Monday, November 5, 2018

மினித்தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்


இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் கருவி. ஆட்சிபீடத்தில் இருக்கும் கட்சி   இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது எழுதப்படாத விதி. அபூர்வமாச் சில வேளைகளில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும். தமிழகத்தில் இருபது தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்தலை எதிர் நோக்கித் தமிழகம் காத்திருக்கிறது.   தமிழகத்தின் தலைவிதியைப் புரட்டிப்போடும்  இந்தத் தேர்தலை இந்தியாவே உன்னிப்பாக அவதானிக்க உள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகியவற்றின்  உறுப்பினர்களான போஸ், கருணாநிதி ஆகியோர் காலமானதால் அவை தேர்தலை எதிர் நோக்கி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து 19 அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக உறுப்பினர்கள் அன்றைய தமிழக ஆளுநரிடம் மனுக்கொடுத்தனர். அதன் காரணமாக அந்தப் 19 உறுப்பினர்களுக்கும் எதிராக தமிழக சட்டசபையின் சபாநாயகர் விளக்கம் கேட்டார். அவர்களில் ஜக்கையன் என்பவர் விளக்ககடிதம் கொடுத்ததால் அவர் மன்னிக்கப்பட்டார். ஏனைய 18 உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த அவர்கள் நீதிமன்றம் சென்றனர்.  இரண்டு நீதிபதிகள் எதிரும் புதிருமாகத் தீர்ப்பு வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட 18 பேரும் மேன் முறையீடு செய்தனர். சபநாயகரின் தீர்ப்பு சரியென தீப்பு வழங்கப்பட்டது.

சபாநாயகரின் தீர்ப்பு சரியென உறுதிசெய்யப்பட்டதால் அண்னா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்நோக்கியிருந்த ஆபத்து விலகியது. தினகரனை நம்பி இருந்தவர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். வழக்குகளைச் சந்தித்து அனுபவப்பட்ட தினகரன் உச்சநீதிமனறத்தில் பார்த்துக்கொள்ளலாம் என சவால் விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலைச் சந்திப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஒரு வருடமாக வருமானம் எதுவும் இல்லை. ஆளும் கட்சி என்ற பந்தா இல்லை. எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தாங்கள் செய்தது நியாயம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆதலால் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தினகரனின் முடிவுக்கு தங்கத்தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே மறுப்புத் தெரிவித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் சென்றால் இன்னும் இரண்டு வருடங்களாவது இழுபடும்.  வழக்குச் செலவுக்கும் பணமும்  இல்லை. நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வதை விட மக்களிடம் செல்வதே சரியென்பதில் அவர்கள் உறுதியாக  உள்ளனர். அவர்களின் முடிவுக்கு அடிபணிந்த தினகரன் உச்சநீதிமன்றம் செல்லப்போவதில்லை என அறிவித்தார்.


   இடைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தமிழக அரசியல் தலவர்கள் தயாராக இல்லை. தோற்று விடுவோம் என்றபயம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களிடம் இருக்கிறது. கஸ்ரப்பட்டு பனத்தைச் செலவு செய்து வெற்றி பெற்றாலும் மாற்றம் எதுவும் நடைபெறாது என்பதால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் இடைத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆர்.கே. நகர் வெற்றியால் பூரிப்படைந்திருக்கும் தினகரன், அதேபோன்ற ஒரு பிரமாண்டமான வெற்றி கிடக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார். திருமங்கலம் வெற்றியைக்  குழிதோண்டிப் புதைத்தது ஆர்.கே.நகர் வெற்றி.  இந்த  விளையாட்டை ஏனைய தொகுதிகளில் தினகரன் செய்யமாட்டார். ஆர்.கே. நகர் வெற்றி தனக்கானது ஆகையால் அங்கு தாராளாமாகச் செலவு செய்தார். அப்படிச் செலவு செய்து இன்னொருவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க அவர் விரும்பமாட்டார். ஆனால் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுக்கு தமிழக அரசைப் புரட்டிபோடும் சக்தி உள்ளது. ஆகையால் எதிர்க்கட்சிகள் இதில் ஆர்வமாக இருக்கின்றன.

தமிழக சட்ட சபையில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. திருவாவூர் கருணாநிதியின் தொகுதி. அங்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும். அழகிரி பூச்சாண்டி காட்டினாலும் கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் அவரை ஏற்க மாட்டார்கள். ஏனைய 19 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும். இன்றைய அரசியல் கள நிலவரத்தில் 19  குதிகளிலும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம் கடந்த சட்ட மன்றத் தேதலில் ஜெயலலிதா கைகாட்டியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலாவின் தயவால் வேட்பாளரானவர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் கோஷ்டிப்பூசல், லேடியின் சொற்படி நடதவர்கள் இப்போ மோடியின் சொற்படி நடக்கிறார்கள், பொதுமக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டப்படுவதில்லை போன்றவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கும் வாக்குகளைத் திசைதிருப்பும் காரணிகளாக உள்ளன.


தமிழக சட்ட சபையில் இப்போது சபாநாயகருடன் சேர்த்து 110 உறுப்பினர்கள் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தைக் காப்பாற்றலாம். இல்லையேல் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜெயலலிதா இருக்கும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பல கட்சிகள் தயாராக இருந்தன.  இன்று அதனுடன் சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எடப்பாடி தோற்பதையே பன்னீர்ச்செல்வம் விரும்புவார். பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

பதவி இழந்த 19 பேரும் மீண்டும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம். கடந்த தேதலில் இவர்கள் வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா என்ற இரும்புப்பெண் காரணமாக இருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரட்டை இலை இல்லை. தொகுதியில்  செல்வாக்குள்ள இரண்டொருவர் வெற்றி பெறலாம். அதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும்  இல்லை. எம்.ஜி. ஆர், ஜெயலலிதா  ஆகியோர் வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டியில் தங்கத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியைத் தக்கவைக்கும் திறமை  அவரிடம் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட சுந்தரராஜ் 493 வாக்குகளாலும்,
 பெரம்பூரில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகளாலும் வெற்றி பெற்றனர்.  இடைத் தேர்தல் நடந்தால் இவர்கள் இருவரும் வெற்றி பெறுவது முடியாத காரியம். பனீருக்குச்  செல்வாகுள்ள தேனீத் தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதியில் தினகரன் தரப்பு வெற்றி பெறுவதென்பது சிரமமான  காரியம்.

 தமிழக சட்ட சபையில் 234  உறுப்பினர்கள் உள்ளனர். அறுதிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 88 உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளான காங்கிரஸ்ஸுக்கு 8 உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமீன் அன்சாரி ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர். இவர்கள் ஸ்டாலினை ஆதரிக்கலாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரம் எப்படி இருகும் எனத்தெரியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கிறதென்பது அனைவருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். மக்கள் நலனில் எதுவித அக்கறையும் இல்லாமல் பதவியைக் காப்பாற்றுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மத்திய அரசின் சொற்படி ஆடுகிறது. இந்த அரசின் மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு பிரசாரம் செய்யும். கடந்த சட்டமன்றத்  தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன  ஆதரவளிப்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடைந்துள்ளது.

கட்சிகளின் வாக்கு வங்கிகள் ஒரு புறம் இருந்தாலும் சாதி என்ற அடையாளம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. வெற்ரி வாய்ப்புள்ள சாதியைப் பார்த்தே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  தமிழகத்தின் மினித் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகிவிட்டன.  இடைத்  தேர்தல் உடனடியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து  தமிழக இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமாகௌள்ளது.

No comments: