Tuesday, September 29, 2020

சூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு

துபாயில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாடிய, பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி இப்போதுதான் சூடுபிடிக்கிறது. அன்று 224 ஓட்டங்களை ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றிகரமாக விரட்டி வரலாறு படைத்தது, நேற்று துபாயில் பெங்களூருவின்அணியின் 201 ஓட்டங்கள் இலக்கை விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்கள் எடுத்து சூப்பர் ஓவர் வரை போட்டியை நகர்த்தியது.

மும்பை அணியில் சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பெற்றார். பெங்களூரு அணியில் ஜோஷ் பிலிப், உமேஷ் யாதவ், ஸ்டெயின் நீக்கப்பட்டு குர்கீரத் சிங், உதனா, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டனர்.

 

‘நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை கலத்தடுப்பைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். ராகுல் சாஹர் வீசிய ஒரு ஓவரில் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விரட்டி கலக்கினார். 9 ஓவர்களில் 81  ஓட்டங்கள் எடுத்தபோது 35 பந்துகலுக்கு முகம் கொடுத்தஆரோன் பிஞ்ச் 52  ஓட்டங்களில் ( 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட்டின் பந்தை அடித்தபோது பொல்லார்ட்டிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கப்டன் விராட்கோலி,ராகுல் சாஹர் பந்தை மும்பை கப்டன் ரோகித் சர்மாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய தேவ்தத் படிக்கல், பேட்டின்சன் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். டிவில்லியர்ஸும் அதிரடியாக ஆடினார். அவர் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். 2-வது அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட்டின் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். படிக்கல்லும் டிவிலியர்ஸும் இணைந்து 29 பந்துகளில் 62 ஓட்டங்களைச் சேர்த்தனர்,


 

கடைசி ஓவரில் பேட்டின்சன் பந்து வீச்சில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி வியக்க வைத்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ஓட்டங்களும், ஷிவம் துபே 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 78 ஓட்டங்கள் திரட்டியதால் அந்த அணியின் ஓட்டஎண்ணிக்கை அதிகரித்தது..

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பும்ரா 4 ஒவர்களில் 42 ஓட்டங்களை வாரி வழங்கினார். ஆஸி.யின் பேட்டின்சன் 4 ஓவர்களில் 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். ராகுல் சாஹர் 4 ஓவர்களில் 31 ஓட்டங்கள்  கொடுத்துஒரு விக்கெட்.டை வீழ்த்தினார்


 

  202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் கப்டன் ரோகித் சர்மா 8 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், குயின்டான் டி காக் 14 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து பிடி கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

மும்பையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் பெங்களூரு வெற்ரி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டது.

 

பொல்லார்ட், இஷான் கிஷனுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்ததுடன் வெற்றிக் கோட்டத் தொட்டனர்.  

கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை. இசுரு உதனா வீசினார். முதல் 2 பந்தில் 2 ஓட்டங்கள்தான். அடுத்த பந்தில் லாங் ஆஃபில் குர்கீரத் சிங் மான், பந்தை நழுவவிட சிக்ஸ் ஆனது. மீண்டும் இஷான் கிஷன் ஒரு சிக்சரை அடித்து 99 ஓட்டங்கள் எடுத்தார்.


 கடைசி 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவை, கிஷன் 1 ஒரு ஓட்டம் எடுத்தால் சதம்.. ஆனால் அவர்  பிடி கொடுத்து  99 ஓட்டங்களில் வெளியேறினார். பொலார்ட் மறு முனைக்கு வந்து பந்தை எதிர் கொள்ளத் தயாரானார்.மறு புறத்தில் குருணல் பாண்ட்யா வந்தார். ஒரு பந்தில் 5 ஓட்டங்கள் தேவை, பொலார்ட் பவுண்டரி அடித்தார்.

  உதனால் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் அதியற்புதமாக வீசி 4 ஓவர் 12 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் என்றும், சாஹல், சாம்ப்பா 8 ஒவர்களில் 101 ரன்


களை விட்டுக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

போட்டி சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 7 ஓட்டங்கள் எடுத்தது. 8 ஓட்டங்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்,

No comments: