Wednesday, December 7, 2022

அச்சத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்


 ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் தலைமைப் பதவிக்குப் பலத்த போட்டி நிலவியது. பதவி பறிப்புகள், குழு பறிப்புகள், தர்மயுத்தம் என அனல் பறந்தது. சசிகலா சிறைக்குப் போனதும்  பிரிந்திருந்த எடப்பாடியும், பன்னீரும் ஒன்று சேர்ந்தனர். இரட்டை இலைச் சின்னம் பன்னீரிடம்  இருந்ததால் அவரை அரவணைக்க வேண்டிய நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது  இனிப்பாக  இருந்த இரட்டைத் தலைமை அதிகாரம் பறிபோன பின்னர் கசந்தது.  ஒற்றைத் தலையில் எடப்பாடி பிடிவாதமாக  இருந்தார்.  பன்னீர்  இரட்டைத் தலைமையை விரும்பினார். பொதுக்குழுவில் பன்னீருக்கு எதிரான கோஷம், கட்சிஅலுவலகம் சூறையாடல், பதவி பறிப்பு  , புதிய நியமனம் என பன்னீரும், எடப்பாடியும் ஏட்டிக்குப்  போட்டியாகச் செயற்பட்டனர்.  இந்த நிலையில் மூத்த தலைவர்கள்  மீது வழக்குகள்  பாய்ந்துள்ளன. க ட்சி அலுவல்களைப் பார்ப்பதா வழக்குகளைச் சந்திப்பதா என அவர்கள் தடுமறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரை மத்திய அரசு குறிவைத்து அம்பு எய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்மீது தமிழ்நாடு அரசு வழக்குகளை வீசியிருக்கிறது. இந்த ஐவருக்கும் வைக்கப்பட்டிருக்கும் குறி, அரசியல்ரீதியாகப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. “இதில் தி.மு.க - பா.ஜ.க இரு தரப்புமே வெவ்வேறுவிதமான அரசியல் கணக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வை முடக்க வேண்டுமென்பதுதான் இருவருக்குமே பிரதான நோக்கம். அதைக் கச்சிதமாக முடிக்க ஆதாரங்களைத் திரட்டுகிறார்கள்” என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் காவல்துறை அதிகாரிகள். அண்ணா திராவிட ஆட்சிக்காலத்தில்  உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர்.காமராஜ்,, அவரின் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த ஜூலை 8-ம் திகதி, காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடத்தியது.  41 லட்சம் ரூபாய் பணம், 963  பவுண்  நகைகளைக் கைப்பற்றினர்கள்.   இந்த நிலையில்தான், காமராஜை வருமான வரித்துறையும் குறிவைத்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்குப் பொருள்களை விநியோகம்  செய்யும் சில நிறுவனங்களின் மீது, கடந்த நவம்பர் 23-ம் திகதி திடீர் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. ரெய்டில் சிக்கிய தண்டையார்பேட்டை நிறுவனம், உணவுத்துறை அமைச்சராக காமராஜ் இருந்தபோது, பருப்பு விநியோகத்துக்கு  பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.. அப்போது நடந்த சில பரிமாற்றங்கள் குறித்து, ஆதாரங்களைத் திரட்டி யிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

குட்கா வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது சி.பி.ஐ. தனக்கெதிராக வழக்கு வேகமெடுப்பதைத் தொடக்கத்திலேயே புரிந்துகொண்ட விஜயபாஸ்கர், கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லிக்குச் சென்றவர், மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் சந்தித்தார். ஆனாலும், டெல்லியில் அவருக்கு ஆதரவு   கிடைக்கவில்ல.          

பரிசுப்பொருள்களை’ விஜயபாஸ்கர் தருவித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. 2018 காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த விவகாரத்தையும் சேர்த்து அமலாக்கத்துறை தோண்டித் துருகிறது.

 2017 காலகட்டத்தில், ஷர்மிளா மூலம் கொச்சியிலுள்ள ஒரு   பெரிய நிறுவனத்துடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார் விஜயபாஸ்கர். அப்போதைய அ.தி.மு.க மேலிடத்தின் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்திடமிருந்து பல நூறு கிலோ ‘மஞ்சள்’ வாங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களும் இந்த ‘மஞ்சள்’ வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இது தொடர்பாக கொச்சி அமலாக்கத்துறை விசாரித்தபோதுதான், ‘72 கிலோ அளவில், என்னுடைய சொந்தத் தங்கத்தை விஜயபாஸ்கரிடம் அளித்திருக்கிறேன். அ.தி.மு.க தலைவர்கள் பெயரைச் சொல்லி என் மூலமாகப் பல விஷயங்களை விஜயபாஸ்கர் முடித்துக்கொண்டார்’ என வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஷர்மிளா. 72 கிலோ தங்கப் பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் அமலாக்கத்துறை, விஜயபாஸ்கரை மட்டுமல்ல, அவர் மூலமாக துபாய் வரை ‘மஞ்சள்’ பிசினஸ் செய்த சில அ.தி.மு.க தலைவர்களுக்கும் குறிவைத்திருக்கிறது.

‘இரட்டை இலைச் சின்னமே முடங்கினாலும் சரி, பா.ஜ.க-வுக்குக் கட்டுப்படக் கூடாது’ என்பதில் தீவிரமாக இருக்கிறார் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் அமித் ஷா, சென்னைக்கு வந்திருந்தபோது அவரை எடப்பாடி சந்திக்கவில்லை. ‘அவர் கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. அமித் ஷாவைச் சந்திக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை’ என்று பேசினார். பா.ஜ.க கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், அ.தி.மு.க அவ்வப்போது திமிறி எழுவதை டெல்லி ரசிக்கவில்லை. அதனால்தான், ஆளுநரைப் பார்த்து தி.மு.க-வுக்கு எதிராக எடப்பாடி புகாரளித்த அன்றே, விஜயபாஸ்கர், ரமணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தகவலைக் கசியவிட்டது சி.பி.ஐ. அ.தி.மு.க தலைவர்களைக் கட்டுப்படுத்திவைக்கவும், தேவைப்பட்டால் ‘ஷிண்டே மாடலில்’  அ.தி.மு.க-வை உடைத்தெறியவும் இந்த வழக்குகளையும், சோதனைகளையும் பரதீய ஜனதா பயன் படுத்துகிறது.

மத்திய அரசு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு குடைச்சல் கொடுக்கும் அதே வளை மாநில அரசும் தன் பங்குக்கு நெருக்கடி கொடுக்கிறது.முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் பலமுறை லஞ்ச ஒழிப்புத்துறை தேடுதல் நடத்தியது.. அடுத்த அஸ்திரமாக, அரசு வேலை வாங்கித் தருவதில் வேலுமணி தரப்பு மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டை விசாரணைக்காகக் கையிலெடுத்திருக்கிறதுதமிழக அரசு..

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார் வேலுமணி. அப்போது, வேலுமணிக்கு எதிராகப் பல்வேறு ஆதாரங்களை அறப்போர் இயக்கமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் நீதிமன்றத்தில் அடுக்கியிருக்கின்றன. வேலுமணி மீதான புகார்களை விசாரிப்பதா, கைவிடுவதா என்பதை விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறது நீதிமன்றம். இந்தச் சூழலில்தான், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலுமணியின் கார் ஓட்டுநர் சுதாகர் என்பவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தப் புகாரில், வேலுமணி மீது நேரடியாகக் குற்றச்சாட்டு எழவில்லை விடுவித்த நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாகச்  சொத்துச் சேர்த்த வழக்கைத் தொடருகிறது.


 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது தி.மு.க அரசு. அந்த கமிட்டி, தனது 200 பக்க அறிக்கையைக் கடந்த ஆகஸ்ட் 20-ம் திகதி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, தி.மு.க அரசு எப்போது வேண்டுமானாலும் வேலுமணிக்குக் குடைச்சலைக் கொடுக்கலாம். ஆவினில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டு, பிணையில்  வெளிவந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த நவம்பர் 25-ம் திகதி விசாரணைக்கு வந்தபோது, ‘45 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என நீதிமன்றத்தில் உறுதியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.கொடநாடு வழக்கு எடப்பாடியை நோக்கி நகரும் என்பதை அனைவரும் அறிவர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு , பாரதீய ஜனதாக் கட்சியும் நெருக்கடி கொடுக்கிறது.எல்லாப் பக்கத்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடிவிழுதுகிறது. அடுத்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பாரதீய ஜனதவுக்குத் தேவை. ஆகையால் எகிறும் எடப்பாடியை அடக்குவதற்காக பாரதீய ஜனதா நெருக்கடி கொடுக்கிறது.

 

No comments: