கின்றன. வங்கிகளுக்கு இணையாக நிதிநிறுவனங்களும் மக்களைக் கவரும் வகையில் விளம்பரம் செய்கின்றன.

ஒரு நகரத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பவே வங்கிக் கிளைகள் இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதிகள் மீறப்பட்டு வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. சில நகரங்களில் ஒரு வங்கியின் இரண்டு கிளைகள் உள்ளன. வங்கிகளில் அடர்த்தி என்பது ஒரு இலட்சம் மக்களுக்கு எத்தனை வங்கிகள் இருப்பது என்பதாகும். சில நகரங்களில் இது மீறப்பட்டுள்ளது. போருக்கு பின்னர் வடபகுதி மக்களின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. வடக்கில் சராசரியான குடும்பம் ஒன்றுக்கான  கடன் சுமையின்  அளவு 52000 ரூபாவிலிருந்து  194,000 ரூபாவாக  அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜின மகேந்திரன்   கிளிநொச்சியில் நடந்த வங்கி திறப்புவிழா ஒன்றின் போது கருத்து தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு  வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 வீதமாக  இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு இல் 118 வீதமாக  வளர்ந்து 21.6 வீதம்  அதிகரித்திருக்கின்றது.   மேல் மாகாணத்தை விட அதிகளவிலான வங்கிகள் வட மாகணத்தில் இருக்கிறது.   வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு  புற்றீசல்போல் நிதி நிறுவனங்களும் வட பகுதியில் முளைத்துள்ளனர். பணப் பரிமாற்றம், கொடுக்கல், வாங்கல்,  வியாபார விவசாயக் கடன் என்பனவற்றில் அக்கறை காட்டிய வங்கிகள் காலப்போக்கில் நகை அடைவு லீசிங் என்பனவற்றின் பக்கம் கவனத்தைத் திருப்பின. ஒரு பவுண் நகைக்கு அதிக பணம், குறைந்த வட்டி என்ற விளம்பரத்தால் கவரப்பட்ட மக்கள், நகை,வீடு, காணி  என்பனவற்றை அடைமானம் வைத்தார்கள்.காலப்போக்கில்  அவற்றை மீட்க முடியாது ஏலத்தில் விலை போவதை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

இளைஞர்களைக் கவரும் வகையில்  லீசிங்கில் மோட்டர் சைக்கிள் பெறலாம் என்ற விளம்பரத்தால் பல மோட்டர் சைக்கிள்கள் விலைப்பட்டன. லீசிங் பணத்தைக் கட்ட முடியாததால் சிலர் திருடனாக மாறினர்.  விபத்தில் சிலர் மரணமானார்கள்.சிலர் அங்கவீனமானார்கள். ஆட்டோ, சாமான்களை ஏற்றி இறக்க வசதியான சிறு வாகனம் என்பனவற்றையும் லீசிங்கில் வாங்கியவர்கள் இன்று திண்டாடுகிறார்கள். பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களின் தலையில் பொருட்களை சுமத்துவார்கள். எதிர்பார்த்த இலாபம் கிடைக்காத போது வட்டி மட்டுமல்லாது முதலைக் கட்டமுடியாது வாகனத்தைப் பறிகொடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
  வடமாகாணத்தில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. அங்குள்ள மக்களின் கடன் சுமை அதிகரித்ததே தவிர அங்குள்ள மக்களின் வாழ்வில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அளவுக்கு அதிகமான கடன் வழங்கப்பட்டும் அங்குள்ள  இளைஞர்கள் தொழில் இன்றி தவிக்கின்றனர். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அதிகரித்தது அவற்றின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துகின்றது. வர்த்தகர் அல்லது தனி நபர் கடனை மீளச் செளுத்துவரா என்பதை  ஆராய்ந்தே   கடன் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் இந்த விதி முறை மீறப்படுகிறது.  கடன் பெற்றவர் உரிய தவணையில் பணத்தை செலுத்த தவறும் போது பிணைக்  கையெழுத்துப் போட்டவர்கள் பலிக்கடாவாகிறார்கள். வங்கிக்குச்  செல்லும் பிணையாளியின்  சம்பளப்பணம் அபகரிக்கப்படுகிறது.


அடைய வேண்டிய கடன் இலக்குபோட்டித்தன்மை கூடிய வங்கி துறையில் அடைய வேண்டிய பதவி உயர்வு ,சலுகைகள்அந்தஸ்துக்காக பெறவேண்டிய விருது  என்பன மனிதாபிமானத்தையும் மறந்து வங்கியாளர்கையும் இந்த பொறிக்குள் சிக்க வைத்திருக்கின்றது  மக்களின் நம்பிக்கைக்குரிய நிதி ஆலோசகராக இருக்க வேண்டிய வங்கிகள், அவர்களுக்கு தகுந்த வழிகாட்டியாக சேவை செய்ய வேண்டிய கடப்பாட்டினை மறந்து,   இலாப நோக்குடன் செயற்படுவது கண்டிக்க வேண்டியதாகும்

வடபகுதி வர்த்தகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் நிதி முகாமைத்துவம் சம்பந்தமான அறிவும்,கடன் வாங்குதல்,மீளளித்தல் போன்றவற்றில் ஒழுக்கமும் தளர்ந்திருக்கின்றது என்பது மக்களின் கடன் சுமை அதிகரிக்க ஒரு காரணம் மட்டுமே.கடனாளிகள் ஆகும் மக்களின் பின்னணியில் உள்ள அரசியலை விளங்கிகொள்வதும்,அவர்களை கடன் சுமையில் இருந்து விடுவிப்பதும் இன்றைய சூழலில் கட்டாயமானது ஆகும்.
வர்மா
தளம் நியூஸ்.கொம்


No comments: