Thursday, June 22, 2017

தமிழக அரசின் தில்லுமுல்லை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு


ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் திக்குத் தெரியாது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின்  இடத்தை நிரப்ப முயற்சிசெய்த சசிகலா சிறையில் இருக்கிறார். சசிகலாவின் உதவியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற முயன்ற தினகரன் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்துவது யார்? தமிழக அரசை இயக்குவது யார் போன்ற கேள்விகளுக்கு இந்திய மத்திய அரசின் பக்கமே அரசியல் நோக்கர்களின் கைகள் நீளுகின்றன.

எவராலும் நெருங்க முடியாத இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தகுதி இல்லாத பலரும் உரிமை கோருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் சசிகலாவின்  கையில் தலமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.தமிழக முதல்வராவதற்கு சசிகலா ஆசைப்பட்டதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது.சசிகலா அணி பன்னீர் அணி என நிர்வாகிகள் பிரிந்தனர். விசுவாசமான தொண்டர்கள் முடிவெடுக்க முடியாது திணறினர்.இந்த இடை வெளியில் ஜெயலலிதாவின் மருமகள் தீபாவை  சிலர் உசுப்பேற்றி அவரைத் தலைவராக்கினர். சசிகலா சிறைக்குப் போனதும் முதலமைச்சர் எடப்பாடி அந்த அணிக்குத் தலைமை வகித்தார். தினகரன் பிணையில் விடுதலையான பின்னர் அவரின் பின்னால் 32 தமிழக சட்டசபை உறுப்பினர்கள்  சென்றுள்ளதாக செய்தி வெளியாகிறது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமக்கே சொந்தம் என பன்னீர், எடப்பாடி ஆகிய இருவரும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அத்தையின் சொத்து தனக்கே என அடம்பிடிக்கும் தீபாவும் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு சொந்தம் கொண்டாட முற்படுகிறார். தமிழக மக்களின்  உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவிதமான முயற்சியையும்  தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடியும் ஆட்சியைக் கைப்பற்ற பன்னீரும் முயற்சி செய்கின்றனர். தமிழக மக்கள் எதிர் நோக்கும் மீதேன் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, மாட்டுக்கறிப்  போன்றவற்றைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எதுவிதமான  முற்சியையும் மேற்கொள்ளவில்லை.
சசிகலாவுக்கும் பன்னீருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில்; கூவத்தூர்  கூத்து அரங்கேறியது. அப்போது தமிழக சட்ட சபை உறுப்பினர்களை வளைப்பதற்கான பேரம் ஆரம்பித்தது. பகிரங்கமாக நடைபெற்ற இவற்றை மத்திய அரசு கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. மாநில அரசின் தவறுகளை உன்னிப்பாக அவதானித்து அறிக்கை அனுப்புவது ஆளுநரின் தலையாய பணி. தமிழகத்துக்கு ஆளுநரை நியமிக்காது இன்னொரு மாநிலத்து ஆளுநருக்கு கூடுதல்  பொறுப்பை வழங்கி உள்ளது மத்திய அரசு. தமிழக அரசு இயங்க முடியாத நிலையில் இருப்பதையே மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு விரும்புகிறது. அதனால்தான் தமிழக அரசின் தில்லுமுல்லுகளை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது.


தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறுண்டு கிடக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம் தனியாக தமிழக அரசைக் கண்டித்து செயற்படுகிறது.   பங்காளிக் காட்சிகளான காங்கிரஸும் முஸ்லிம்  லீக்கும் அதற்குத் துணை போகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்து தமிழக அரசை எதிர்ப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பின்னடிக்கின்றன. இன்றைய நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் ஏனைய கட்சிகளை அன்னியப்படுத்தி உள்ளன. தமிழக அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏறுவதை விரும்பவில்லை.

தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து வருகிறது. பங்காளிக் கட்சிகளான காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்  அதற்குத் துணை நிற்கின்றன.  தமிழக அரசுக்கு  எதிரான  போராட்டங்களை ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். மத்திய அரசு அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. மத்திய அரசின் சொல்லைக் கேட்கும் அரசாங்கம் தமிழகத்தில்  இருப்பதையே பாரதீய ஜனதா விரும்புகிறது.பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்க்கும் சசிகலாவும் தினகரனும் ஓரம் கட்டப்பட்டுவிட்டர்கள். எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்ச்செல்வமும் எதிரும்  புதிருமாக அரசியலில் செயற்பட்டாலும்  பாரதீய ஜனதாக் கட்சியின் கைப்பிள்ளையாகவே இருக்கின்றனர்.
மதுரை தெற்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தில் வெற்றி பெற்ற  சரவணனின் குதிரை பேரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானத்தால் அரசியல் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசும் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. விமானநிலையத்தில் இரண்டுகோடி எனச்சொல்லப்பட்டது. கவர்னர் மாளிகைக்குப் போனபோது  நான்கு கோடியானது. கூவத்தூரில் ஆறு கோடி  தருவதாகச் சொல்லப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் அல்லாத கருணாஸ் போன்றவர்களுக்கு பத்துக் கோடி கொடுத்ததாக சரவணன் கூறியதை மூன் தொலைக்காட்சி இரகசியமாகப் படம் பிடித்தது.  டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அதனைஒளிபரப்பி  குதிரை பேர  விவகாரத்தை வெளிப்படுத்தியது கூவத்தூரில் தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் பன்னீரின் அணியும் பேரம் பேசியது சரவணன் என  அந்த வீடியோவில் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில் இருப்பது நான் தான் குரல் என்னுடையதல்ல என சரவணன் காமெடி செய்கிறார்.


கூவத்தூர் குதிரை பேர  விவகாரத்தை சட்டசபையில் பேசுவதற்கு ஸ்டாலின் முயற்சித்தபோது சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை.  ஸ்டாலினை பேசவிடுமாறு திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்குச்செவி சாய்க்காத சபாநாயகர் காவலர்களின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை வெளியேற்றினார். ஆதாரம் இல்லாமல் உறுப்பினர்கள் மீது  குற்றம்சாட்டக்கூடாது  என சபாநாயகர் தெரிவித்தார். தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானத்தை  சபாநாயகரும்  பார்த்திருப்பார்.  தமிழக ஆளும் கட்சிக்கு  எதிரானவர் சரவணன் அவரைப் பற்றிய குற்றச்சாட்டை சபாநாயகர் ஏற்க மறுத்தது விநோதமாக உள்ளது. உண்மை வெளிவந்தால் எடப்பாடி அரசுக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்துள்ளார். இரண்டு நாட்கள் போராடிய ஸ்டாலின் முன்றாம் நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை சிடியில் பதிவு செய்து சபாநாயகரிடம் கொடுக்க முயன்றார். அப்போது அவர் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் அவரது அறையில் ஸ்டாலின் சிடியை கையளித்தார்.

தமிழக அரசும் மத்திய அரசும்  இணைந்துசெயற்படுவதால் எதிர்க்கட்சியால் ஒன்றும் செய்யமுடியாதுள்ளது.அடுத்த கட்டமாக  ஆளுநரைச் சந்தித்த ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொருமுறை இரகசியமாக நடத்த வேண்டும், தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தில்லுமுல்லுகள் அனைத்தையும் பட்டியலிட்ட ஸ்டாலின் குதிரை பேர விவகாரத்தையும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். எடப்பாடி அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கோரி நிதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்துள்ளது. இதேவேளை  குதிரைபேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என திராவிட முன்னேர்ர் கழகம் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின்  செல்லப்பிள்ளைதான் ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பார். ஆகையால் ஆகையால் ஸ்டாலினின் கோரிக்கை இருந்த இடத்தை விட்டு அசையாது என்பது உறுதி. ஆளுநரை  ஸ்டாலின் சந்தித்த மறுநாள் தம்பித்துரை ஆளுநரை சந்தித்தார். அந்தச்சந்திப்பின் பின்னர்  தமிழக அரசு கலைக்கப்படமாட்டாது என தம்பித்துரை பேட்டியளித்தார். தமிழக அரசு கலைக்கப்படமாட்டாது என  பாரதீய ஜனதாவின் தமிழகத் தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக அரசு கலைக்கப்பட மாட்டாது என இவர்களின் கூற்று மூலம் உறுதியாகி உள்ளது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிசெய்யும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அறுதிப்பெரும்பன்மையை இழந்துள்ளது.    எடப்பாடிக்கு ஆதரவாக  97 உறுப்பினர்கள்தான் இருக்கின்றனர்.  26 உறுப்பினர்கள் தினகரனின் பின்னால் சென்றுவிட்டனர். பன்னீரின் அணியில்    12  உறுப்பினர்கள் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  98  உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழக அரசின் தலைவிதி நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.
வர்மா



No comments: