Wednesday, September 30, 2020

கம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி


 

 மும்பைக்கு எதிரான பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நவ்தீப் சைனிக்கு பின் மிகவும் உருக்கமான கிரிக்கெட் வரலாறு உள்ளது. 2012 அக்டோபர் மாதம் ஹரியானாவை சேர்த்த 20 வயது இளைஞர் டெல்லிக்கு செல்கிறார். விடுமுறை தினங்களை நண்பர் வீட்டில் கழிப்பதற்காக டெல்லிக்கு ரயில் ஏறினார் அந்த இளைஞர்.. ஆனால் அவருக்கு தெரியாது அந்த ரயில் பயணம்தான் தனது வாழ்க்கையை மாற்ற போகிறது என்று... அந்த இளைஞர்தான் நவ்தீப் சைனி.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் சின்ன சின்ன கிரிக்கெட் கிளப்கள், மாநில அணிகளில் நவ்தீப் சைனி விளையாடி இருக்கிறார். டெல்லி வந்த போது, இவருக்கு பெரிய அளவில் இந்திய கிரிக்கெட் உலகில் பெயர் இல்லை. நவ்தீப் சைனி டெல்லிக்கு விடுமுறையை கழிக்க வந்தவர்.. டெல்லி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்வதை தெரிந்து கொண்டு அதை பார்க்க ஆவலாக சென்றார். கம்பீர், சேவாக், கோலி எல்லாம் அங்குதான் பயிற்சி செய்து வந்தனர். இவர்களை பார்த்து கிரிக்கெட் பயிற்சி கற்றுக்கொள்ளலாம் என்று இவர் அந்த மைதானத்திற்கு சென்றார்

  ஆனால் அவரை மைதானத்திற்கு உள்ளேயே விடாமல் காவலாளி விரட்டிவிட்டார். இதனால் மறுநாள் வலை பயிற்சியில்பந்து வீசும் வீரர் போல  வெள்ளை உடை அணிந்து கொண்டு , கிழிந்த ஷூ ஒன்றை அணிந்து கொண்டு மைதானத்திற்கு உள்ளே சென்றுள்ளார். பவுண்டரி லைனில் நின்றவருக்கு அன்றுதான் அடித்தது லக். அன்று வலை பயிற்சியில் பவுலிங் செய்ய ஆள் இல்லை.. இதனால் பவுண்டரில் லைனில் பால் மேனாக நின்ற நவ்தீப் சைனிக்கு பந்து வீச அழைப்பு வந்தது.

அதுவரை நவ்தீப் சைனி சிவப்பு நிற ''கார்க்'' பந்தை அவர் தொட்டு கூட பார்த்தது இல்லை. டென்னிஸ் பந்துகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதுவும் அன்று அவர் முதல் பந்து போட சென்றது.. கம்பீருக்கு. ஒரே ஒரு தரிசனம் கிடைக்காத என்று மைதானத்திற்கு வந்தவருக்கு கம்பீருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. நவ்தீப் சைனியின் முதல் பந்து 135 கிமீ வேகத்தில் பவுன்ஸ் ஆனது. யார்க்கர் அடுத்தடுத்து பந்துகளில் கம்பீரை தனது வேகப்பந்து மூலமும், துல்லியமான யார்க்கர் மூலமும் நவ்தீப் சைனி நடுங்க வைத்தார் . ஒவ்வொரு முறை கம்பீருக்கு கஷ்டமான பந்து போட்டுவிட்டு ''சாரி பாய்'' என்று சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இவரின் பவுலிங்கை பார்த்து அசந்து போன கம்பீர் அவருக்கு புதிய ஷூ வாங்கி கொடுத்தார். அதோடு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். ஒரு சின்ன ஆர்வம்.. முயற்சி அவரின் வாழ்க்கையையே அன்று மாற்றியது.

நவ்தீப் சைனிக்கு கம்பீர் முறையின்றி அனுமதி கொடுத்ததாக டெல்லி கிரிக்கெட் போர்ட் கம்பீருடன் சண்டை கூட போட்டது. ஆனாலும் கம்பீர் தொடர்ந்து நவ்தீப் சைனிக்கு ஆதரவு அளித்தார். இந்த தொடர் முயற்சி தீவிர பயிற்சி, கம்பீரின் உதவி காரணமாக 2013ல் ரஞ்சி கிண்ணப் போட்டியில் டெல்லி அணிக்காக ஆட நவ்தீப் சைனி தேர்வானார்.

. ரஞ்சி கிண்ணப் போட்டியில் இவரின் ஆட்டம் காரணமாக 2016ல் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 2017ல் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் இவர் 34 விக்கெட்டுகளை 8 போட்டிகளில் எடுத்தார். சராசரியாக ஒரு போட்டியில் 4 விக்கெட் எடுத்து அந்த தொடரின் அதிக விக்கெட் டேக்கர் என்ற பெயரை பெற்றார்.

  இந்த சாதனை காரணமாக 2017 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் நவ்தீப் சைனி ஏலம் எடுக்கப்பட்டார். இதற்கும் கம்பீர்தான் காரணம். 10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினார். இதனால் அடுத்த வருடமே கோஹ்லி இவரை 3 கோடி கொடுத்து பெங்களூர் அணிக்கு எடுத்தார். அங்குதான் இவரின் பவுலிங் ஸ்டைல் பாகுபலி சிலை போல விஸ்வரூபம் எடுத்தது. பயிற்சி எடுத்தார் அதுவரை யார்க்கர் மட்டும் போட்டு வந்த நவ்தீப் சைனி சிறப்பு பயிற்சி மூலம் புதிய புதிய டெக்னிக்குகளை கற்றுக்கொண்டார்.

இவருக்கு கடந்த இரண்டு வருடமாக ஆர்சிபி அணி தனியாக பயிற்சி கொடுத்துள்ளது.2018ல் டெஸ்ட் போட்டியிலும், 2019ல் உலகக் கிண்ணப்போட்டியிலும் இவர் இந்திய அணிக்காக தேர்வானார். ஆனால் விளையாடவில்லை.

கடந்த வருடம் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய ரி20 அணியில் இணைந்து, முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அந்த தொடரில் கரிப்பீயனின் மாஸ் பேட்ஸ்மேன்களை சிதறவிட்டு தனது திறமையை நிரூபித்தார்.

மும்பைக்கு எதிராக வீசிய 19வது ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர்தான் போட்டியையே மாற்றியது.அதன்பின் சூப்பர் ஓவரிலும் கூட வெறும் 7 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு இவர்தான் காரணம் என்று கோஹ்லியே பாராட்டி உள்ளார்.

ஓநாய் டாட்டூவோடு வலம் வரும் இவர் ''ஓநாயை நீங்கள் சர்க்கஸில் பார்க்க முடியாது.. காட்டில்தான் பார்க்க முடியும். நான் காட்டில் இருக்க விரும்புகிறேன். சர்க்கஸில் அல்ல'' என்று விளக்கம் அளித்துள்ளார்.  

No comments: