Monday, July 3, 2017

வேற்றுமையில் ஒற்றுமை காணும் அ.தி.மு.க


எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உயர்ந்த  ஸ்தானத்தில் வைத்த பெருமை ஜெயலலிதாவுக்குரியது. எம்.ஜி.ஆரின் மறைவின் பின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும் கழகம் இரண்டானது. இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டு இரண்டு அணிகளும் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கதை முடிந்தது.என அனைவரும் நினைத்திருந்த வேளையில் கழகத்துக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதா அதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். காங்கிரஸ்,  பாரதீய ஜனதாக் கட்சி போன்ற தேசியக் கட்சிகள் ஜெயலலிதாவின் தயவை நாடி நின்றன.  மத்திய ஆட்சியை அமைக்கும் அல்லது கலைக்கும் வல்லமை ஜெயலலிதாவிடம் இருந்தது.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை தலை  கீழாகிவிட்டது.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிதறும் என எதிர்பார்க்கப்பட்டது.அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாகி பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் ஆட்சி அரங்கேறியது. ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா பிடிக்க முயன்றபோது சசிகலா அணி, பன்னீர்ச்செல்வம் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. சசிகலா சிறைக்குப் போனதும் திரனரனின் ஆட்டம் தொடங்கியது. இரட்டை இலைச்சின்னத்தைப்பெற இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் தினகரன் கைது செய்யப்பட்டதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை  ஸ்திரப்படுத்திக் கொண்டார். பிணையில் வெளிவந்த தினகரனை எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளவில்லை. தினகரனின் பின்னால் சில சட்டசபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழக அரசியல் அரங்கில் சசிகலா காணாமல் போய்விட்டார்.எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்து போய்கிடக்கிறது.


எடப்பாடி அணியும் பன்னீர் அணியும்  இணைவதற்கு பல சுற்று சந்திப்புகள்  நடைபெற்றன. பிரிந்தவர்கள் இணைவதற்காக இரு  அணி தரப்பிலும் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதிர்த்தரப்பினால் நிராகரிக்கப்பட்டன. எடப்பாடி அணியில் உள்ளவர்களும் பன்னீரின் அணியில் உள்ளவர்களும் ஒருவர் மீது ஒருவர்  குற்றம்  சுமத்துகின்றனர். தினகரனின் பக்கம் நிற்பவர்கள் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுகின்றனர். வெளியே இருந்து பார்த்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  மூன்றாகப் பிரிந்து இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மூன்று அணிகளும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. ஒரு அவையிலே எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச்செய்து தமது கருத்தைத் தெரிவிப்பது வழமையான சம்பவம். ஆளும்  கட்சியில் உள்ளவர்கள் வெளிநடப்புச்செய்து தமது கருத்தைத் தெரிவிக்கும் புதுமை தமிழகத்தில் நடைபெறுகிறது.


 மாநிலக் கட்சிக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதா, தேசியக் கட்சிகளான காங்கிரஸையும் பாரதீய ஜனதாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் நட்பு நாடி ஜெயலலிதாவைத் தேடிச்சென்று சந்தித்தனர்.யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது தலை நிமிர்ந்து நின்றவர் ஜெயலலிதா.ஜெயலலிதாவின் பாதையில் செல்வதாகக் கூறும் பன்னீரும் எடப்பாடியும் பாரதீய ஜனதாவிடம் முற்று முழுதாகச் சரணடைந்து விட்டனர். எடப்பாடியிடம் பறிகொடுத்த ஆட்சியைக் கைப்பற்ற பன்னீர்ச்செல்வம் முயற்சிக்கிறார்.பன்னீரிடம் இருந்தும் தினகரனிடம் இருந்தும் ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடி போராடுகிறார். பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பாரதீய ஜனதாக் கட்சியை நம்பியே தமது அரசியல்பயணத்தைத் தொடர்கின்றனர்.

எடப்பாடியையும் பன்னீரையும் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. தமிழக மக்களின் பிரச்சினைகள் எதனையும் கருத்தில் எடுக்காத தமிழக அரசு பாரதீய ஜனதா விரும்பும் எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறது.ஜனாதிபதித் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் கட்சியின்  வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தனது அணியில் உள்ளவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்று பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்கு தினகரனின் பின்னால் நிற்பவர்களுக்கும் துணிவு இல்லை.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்து நின்றாலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன.

  ஜெயலலிதா  புராணத்தையும் சசிகலாவை வாழ்த்துவதையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கைவிட்டு விட்டனர்.பாரதீய ஜனதாக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்  நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பு சசிகலாவின்  ஆதரவுடன் வெளியிடப்பட்டதாக தினகரனின் பின்னால் நிற்பவர்கள் தெரிவித்தனர்.அதனை எடப்படியின் அரசு மறுத்துள்ளது. சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு வெளியேற்றுவதை எடப்பாடி அணி விரும்புகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தமிழகத்துக்கு விஜயம் செய்து எடப்பாடியையும் பன்னீரையும் தனித் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு கோரினார். தினகரனின் அணியை அவர் கண்டுகொள்ளவில்லை. முன்னதாக வேட்புமனுத் தாக்கலின் போது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வேட்பாளரை வழி மொழிந்தவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர் இணைக்கப்பட்டது.தினகரனை பாரதீய ஜனதா தள்ளியே வைத்திருக்கிறது.

தமிழக அரசின் தலைமையில் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் தினகரனின் பின்னால் நிற்பவர்கள் கலந்துகொண்டதால் தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார். இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில் பிணையில் வெளிவந்த தினகரன் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். எடப்பாடி பழனிச்சாமி அதற்கு இடம் கொடுக்கவில்லை.  எடப்பாடி தன்னை அழைத்துப் பேசுவார் என தினகரன் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.  அதனால் எடப்பாடியை விரும்பாதவர்களை ஒன்றிணைத்து தனது பலத்தைக் காட்ட முயற்சி செய்தார்.அது பிசுபிசுத்துப் போய்விட்ட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு,தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் தமிழக அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் முன்னாள் கைகட்டி வாய்பொத்தி நின்றவர்கள் இப்பொழுது கைகாட்டிப் பேசுகின்றனர். தமது  தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாத இவர்கள்  அடுத்த தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழக அரசை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்  மீரா குமாருக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஏழு போரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலுடன் தமது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


தனியரசு, தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகிய  மூவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பின் மூலம் தமது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.    விஜயகாந்தின் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அவரை எதிர்த்து தமிழக அரசின் பக்கம்  சாய்ந்தவர்களை அடுத்த தேர்தலில் ஜெயலலிதா கைவிட்டார். அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து  ஸ்டாலினிடம் சரணடைந்தனர். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர்கள் தோல்வியடைந்தனர்.  இவர்கள் மூவருக்கும் அதேகதிதான் ஏற்படும். தனியரசு, தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகியோரின் கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. ஜெயலலிதாவின் செல்வக்கினால் தான் வெற்றி பெற்றார்கள்.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களைத் தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அமைச்சரும்  பொலிஸ் உயர் அதிகாரிகளும் 40 கோடி ரூபா இலஞ்சம்  பெற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிக்கையை ஆளுநர் கோரியுள்ளார். இதெல்லாம் ஒரு பெரிய விடயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காலம் கனிந்துள்ளது. அப்போது தான் தமிழக மக்களின் உணர்வு என்ன என்பதை தமிழக அரசும் மத்திய அரசும் புரிந்துகொள்ளும்.
வர்மா



   

No comments: