Wednesday, June 28, 2017

இந்திய அரசியலில் சாதியின் ஆதிக்கம்

  மதசார்பற்ற  நாடு ,சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை  உலகுக்கு எடுத்துக் கூறிய இந்திய அரசியல் சாதி எனும் சாக்கடைக்குள் சிக்கித் தவிக்கிறது. இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதித் தேர்தலில் சாதியைப் புகுத்தி வாக்குவங்கியைக் கவர்வதற்கு இந்தியாவின் பிரதான கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இந்தியாவின் 15  ஆவது ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 17  ஆம் திகதி நடைபெற  உள்ளது.
காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்க  ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி, மத்திய அரசின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகவே இருப்பார். மாநில ஆளுநர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியினுடையது. ஆனாலும், ஆளும் கட்சியின் ஆலோசனையின்படியே ஜனாதிபதி செயற்படவேண்டும். அவசரநிலை, 356 இல் உள்ள முக்கிய அம்சங்கள் போன்றவற்றில்  ஜனாதிபதி தனது இஷ்டப்படி முடிவெடுக்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில்  வேட்பாளரை நிறுத்துவதற்கு  பாரதீய ஜனதாவும் காங்கிரஸும் தகுதி உள்ள பலரைப் பரிசீலனை செய்தன. முடிவில் பாரதீய ஜனதாக்கட்சி,  பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான  மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. காங்கிரஸின் ஆதரவுடன் எதிர்ப்பு இல்லாமல் ஒருமித்த கருத்தில் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய பாரதீய ஜனதா விரும்பியது. சோனியாவைச் சந்தித்து கலந்துரையாடியபோது வேட்பாளரை  அறிவிக்காது ஒப்புதல் தர முயாது எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை செய்யாமல் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக பாரதீய ஜனதா அறிவித்தது. 20   கூட்டணிக்  கட்சிகளுடன் ஆலோசனை செய்து மீரா குமாரை  ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வியப்பு அதிகம். என்றாலும் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பது  எதிர்க்கட்சிகளின் விருப்பம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலித் என்ற சொல்லை இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் அடகு வைத்துள்ளன. இந்து மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு கிறிஸ்தவ, இஸ்லாம் மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பை மறைப்பதற்காக தலித் என்ற ஆயுதத்தை அது கையில் எடுத்துள்ளது. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான தலித்தை எதிர்க்க இன்னொரு தலித்தைக் களம் இறக்கி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்உள்ள கான்பூரில் 1945  ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பிறந்த ராம்நாத் கோவிந்த் கான்பூர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 1994 ஆம் ஆண்டு முதல்  2006 ஆம் ஆண்டு வரை  12 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி  வகித்தவர்.  1977 ஆம் ஆண்டு முதல்  1979  ஆம் ஆண்டு வரை டில்லி ஹைகோட்டில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  1980 ஆம் ஆண்டு முதல்  1993  ஆம் ஆண்டு வரை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மாநில அரசின் நிலைக்குழு உறுப்பினர்,டில்லி பார் கவுன்சில் தலைவர், ஐநாவின் இந்தியப்பிரதிநிதி,தலித் மோட்சாவின் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர்.இவரின் மனைவி பெயர் சவீதா.அந் மகனின் பெயர் பிரசாந்த் மகனின் பெயர் ஸ்வாதி.   ஜனாதிபதித் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்  வெற்றி பெற்றால் ஆர்.கே.நாராயணனுக்குப் பின்னர் இந்தியாவின் இரண்டாவது  தலித் ஜனாதிபதி என்ற பெயர் கிடைக்கும் .
இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார். 1945 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவரின்  தாயார் சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டவர். நிர்வாக அனுபவமும் தீவிர அரசியல் ஈடுபாடும் கொண்டவர்.  எம்.ஏ ஆங்கில பட்டதாரி, சட்டம் பயின்றவர். முன்னர் ஐ.எப்.எஸ் அதிகாரி.பிரிட்டன், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியவர். அரசியலில் உள்ள ஈடுபாடு காரணமாக 1985  ஆம் ஆண்டு வேலையை இரஜினாமாச் செய்துவிட்டு 1985 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 2004 ஆம் ஆண்டு சமூக நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.2014 ஆம் ஆண்டு  நீர் வளத்துறை அமைச்சராக தேர்வான  நிலையில் சபாநாயகராகக் கடமையாற்றினார். பாரதீய ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது மிகச்சாதுரியமாக . நாடாளுமன்றத்தை வழி நடத்தினார். 2010  ஆம் ஆண்டு ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக் கழகம் மீரா குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.


பிரதமர் மோடி நான்கு திட்டமிட்டு தலித் எனும் அடையாளத்துடன் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கை கவர்வதற்காக மோடி விரித்த வலையில் காங்கிரஸ் சிக்கிவிட்டது. ஆர்.கே.நாராயணன்  ஜனாதிபதியானபோது தலித் என்ற அடையாளம் இடப்படவில்லை. ஜெகஜீவன் ராம்மீதும் தலித் முத்திரை குத்தப்படவில்லை. தலித் வாக்கு வங்கியைக் கவர்வதற்காக ராம்நாத் கோவிந்த்மீது தலித் சாயம் பூசப்பட்டுள்ளது.ராம்நாத் கோவிந்தை எதிர்த்து  தலித் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் அந்த மக்களின் நம்பிக்கையை இழந்து விடலாம் என்ற பயம் காங்கிரஸிடம் உள்ளது.

உலகின் பல நாடுகளில் மக்களின்  வாக்களித்து  தமது ஜனாதிபதியைத் தேர்வு செய்வார்கள்.இந்தியா போன்ற ஒருசில நாடுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வாக்களித்து ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இப்படியான தேர்தலில் கட்சிகள் மிக முக்கியத்துவம் வகிக்கின்றன. போட்டி பலமாக இருந்தால் சிறுகட்சி உறுப்பினர்களும்  சுயேட்சைகளும் விலை பேசப்படுவார்கள்.இந்திய நாடாளுமன்றத்தில்  மூன்றாவது பெரிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, பாரதீய ஜனதாக் கட்சி அரவணைத்துச் செல்கிறது

 இந்திய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களும் , மேல்சபையில்   233 உறுப்பினர்களும் இருக்கின்றனர். மொத்தமாக  776 எம்.பிக்கள் உள்ளனர்.  31 மாநிலங்களில்  4120 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள். மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களது வாக்கு மதிப்பு கணக்கிடப்படும். நியமன எம்பிக்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. பாரதீய ஜனதாவுக்கு  48.10 , காங்கிரஸுக்கு 15.90 , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  5.38  சதவீத வாக்குகள் உள்ளன.  பாரதீய ஜனதாக் கட்சிக்கு 1804  சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பு 2,39,923  ஆகும்.    நாடாளுமன்றத்தில் 336  உறுப்பினர்களும் ,மேல்சபையில் 70    உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பு     5,27,371 ஆகும்.  பாரதீய ஜனதாவுக்கு  மொத்தமாக  5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன. 5.49.474   வாக்குகள் பெற்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறலாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  59.000  வாக்குகளும் தெலுங்கானவின் 23.200  வாக்குகளும் சுயேட்சைகளும் நடுநிலை வகிப்பவர்களும் தனது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்ற  நம்பிக்கையில்இருக்கும்  பாரதீய  ஜனதாவெற்றிக் களிப்பில்  இருக்கிறது.
 
 கங்கிரஸ் கூட்டணியுடன் இதர எதிர்க்கட்சிகளும் சேரும் பட்சத்தில்  பாரதீய ஜனதா வைவிட 93,000  வாக்குகள்  குறைவாகக் கிடைக்கும்.சுயேட்சைகளும் நடுநிலை வகிப்பவர்களும் தனது வேட்பாளருக்கு வாக்களித்தால் திருப்பம் ஏற்படும் என  காங்கிரஸ் நினைக்கிறது.  வாக்களிப்பு மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். வேட்பாளரின் பெயர் ஒருகட்டத்தில் இருக்கும் வாக்களிப்பவர் தமது விருப்பத்தைக் குறிப்பிடும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில்  தமது விருப்பத்தேர்வை ஒன்று,இரண்டு,மூன்று எனக் குறிப்பிட வேண்டும். முதலாவது விருப்பத்தைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் அடுத்த  இரண்டையும் குறிப்பிடலாம் அல்லது குறிப்பிடாமல் விடலாம். வாக்களிப்பு முடிந்ததும் முதலாவது விருப்பம் மட்டும் எண்ணப்படும். வேட்பாளர் ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாகப் பெறவில்லையானால், கடைசியாக இடம்பிடித்தவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். மீண்டும் எண்ணும் போது  வெளியேற்றப்பட்டவரின் வாக்குச் சீட்டில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவரின் பெயர் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம்  நாடாளுமன்றத்துக்கு உண்டு. நாடாளுமன்றத்தின் எதாவது ஒரு அவையில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஜனாதிபதி மீது புகார் கூறி அவரை நீக்கவேண்டும் என  மனுக்கொடுத்து இரண்டு அவையிலும் விவாதித்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

சங்கபரிவாரைச்சேர்ந்த வாஜ்பாய், மோடி ஆகியோர் பிரதமராகிவிட்டனர். ஜனாதிபதி பதவியில் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது.  வாஜ்பாய்க்கு அடுத்த இடத்தில் இருந்த அத்வானியை பின்னுக்குத்தள்ளி மோடி பிரதமரானபோது அத்வானி, ஜனாதிபதியவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அத்வானி,முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருக்கும் எதிரான பாபர்மசூதி வழக்கு மீண்டும் கிளறப்பட்டதால்  இருவரின் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. ரஜினிக்கு வலை வீசப்பட்டது அவர் சிக்கவில்லை. பனாமா வரி ஏய்ப்பு பட்டியலில் பெயர் இருந்ததால் அமிதாப்பச்சனின் பெயர் விடுபட்டது.

பாரதீய ஜனதாவைப் போன்றே காங்கிரஸ் கட்சியும் பலரின் பெயரைப் பரிசீலித்தது. பாரதீய ஜனதா தலித் வேட்பாளரை நிறுத்தியதால் மற்றுழியில்  சிந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. மத்திய அரசு சொல்வதை முறைப்படி அறிவிக்கும் பதவிக்கு  இந்திய அரசியல் கட்சிகள் தலித் என்ற வர்ணத்தைப் பூசி வேடிக்கை  காட்டுகின்றன.
வர்மா 

No comments: