
தமிழ் இனத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளை பகிரங்கப்படுத்திய திருமலைச் செய்தியாளர் எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. கண் துடைப்பில் நடந்த விசாரணைகள் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மறைந்து விட்டன.
குருமன் வெளியில் 12.12.1969 ஆம் ஆண்டு பிறந்த சுகிர்தராஜன் குருமன்வெளி சிவசக்தி வித்தியாலயம், மட்டக்களப்பு இந்து கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் கலை இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சுகிர்தராஜன் கவிதை, கட்டுரை, விவாதப் போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசில்களைப் பெற்றார்.
1997 ஆம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபையில் இணைந்து கொண்டார். அங்கு பல நாடகங்களை மேடையேற்றி தங்கப் பதக்கம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு பதவி உயர்வுடன் திருகோணமலை துறைமுகத்தில் கடமையை பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் வசிக்கும் போது பகுதி நேரப் பத்திரிகையாளராக தன்னை மாற்றிக் கொண்டார். சுடர் ஒளி, உதயன் ஆகிய பத்திரிகைகளில் எஸ். எஸ். ஆர்., மனோ ரஹ்மான் ஆகிய பெயர்களில் கட்டுரைகளை எழுதினார்.
வீரகேசரி வர வெளியீட்டில் மிதுஷன் என்ற பெயரிலும் மெட்ரோ நியூஸில் ஈழவன் என்ற பெயரிலும் கட்டுரைகளை எழுதினார்.
சுகிர்தராஜன் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சமூகத்தின் அவலங்களையும், ஊழல், அரசாங்கத்தின் அத்துமீறல்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், படைகளின் அடாவடிகள் என்பனவற்றை ஆதாரங்களுடன் செய்தியாகக் கொடுத்து பத்திரிகை தர்மத்தை வெளிப்படுத்தினார்.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை தகுந்த ஆதாரங்களுடன் சுகிர்தராஜன் பத்திரிகையில் வெளிப்படுத்தினார்.
சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் அப்படியே முடங்கிப் போயுள்ளது.
வாள் முனையை விட கூரானது பேனா முனை என்று ஏட்டில் இருந்தாலும் பேனா முனையை அடக்குவது துப்பாக்கி முனை என்பது உணர்ந்து கொண்டு துணிவுடன் திருமலைச் செய்திகளை வெளிக் கொணர்ந்தார்.
சுகிர்தராஜனின் மறைவு பத்திரிகை உலகுக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும்.
ரமணி
வீரகேசரி வார வெளியீடு, 27.01.2008
1 comment:
//திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை தகுந்த ஆதாரங்களுடன் சுகிர்தராஜன் பத்திரிகையில் வெளிப்படுத்தினார்.
சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் அப்படியே முடங்கிப் போயுள்ளது.
வாள் முனையை விட கூரானது பேனா முனை என்று ஏட்டில் இருந்தாலும் பேனா முனையை அடக்குவது துப்பாக்கி முனை என்பது உணர்ந்து கொண்டு துணிவுடன் திருமலைச் செய்திகளை வெளிக் கொணர்ந்தார்.
/
சுகிர்தராஜனை நினைவில் வைத்து எழுதியமைக்கும் அவரது ஊடகப்பணியை வலைத்தளத்தினூடாக எடுத்துக்காட்டியதற்கும் நன்றிகள் அண்ணா.
யுத்தப் பிரதேசங்களைப் பொருத்தவரையில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. தம் இனத்தின் துளிர்வுக்காக விடிவுக்காக துரோகிககளினதும் விஷமிகளினதும் இருட்டுவேலைகளை பேனாமுனையில் வெளிச்சமிட்டுக்காட்டிய பெரும் பணியை சுகிர்தராஜன் தற்துணிவுடன் செய்தமையை நாம் எவ்வாறு மறக்க முடியும். சில இழப்புக்கள் தந்த இடைவெளி நிரப்பமுடியாத வெற்றிடமாக நீண்டகாலம் இருந்துவருவதை நாம் அறிவோம். சுகிர்தராஜனின் இழப்பும் அவ்வாறுதான். பல்கலை மாணவர்கள் ஐவரின் கொலைச் சம்பவத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய ஆற்றலே தனிதான். மரணம் எப்போதும் வரலாம் அப்போது மரணத்தை வென்று சரித்திரம் படைப்பது சிலர் மட்டுந்தான். சுகிர்தராஜனின் இலக்கு வாழும் தமிழ்மக்களால் சாதிக்கப்படவேண்டியதொன்றாகும்.
Post a Comment