Saturday, March 14, 2026

பலவீனமான இந்தியாவின் பந்து வீச்சு காப்பாற்றிய பும்ரா

 

ரி20 உலகக்கிண்ணத்தை இந்திய அணி தக்கவைத்துள்ளது. ரி20 உலகக்கிண்ணத்தை மூன்று முறை வென்று  வரலாற்றூச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் பின்னால்  பலவீனம் மறைக்கப்பட்டுள்ளது.

     சூர்யகுமார் யாதவ், சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, அக்ஷர் படேல் என துடுப்பாட்ட வரிசை மிகவும் பலமாக இருந்தது. ஆனால், வேகப் பந்து வீச்சில் பும்ராவைத்தவிர வேறு எவரும் பிரகாசிக்கவில்லை. ராணாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த அர்ஷ்தீப்சிங்கும்  ஓட்டங்களை வாரி இறைத்தார். பண்ட்யாவின் ஓவர்களும் துவம்சம் செய்யப்பட்டன. :

இந்திய அணி  சம்பியனானதால்  பந்துவீச்சில் உள்ள ஓட்டை பெரியளவு கவனிக்கப்படாமல் உள்ளது. அடுத்து இந்திய அணி 50 ஓவர் உலகக்  கிண்ணப் போட்டியை எதிர்நோக்கி பயணிக்க உள்ளது. 50 ஓவர் உலகக்  கிண்ணத்தை  கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்திய அணி இழந்ததுஆகையால் ,  , இந்திய அணி பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இந்திய அணியில் கட்டுக்கோப்பாகவும், எதிரணியை நிலைகுலைய வைக்கும் வகையிலும் இருக்கும் பந்துவீச்சாளராக பும்ரா உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பக்கபலமாக முகமது சிராஜ் இடம்பிடிக்க உள்ளார். சிராஜ் நல்ல வேகம், விக்கெட்டுகளை எடுக்கும் திறன் கொண்டவராக இருந்தாலும் சில நேரங்களில் ஓட்டங்களை அதிகமாக கொடுத்துவிடும் சிக்கலும் உள்ளது.

அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களை கட்டுக்கோப்பான பந்துவீச்சாளர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். காயம் அல்லது வேறு காரணங்களால் இந்திய அணியில் பும்ரா இடம்பெறாவிட்டால் பும்ரா போல அணியை தனி ஆளாக தாங்கும் திறன் யாருக்கு இருக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் அதை சாதித்துக் காட்டியுள்ளார். இருப்பினும், பும்ரா போல அனைத்து பந்துவீச்சாளர்களும் செயல்பட்டால் மட்டுமே ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட், ரி20 போட்டிகளிலும் இந்திய அணி சிம்ம சொப்பனமாக திகழ முடியும்.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் இந்திய அணியின் செயல்பாடு கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. துடுப்பாட்டம்பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி வலுவாக வேண்டியது அவசியம் ஆகும். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தமட்டில் களத்தில் முழுமையாக 10 ஓவர்கள் வீசும் ஆற்றல், விக்கெட் எடுக்கும் திறன், கட்டுக்கோப்பாக வீசும் வியூகம் ஆகியவற்றை இந்திய வீரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகும்.

 

சிலம்பு

15/3/26

 


No comments: