Friday, June 26, 2026

ஜப்பானும் சுவீடனும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின


 

   ஸ்வீடனுடன் 1-1 என சமநிலை பெற்றதன் மூலம், குரூப் F-ல் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜப்பான், உலகக் கோப்பையின் கடைசி 32 அணிகள் மோதலில் பிறேஸிலை எதிர்கொள்ளும்.

டெக்சாஸில் 70,137 ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆட்டம், இரண்டாம் பாதியில் விறுவிறுப்படைந்தது. இடைவேளைக்குப் பிறகு டைசென் மேடா ஜப்பானுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார், ஆனால் சில நிமிடங்களில் அந்தோனி எலங்கா கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

காய நேரத்தில் அலெக்சாண்டர் இசாக் ,எலங்கா இருவரும் கோல் அடிக்கும் வாய்ப்பை நெருங்கியதால், ஆட்டத்தின் இறுதிவரை ஜப்பான் போராடிக்கொண்டிருந்தது.

போட்டி நிறைந்த இந்தக் குழுவில் நெதர்லாந்து ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் ஐந்து புள்ளிகளுடனும்,சுவீடன் நான்கு புள்ளிகளுடனும், துனிசியா பூஜ்ஜிய புள்ளிகளுடன் நாடு திரும்பியது.

சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகளில் ஒன்றாக, கிரஹாம் பாட்டரின் சுவீடனும் நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்திய நெதர்லாந்து, நாக்-அவுட் சுற்றுகளில் மான்டெர்ரேயில் மொராக்கோவை எதிர்கொள்ளும். அதே நேரத்தில், ஜப்பான் திங்கட்கிழமை ஹூஸ்டனில் பிறேஸிலுடன் மோதுகிறது.

ஜப்பான், ஸ்வீடன் ,நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் கடினமான குழுவில் வெற்றிபெறும் வாய்ப்புடன் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறங்கின.

 

No comments: