Wednesday, February 20, 2019

மோடியிடம் சரணடைந்த லேடியின் விசுவாசிகள்


கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகியவற்றால் புகைந்து கொண்டிருந்த தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதாக் கட்சி சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி  வைப்பதில்லை என சபதம் ராமதாஸ் இரட்டை இலையின்கீழே ஒதுங்கியுள்ளார். தன்னுடன் கூட்டணி சேர்வதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகளை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மோடியின் ஆசைகள் எவையும் நிறைவேறவில்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் தான் நினைத்தபடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப்படைக்கிறார் மோடி.
 தமிழகத்தை ஆட்சி செய்வது ஊழல் கட்சி எனக்கூறி அந்த ஊழல்கள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிசெய்தவர் ராமதாஸ்.தமிழக அரசு செய்த ஊழல்கள் பற்றிய விபரப் பட்டியலை தமிழக ஆளுநரிடம் கையளித்தவர் ராமதாஸ். தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டேன் என சபதம் செய்தவர் ராமதாஸ். அவை எல்லாவற்றையும் மூட்டை கட்டிப் பறணில் வைட்துவிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளும் கூடிதலாக ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் வழங்கவும் இணக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடபகுதியிலும் கொங்கு மண்டலத்திலும்  பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ளது. ஆகையினால் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ராமதாஸின் மகன் அன்புமணிக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெறுவார். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏனைய ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமே. ஜெயலலிதாவு ஒரு முறை பட்டாளி மக்கள்கட்சிக்கு ஏழுதொகுதிகளைக் கொடுத்தார் அந்தத்தேர்தலில் ஒரு தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறவில்லை.

ராமதாஸ், அன்புமணி ஆகியோரைப் போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மிகப்பிரபலமானவர் காடுவெட்டி குரு. காடுவெட்டி குருவின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். அவருடைய இறுதிக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கைகொடுக்கவில்லை என்ற வருத்தம் உடும்பத்தவரிடம் இருக்கிறது. அன்புமணி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக காடுவெட்டி குருவின் தாயார் அறிவித்துள்ளார். தேர்தல் காலமொன்றின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். இந்தத் தேர்தலில் குரல் கொடுக்கப்போவதில்ல என ரஜினி அறிவித்துள்ளார்.  ரஜினியின் ரசிகர்கள் அதனை மறந்திருக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அதனை ஞாபகப்படுத்துவார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல. தமிழக அரசைத் தக்கவைப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளையும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.அதற்குப் பிரதி உபகாரமாக  தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழக சபாநாயகரினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  21 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி இழந்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசு தப்பிப் பிழைக்கும். இல்லையேல் அறுதிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன் ஏழு தொகுதிகளுக்கு  மேல் வெற்றி பெறாலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நம்புகிறார்கள்.

தமிழக சட்ட மன்றத்தில் காலியாக உள்ள  21  தொகுதிகளின் உறுப்பினர்களும் தினகாரனின் ஆதரவாளர்கள். அவர்களில் செல்வாக்குள்ளவரான செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். ஒன்றரை வருடங்களாக 21 தொகுதிகளிலும் அபிவிருத்தி எவையும்  நடைபெறவில்லை. அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறவர்கள் பதவி இழந்ததால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலட்த எதிர்ப்பு இருக்கும் என்பது உண்மை.

பலமான கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பது ராமதாஸின்  விருப்பம். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்கள் இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேரம் படியாததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி சங்கமித்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை விரும்பாத பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் ராஜேஸ்வரி கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். கட்சித்தலைவர்கள் பொன்னாடை போர்த்தி,கைகுலுக்கி ஒற்றுமையாகிவிட்டனர்.  தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி, தமிழகத்தைக் கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வு ,மேகதாது அணக்கட்டு என்பனவற்றின் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு தரவில்லை என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்துக்கு நன்மை செய்யும் தேசியக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி சொன்னார்கள். அதை எல்லாம்  புறந்தள்ளி பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியுள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின் செயலர் எச். ராஜாவின் மீது தமிழக மக்கள் கடுமையான கோபத்திலுள்ளனர்.  அவருடைய இனவாத, மதவாதப் பேச்சுகளை இலகுவில் மறக்க முடியாது. பெண்களை இழிவுபடுத்திப் பேசிய எச். ராஜாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது எனபதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். மூத்த உறுப்பினரான தம்பித்துரை வெளிப்படையாக பாரதீய ஜனதாக் கட்சியை விமர்சிக்கிறார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாரதீய ஜனதாக் கட்சியை அக்குவேறு ஆணி வேறாக விமர்சித்தார் தம்பித்துரை. இந்தக் கூட்டணியை தம்பித்துரை விரும்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்தக் கூட்டணியில் விருப்பமில்லை. வெற்றிக் கூட்டணி என சகலரும் சொல்லிவருகையில் அதற்கு எதிர்மாறாக இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாமரை மலரும். பாரதீய ஜனதாவின் தலைமையில் கூட்டாணி அமையும் என முழங்கிய தமிழைசை அமைதியாக ஓரத்தில் நின்று நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். மோடிக்கும் பாரதீய ஜனதக் கட்சிக்கும் எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நோட்டாவுக்குக் குறவாக வாக்குப் பெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றி கூட்டணி கட்சிகளின் கையில்தான் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா

No comments: