Monday, January 14, 2008

செல்லாக்காசு

செல்லாக்காசு

சூரன் ஏ.ரவிவர்மா


"எத்தினை முறை சொல்லிப்போட்டன். பேப்பர் படிச்சது போதும். முதல்லை கோயிலுக்குப் போட்டு வாங்கோ. “இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் பொறுமப்பா. சும்மா மேலாலை பாத்துப்போட்டு போறன்.

""அதுதான் நானும் சொல்லுறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை கோயிலிலை சனம் வரமுதல் போட்டு வாங்கோ. மூத்த பேத்தீன்ர பேத்டே நல்ல நாளில் வேலையை மின்கெடுத்தாதேங்கோ'.

சரி சரி குடையை எடுத்துவா கோயிலாலை வந்து மிச்சத்தைப் பாப்பம். கணேசமூர்த்தி வேண்டா வெறுப்பாக பேப்பரை மடித்து வைத்து விட்டு நிமிர்ந்த போது அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டுக்காரி முன்னால் நின்றாள்.

ஏதாவது வேலை இருந்தால் மட்டும் அவள் கணேசமூர்த்தியைத் தேடி வருவாள். என்ன வேலையாக இருந்தாலும் கோயிலாலை வந்துதான் செய்து கொடுக்க வேண்டும் என நினைத்தபடி கணேசமூர்த்தி அவளைப் பார்த்து சிரித்தான்.

"குட்மோர்னிங் மிஸ்டர் மூர்த்தி, நீங்கள் தந்த காசிலை ஒரு ரென்ருப்பி சரியான டமேஜ். எனக்கூறியபடிரு பத்து ரூபாவைத் தூக்கிக் காட்டினாள்.

இஞ்சாருங்கோ பத்து ரூபா இருந்தா அன்ரிக்குக் குடுங்கோ என்று மனைவியிடம் கூறினார் கணேசமூர்த்தி.

"நா நோ மிஸ்டர் மூர்த்தி ஏமாத்துக்காரர் தான் இப்ப அதிகம். நாங்க தான் கவனமாக பாத்து நடக்க வேணும்' என்று கூறிய வீட்டு உரிமையாளர் கணேசமூர்த்தியின் மனைவி கொடுத்த பத்து ரூபாவை வேண்டிக் கொண்டு சென்றாள்.

"கோயிலாலை வரேக்கை பத்து ரூபாவை மாத்திக் கொண்டு வாறன்' என்று கூறிவிட்டு மனைவியின் பதிலையும் எதிர்பாராது வீட்டை விட்டு வெளியேறினார். கணேசமூர்த்தி பத்து ரூபா மாற்றப்படவில்லை என்றால் அது பெரிய சரித்திரமாகிவிடும். கணேசமூர்த்தி காசை மாற்றமாட்டார் என்ற நம்பிக்கையில் மனைவி மனதுக்குள் சிரித்தாள்.

கணேசமூர்த்திக்கு மூன்று ஆண் பிள்ளைகள். கனடா, இத்தாலி, ஜேர்மனி நாடுகளில் மூவரும் குடும்பமாக இருக்கின்றார்கள். ஒருவர் அங்கேயே யாரோ ஒருத்தியைக் கட்டிவிட்டான். ஒருவனின் திருமணம் இந்தியாவிலும், அடுத்தவனின் திருமணம் சிங்கப்பூரிலும் நடந்தது. கடைசி காலத்திலை பெற்றோர் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளவத்தையில் வசதியான வீடொன்றில் அவர்களைக் குடியமர்த்தினார்கள் பிள்ளைகள். வாரத்திலை ஒரு நாளைக்கு மூன்று பேரும் பெற்றோருடன் பேசுவார்கள். கணேசமூர்த்தியின் மனைவிதான் முதல் கதைப்பாள். ஆடு குட்டி போட்டது. வாழை குலை போட்டது. வேலி அடைச்சது. ஊரிலை நடக்கும் கலியாணம், குழம்பின கலியாணம், காணி வாங்கினது, விற்றது என சகல செய்திகளும் தொலைபேசியில் கதைத்தபின் கணேசமூர்த்தியும் அவற்றையே திரும்பவும் கதைப்பாள்.

கொழும்பிலை நடக்கிற ஒரு நிகழ்ச்சியையும் கணேசமூர்த்தி தவறவிடமாட்டார். புதுப்படம் வெளியான உடனே வீடியோ கடைக்காரன் வீடு தேடி வந்து கொப்பியைக் குடுத்திட்டுப்போவான். சந்தியில் நிற்கும் ஆட்டோ ஒண்டு இவர்களை நம்பித்தான் நிற்கிறது. இருமினால், தும்மினால் உடனே காசு கட்டி முழுப் பரிசோதனையும் நடக்கும்.

கோயிலில் நிறைய சனம் என்றாலும் அங்குள்ள குருக்கள்மார் எல்லோருக்கும் கணேசமூர்த்தியைத் தெரியுமென்பதால் அவரை விஷேசமாகக் கவனித்தார்கள். அர்ச்சனைக்கு இருபத்தைந்து ரூபா ரிக்கெற் ஆனால், கணேசமூர்த்தி நூறு ரூபா தட்சணை கொத்தார். காளாஞ்சியை சொப்பிங் பாக்கில் போட்டுவிட்டு உண்டியலுக்கு காசு போட பொக்கற்றினுள் கையை விட்டு காசை எடுத்தபோது கிழிஞ்ச பத்து ரூபா தான் வந்தது. கையை பொத்தியபடி காசை மடித்து உண்டியலுக்குள் செருகினார். மனசு கேட்கவில்லை. கிழிஞ்ச பத்து ரூபாவை வைத்துவிட்டு ஐம்பது ரூபாவை எடுத்து உண்டியலினுள் போட்டார். செருப்பு பாதுகாப்பாளரிடம் துண்டையும் கிழிஞ்ச காசையும் கொடுத்துவிட்டு பராக்குப் பார்த்தார். அவன் செருப்பைக் கொடுத்துவிட்டு "ஐயா இந்தக் காசு சரியில்லை, இல்லாட்டி பிறகு வரேக்க தாருங்கோ' என்றான்.

"ஓ, தம்பி நான் கவனிக்கவில்லை. ஆரோ கூடாத காசு தந்திட்டாங்கள்' எனக்கூறியபடிரண்டு ரூபா நாணயத்தைக் கொடுத்தார்.

இரண்டு முயற்சியும் தோல்வியடைந்ததால் பஸ்காரனிடம் மாற்றலம் என கணேசமூர்த்தி நம்பினார். சனமில்லாமல் வந்த இரண்டு பஸ்களைத் தவறவிட்டுவிட்டு சனம் நிரம்பி வந்த பஸ்ஸில் ஏறினார் கணேசமூர்த்தி. வெள்ளவத்தை எனக்கூறிவிட்டு மனம் படபடக்க கொண்டக்டரைப் பார்த்தார் கணேசமூர்த்தி. கொடுத்த பத்து ரூபாவை வைத்துக் கொண்டு வேற ஆட்களிடம் காசை வேண்டிக்கொண்டு மிச்சக்காசையும் கொடுத்தான். கணேசமூர்த்தி கொடுத்த பத்து ரூபாவை புரட்டிப் புரட்டிப் பார்த்த கொண்டக்டர்.

"மாத்தையா இந்த சல்லி நீங்க தந்ததுதானே, தெஹிவலை, கல்கிø, பாணந்துற எல்லாம் தெரியுது' எனச்சிரித்தபஐ கூறினான். கொண்டக்டரிடமிருந்து பத்து ரூபாவை வாங்கிக் கொண்டு மூன்று ரூபா கொடுத்தார் கணேசமூர்த்தி. பஸ்ஸில் இருந்த எவரையும் நிமிர்ந்து பார்க்காது கூச்சத்துடன் நின்ற கணேசமூர்த்தி வெள்ளவத்தை பஸ் நிலையத்தில் இறங்கினார்.

கிழிந்த பத்து ரூபாவை மாற்றுவதற்கு கணேசமூர்த்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் மனைவிக்கு என்ன கூறுவது எனத் தெரியாது தவித்துக் கொண்டிருந்தவருக்கு எதிரே கடவுள் போல் சுவீப் ரிக்கெற்காரன் வந்தான். சுவீப் ரிக்கெற்காரன் கட்டாயம் மாற்றித்தருவான் என்ற நம்பிக்கையிலே அவனை மறித்து சுவீப் ரிக்கெற்றுகளைப் பார்த்தார். அவன் ஒவ்வொரு ரிக்கெற்றையும் கூறி அதற்குரிய பரிசுத்தொகையையும் கூறினான். ஏதோ நினைத்தவராக சுரண்டல் ரிக்கெற்றினை நகத்தால் சுரண்டத் தொடங்கினார். கணேசமூர்த்தி சுரண்டி முடிந்ததும் ரிக்கெற்றைப் பார்த்த அவன் பத்து ரூபா இருக்கு என்றான். இன்னொரு ரிக்கெற்றை சுரண்டினார். அதில் இருபது ரூபா இருந்தது. கணேசமூர்த்தி இரண்டு ரிக்கற்றுகளைச் சுரண்டினார். ஒன்றில் எதுவும் இல்லை. இன்னொன்றில் ஐம்பது ரூபா இருந்தது. சுவீப் ரிக்கற் விற்பவனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. இன்னும் ஐந்து ரிக்கெற்றுகளைச் சுரண்டுமாறு கூறினான். கணேசமூர்த்தி உசாராகிவிட்டார். ஏமாற்றப் போறான் என்ற சந்தேகத்தில் நான்கு அதிர்ஷ்ர லாபரிக்கற்றுக்களை எடுத்துக்கொண்டு ஒரு ரிக்கெற்றைச் சுரண்டினார். சுவீப் ரிக்கெற்காரன் "மாத்தையா ரண்டாயிரம் ரூபா கிடக்கு' என்று பெரிதாகச் சத்தம் போட்டான். கணேசமூர்த்தி திரும்பிப் பார்த்தார். ரிக்கெற்காரன் ஏமாந்திப் போடுவானே என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டது. கிடைச்சவரையில் இலாபம். இனியும் தொடர்ந்தால் சிலவேளை இதுவும் இல்லாமல் போய்விடும் என நினைத்த கணேசமூர்த்தி இரண்டாயிரம் ரூபா கிடைத்த ரிக்கெற்றை வேண்டிக்கொண்டு கிழிந்த பத்து ரூபாவைக் கொடுத்தார். “என்ன மாத்தையா இவ்வளவு காசு கிடைச்சிருக்கு கிழிச்ச காசே தாறியள். சந்தோசமாக காசு தர வேண்டாமா? என்று அவன் கேட்டான். அதை திருப்பி வாங்கிக் கொண்டு நூறு ரூபாவைக் கொடுத்து விட்டு கணேசமூர்த்தி வீட்டை நோக்கிச் சென்றார்.

கணேசமூர்த்தி வீட்டுக்குள் நுழைந்தது கூடத் தெரியாமல் அவரின் மனைவி தொலைக்காட்சியில் லயித்திருந்தாள். "இண்டைக்கு எனக்கு நல்ல முளுவியமப்பா' எனக்கூறியபடி சுரண்டல் ரிக்கெற்றில் இரண்டாயிரம் ரூபா விழுந்ததைக் கூறினார். "காலமை கிழிஞ்ச காசு வேண்டைக்கை என்னை முறைச்சுப் பாத்தனி. இப்ப இரண்டாயிரம் ரூபா கொண்டந்திட்டன். இதுக்கு என்ன சொல்லப் போறாய்' என்று சவால் விட்டவாறு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான சுரண்டல் ரிக்கெற்றையும் கிழிந்த பத்து ரூபாவையும் கணேசமூர்த்தி மனைவியிடம் கொடுத்தார். இதை நீங்களே வைத்திருங்கோ என்று பத்து ரூபாவை அவள் திருப்பிக் கொடுத்தாள்.

நன்றி : மல்லிகை 2004,ஏப்ரல்
சூரியன்.கொம்.

2 comments:

Mayooran said...

நல்லதொரு கதை. பாராட்டுக்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

சுவாரஸ்யமான கதை. ரவி அண்ணாவின் கதைகளில் இவ்வாறான இனிக்கும் சுவாரஸ்யங்கள் இருப்பது தனித்துவம்தான்.