Monday, April 11, 2022

சீனாவின் கடன் வலையில் சிக்கிய இலங்கை

இலங்கையின்  பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சீனாவின் கடனும் பிரதான காரணம். உள் நாட்டு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு சீனா  பெரிதும் உதவியது. பகையாளிகனான இந்தியாவும், சீனாவும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு உதவி செய்தன.   இலங்கையில்  சீனாவின் ஆதிக்கம்   அதிகரித்தால் தனக்கு ஆபத்து  என்பதை உணர்ந்த இந்தியா  காய் நகர்த்தியது. ஆனால், சீனா உதவி செய்ததுபோல பெரும் தொகையை  இந்தியா கடனாகக் கொடுக்கவில்லை. சீனாவிடம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்கு  இலங்கையில்  பொருளாதாரம் ஸ்திரமானதாக  பாகிஸ்தானும்  இணைந்துள்ளது.சீனாவிடம் இருந்து வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல், இரு நாடுகளும் பெரும் நிதி சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதைப் பார்த்த, மற்ற தெற்காசிய நாடுகள், சுதாரித்துள்ளன.

  இலங்கையிலும் , பாகிஸ்தானிலும் ஒரே நேரத்தில் கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது, அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தி, இரு நாடுகளையும் கலங்கடித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டு உள்ள பிரச்னைகள், சிக்கல்களுக்கு, சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.உலகின் சர்வ வல்லமை படைத்த நாடாக விளங்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது, சர்வதேச அளவில் வர்த்தகப் போராகவும் மாறி உள்ளது.

இந்நிலையில், சீனா தன் வலிமையைக் காட்ட, பல நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி கடன்களை அள்ளி வழங்கியுள்ளது. தெற்காசியாவில் மட்டும், சீனா வழங்கிஉள்ள கடனின் அளவு, 90 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, கடந்த சில ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

  பாகிஸ்தானின் மொத்தக் கடனில், 10 சதவீதம் சீனாவுக்கு செலுத்த வேண்டியதாக உள்ளது. பாகிஸ்தானின் கடன் அளவு உயர்ந்து கொண்டே வந்ததால், அங்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக மிக நெருக்கமாக இருந்த சீனா, பாக்., இடையேயான உறவு தற்போது கசந்துள்ளது.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, பிரதமர் இம்ரான் கானுக்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு, உச்சபட்ச அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.அதுபோலவே, சீனாவுடன் நெருக்கமாக இருந்து, கட்டமைப்பு திட்டங்கள் என்ற பெயரில், இலங்கையின் கடன் சுமையை,   ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசில் உள்ள குடும்பத்தினர் உயர்த்திஉள்ளனர்.

.மிக மோசமான பொருளாதார நிலையால், மின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால்  மக்கள் கொந்தளித்துள்ளனர். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால்,   அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு காரணம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு கடன்களை வாரி வழங்கி, அவற்றை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் தந்திரத்தை, சீனா நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது.

  இலங்கையும், பாகிஸ்தானும் தற்போது சீனாவின் வலையில் வசமாக சிக்கியுள்ளன. தெற்காசியாவில் உள்ள நேபாளம், மாலத்தீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சுதாரித்துள்ளன.பல நாடுகளை இணைக்கும் வகையிலான, சீனாவின் பிரமாண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டத்தை செயல்படுத்த, இந்த நாடுகள் இப்போது தயக்கம் காட்டி வருகின்றன. சீனாவின் கடன் வலையில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க, அந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன.

நேபாள அரசு மற்றும் அதன் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை, இதுவரை நேபாளத்துக்கான சீன துாதரே நிர்ணயித்து வந்தார். தற்போது அதற்கு நேபாள அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. 'கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் தேவையில்லை; வேண்டுமானால் மானியமாக வழங்குங்கள்' என சீனாவுக்கு நேபாளம் கூறியுள்ளது.

நேபாள பிரதமர் ஷேர் பகதுார் டியூபா, சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தார். தற்போது, பாகிஸ்தான்   இலங்கை ஆகியவற்றின் நிலையை பார்த்த அவர், சீனாவின் சதி வலையில் சிக்காமல் இருக்க முயற்சித்து வருகிறார். அதன்படியே சமீபத்தில் அவர் டில்லிக்கு சென்று  இந்திய  தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

No comments: