Friday, October 18, 2024

பாரதீய ஜனதாவை காஷ்மீரில் இருந்து அகற்ற ஒமர் அப்துல்லா தொடுத்த அஸ்திரம்


 

  இந்தியாவின் மொத்தப் பார்வையும் ஜம்மு காஷ்மீர் தேர்தலின்  மீது  கண்வைத்திருந்தது.ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சலுகை இரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு  சுமார் ஒன்பது வருடங்களின்  பின்னர்  நடைபெற்ற தேர்தல்.

அசுர பலத்துடன்  இருந்த மோடியின் அரசு ஜம்மு காஷ்மீர்  மக்கலின் விருப்பத்துக்கு மாறாக ஜனநாயகம்  என்ற போர்வையில் தான் நினைத்ததைச் சாதித்தது. இன்று சிறுபான்மை ஆட்சி நடத்தும்  பாரதீய  ஜனதாவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள்  பாடம்  புகட்டியுள்ளனர். இந்து,முஸ்லிம் மோதல், பாகிஸ்தானில் இருந்து  இயங்கும்  தீவிரவாதக் கும்பல் ஆகியனவற்றை தேர்தலில்  மூலதனமாக்க  முயற்சித்த  மோடிக்கு அதிர்ச்சியளிக்கப்பட்டது.

 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற  தேர்தலில்  காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா  பதவியேற்றுள்ளார்.     இந்து மதத்தைச் சேர்ந்த  சுரேந்தர் செளத்ரி என்பவர்  துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்தப்பதவி பாரதீய ஜனதாவுக்கு வைக்கப்பட செக் ஆகும்.  முஸ்லிம்கள் அதிகமாக வகிக்கும் ஜம்மு காஷ்மீரில்  இந்து மக்களின் பாதுகாவலர்  என்ற பாரதீய ஜனதாவின்  பிம்பம் இதனால் உடைக்கப்பட்டுள்ளது.

 இதில் ஒரு சுயேட்சை உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இழுத்தடித்து வந்தது அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகமாக அமைந்து விட்டது. அதே சமயம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தரும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வாக்குறுதி அளித்து, அதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தை முன் வைத்தது அவர்களின் வெற்றிக்கு சாதமாக அமைந்து விட்டது. 

  90   தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 42 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தது. காங்கிரஸ் - ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து களமிறங்கியது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி  ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிட்டன.   காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

சுரிந்தர் சவுத்ரி ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். இவர் 1987 ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 12ம் வகுப்பை படித்து முடித்தார். ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இவர் இந்து மதத்தில் பிறந்தவர். ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கியமான இந்து மதத்தை சேர்ந்த அரசியல்வாதிகளில் இவர் மிகவும் முக்கியமானவர்.

இவர் தொடக்கத்தில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது பாஜகவும் -பிடிபி கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இந்த கூட்டணி அமைய முக்கியமாக இருந்தவர் சுரிந்தர் சவுத்ரி தான். இதனால் மெகபூபா முப்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்ந்தார். அதன்பிறகு இந்த கூட்டணி ஆட்சி கலைந்த பிறகு சுரிந்தர் சவுத்ரி மெகபூபாவின் பிடிபி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூலை 11ம் திகதி பாஜகவில் இருந்து விலகி ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவராக இருக்கும் ரவீந்தர் ரெய்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறினார்.

 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷாரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இங்கு வெற்றியை நிர்ணயம் செய்வது இந்து மக்களின் ஓட்டுகள் தான். இதையடுத்து ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து சுரிந்தர் சவுத்ரி களமிறக்கப்பட்டார். சுரிந்தர் சவுத்ரி தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த 2014 தேர்தலில் இநு்த தொகுதியில் ரவீந்தர் ரெய்னா பாஜக எம்எல்ஏவாக இருந்தார். இதனால் மீண்டும் அவர் வெற்றி பெறுவார் என்று பாஜக நம்பிக்கை வைத்தது. ஆனால் தேர்தல் முடிவு என்பது முற்றிலும் மாறுபட்டது.

 இந்த தேர்தலில் சுரிந்தர் சவுத்ரி மொத்தம 35,069 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளரான ரவீந்தர் ரெய்னா 27,250 வாக்குகள் மட்டமே பெற்றார். இதனால் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் சுரிந்தர் சவுத்ரி வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பாரதீய ஜனதா தொகுதிகளில் வென்றாலும் கூட அதன் தலைவர் ரவீந்தர் ரெய்னாவை வீழ்த்தி இருப்பது காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணிக்கு  உற்சாகமளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா வளர்ந்து வருகிறது.இந்து என்ற மூன்றெழுத்தால் இந்தியாவைப் பிரிக்கும் பாரதீய ஜனதாவின்  முன்னேற்றத்தைத் தடுப்பதே ஒமரின்  நோக்கமாகும்.

  2014 ஆம் ஆண்டு ல் 25 தொகுதிகளில் வென்ற  பாரதீய ஜனதா தற்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் ஜம்மு காஷ்மீரில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களில் 28 பேர் இந்துக்கள், ஒருவர் சீக்கியர் ஆவார். மறுபுறம் பார்த்தால் தேசிய மாநாட்டு கட்சி இந்த தேர்தலில் ஒரு பெண் உள்பட மொத்தம் 9 இந்து வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் 19 இந்து வேட்பாளர்கள், 2 சீக்கியர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தார். இப்படியான சூழலில் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்பதை உணர்ந்து தான் ஓமர் அப்துல்லா தனது கட்சி சார்பில் வெற்றி பெற்ற  இரண்டு இந்து வேட்பாளர்களில் ஒருவரான சுரிந்தர் சவுத்ரிக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளார். இவரை வைத்து இந்துக்களின் ஓட்டுகளை வசப்படுத்த முடியும் என்பதோடு, பாஜகவின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று ஓமர் அப்துல்லா நம்புகிறார்

ரமணி

20/10/24

No comments: