Wednesday, April 6, 2016

தமிழ் மக்களின் மண்ணில் புத்தரின் பெயரால்.......


இந்து சமுத்திரத்தின்  முத்தான இலங்கையின் எழில் மிகு அடையாளம் புத்தர்சிலைகள் என  சிங்கள ஆளும் வர்க்கம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.  தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் திடீரென தோன்றும் புத்தர் சிலைகளினால் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடேயான முரண்பாடு அதிகரிக்கிறது. தமிழ்  இளைஞர்கள்  ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க முன்பே திட்டமிட்ட  சிங்களக்குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. சிங்கள மக்கள் குடியேறும்போது கூடவே புத்தர்சிலைகளும் முளைத்துவிடுகின்றன.

வவுனியாவில் திடீரென உருவான புத்தர் இன்று வலுவான நிலையில் இருக்கிறார். திருகோணமலை பஸ் நிலையத்தில் இரவோடிரவாக வந்திறங்கிய புத்தருக்கு இராணுவக்காவல் போடப்பட்டது. பல பிரச்சினைகளின் பின்னர் இன்று அவர் அமைதியாக இருக்கிறார்.மன்னாரில் திருக்கேதீஸ்வரத்துக்குச் செல்லும் வீதியில்  மறைப்புகளுடன் தோன்றிய புத்தர் பின்னர் காணமல் போய்விட்டார். யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ முகாம்களின் முன்னாலும் பொலிஸ் நிலையங்களின் முன்பும் கண்ணை மூடிக்கொண்டு புத்தர் இருக்கிறார். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளில் இருந்த பிள்ளையார் சில இடங்களில் காணாமல் போய்விட்டார். அந்த இடத்தை புத்தர் பிடித்துவிட்டார். சில அணைக்கட்டுகளில் பிளையாரைவிட பெரியளவில் புத்தர் புத்தர் நிலைகொண்டுள்ளார்.

  நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையில் பாரிய புத்தர் சிலையொன்றை அமைக்க நாகவிகாராதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.தென்னாசியாவிலேயே மிக உயரமான புத்தர் சிலையை இங்கு அமைப்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச்சிலை விவகாரம் தமிழ் சிங்கள மக்களிடையே முறுகலை உருவாக்கும் நிலை தோன்றியுள்ளது.விண்ணை முட்டும் புத்தரை நிர்மாணித்தால்தான் புத்தர் திருப்தியடைவர் என விகரதிபதி நினைக்கிறார். உரிய அனுமதிபெறாது புத்தர் சிலை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  இதற்காக பெறப்பட வேண்டிய சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சின் அனுமதி என்பன உரிய முறையில் பெறப்படவில்லை..இதன் காரணமாக திணைக்களங்களின் அனுமதி கிடைக்கும் வரை புத்தர் சிலை நிர்மாணத்தை யாழ். அரச அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.
தற்போது யாழ். அரச அதிபரின் அனுமதி மறுப்பை செய்தியாக்கி, அதன் மூலம் இனவாதத் தீயொன்றை உருவாக சிலர் முயற்சி செய்கின்றனர்.
  புத்தர் சிலை நிர்மாணத்துக்காக கடல் பகுதியில் சுமார் அரை ஏக்கர் பிரதேசம் மண்நிரப்பப்படவுள்ளதால் அப்பகுதியின் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே   புத்தர் சிலை நிர்மாணம் தொடர்பில் எதிர்கொள்ளப்பட்டுள்ள தடைகளை நீக்கி, அதனை முன்கொண்டு செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனம் திரும்பியுள்ளது.இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியிருப்பதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அரசாங்கத்தில் பாரிய புத்தர்சிலை அமைக்கப்படவில்லை என்றால் அது அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம்  என அரச தரப்பு கருதுகிறது. தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. யுத்தம் நடைபெற்ற போதும் யுத்தம் முடிந்த பின்னரும்  உருவான இராணுவ முகாம்களால் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். பாதுகாப்பு வலயம் என்ற சொல்லின் உக்கிரத்தால் சொந்த இடத்தைப் பார்க்கமுடியாத ஏக்கத்தில் பலர் இறந்தனர்.

  நாகவிகாரையினால் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் கட்டப்படவிருந்த புத்தர் சிலைக்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டுள்ளது.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பது யாழ் நாகவிகாரை அதிபதிக்கு தெரிந்து இருக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது
புத்த விகாரை கட்டுமானம் தடை செய்யப்பட்டதானது, நாட்டின் இன, மத சகவாழ்வுக்கு ஏற்பட்டுள்ள தடை என என்னிடம் முறையிட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு, நான் இது பற்றிய பதிலை தந்துள்ளேன்.
இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சிங்கள ஊடகங்களில் இனவாதத்தை கிளப்பியவர்களுக்கும் பதில் கூறியுள்ளேன்.
இது சகவாழ்வுக்கான தடை இல்லை. நாட்டின் சட்டங்களை புரிந்து கொள்ளாமையினால் ஏற்பட்ட சட்ட தடை என கூறியுள்ளேன்.
இந்த கரையோர பாதுகாப்பு திணைக்களம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வருகிறது.
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், விசேட வரம் பெற்றவர்களைபோல் நினைத்த நேரத்தில் சட்டங்களை மீறி எதுவும் செய்யலாம் என்ற நிலைமை மாறி இன்று சட்டத்தின் ஆட்சி இயன்ற அளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் பல்வேறு இந்து ஆலயங்களில் வானுயர்ந்த கோபுரங்கள் பல எழுப்பட்டுள்ளன. எனவே வடக்கிலும் விகாரைகளில் கட்டுமானங்கள் செய்யப்படலாம் என்பது இயற்கையே.
ஆனால், சட்டத்தை மீறி கடலிலும், வானிலும் கட்டுமானங்களை நினைத்தபடி எவரும் செய்ய முடியாது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே யாழ் அரச அதிபர் வேதநாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே சட்டத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை சிங்கள ஊடகங்களில் குறை கூறுவது பிழையானதாகும் என்றார்..

புதுக்குடியிருப்பில் தனியார் காணியில் அடாத்தாக அமைக்கப்பட்டுவரும் விகாரையை உடனடியாக இடை நிறுத்தும்படி பலமுறை போராடங்கள் செய்தபோதும் புத்தரின் சீடர்கள் கைவிடத் தயாராகவில்லை. வடமாகாண ஆளுனரிடம் இது பற்றிக் கேட்டபோது  அதைப்பற்றி எதுவுமே தெரியாதெனக் கைவிரித்துவிட்டார். இலங்கையர் எவரும் எங்கேயும் சென்று குடியேறலாம் எனற பழைய   அரசங்கத்தின் கொள்கையையே பதிய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது. தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் கொழும்பில் வீடு வாங்குகிறார்கள். சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றுகிறது. பிரச்சினைகளுக்கு முன்பு குடியிருந்தவர்கள் தான் மீளக் குடியேற்றப்படுகிறார்கள் என அரசாங்கம் சொல்கிறது.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும்  கண்ணை மூடி தியானத்தில் இருக்கும் புத்தர் சிலைகளும் தமிழ் சிங்கள உறவைப் பிரிக்கும் காரணியாக மாறிவிடும் அபயம் உள்ளது.
ஊர்மிளா
சுடர் ஒளி
ஏப்ரல்06/ஏப்ரல்12
No comments: