Thursday, February 7, 2008

சந்தர்ப்பவாத கூட்டணியால் தடுமாறுகிறது தமிழக அரசு


இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி இல்லாது வெற்றி பெறமுடியாத நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி சேர்த்து போட்டியிடுவார்கள். தேர்தல் முடிந்ததும் கூட்டணி என்பது தேர்தலுக்காகவே அமைக்கப்பட்டது என்றும் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறி, ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிப்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரிக் கட்சிகளும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தலையிடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இணைந்ததை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி தோல்வி அடைந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்துடனான கூட்டணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டுச் சேரலாம் என்று சிலர் கருதினார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி இமாலாய வெற்றி பெற்றதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணியில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று இளங்கோவன் போன்ற தலைவர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர். கருணõநிதியின் மீது சோனியாகாந்தி மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். ஆகையினால் இளங்கோவன் போன்றவர்களின் குரல் தமிழகத்துடன் அடங்கிவிடுகின்றது.
ஆதரித்தால் முழுமனதுடன் எந்தவித மான தடங் களும் இல்லாது ஆதரிப்பார். எதிர்த்தாலும் அதேபோன்று உறுதியுடன் எதிர்ப்பார். இது முதல்வர் கருணாநிதியின் குண இயல்பு. ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மௌலி தெரிவித்துள்ளார்.
இது இளங்கோவன் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த அறிவித்தலினால் அதிர்ச்சி அடைந்தவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸும் ஒருவர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் திராவிட முன்னேற்றக்கழகம் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது திராவிட முன்னேற்றக்கழகம் இருந்தால் இருக்கட்டும் என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.

திராவிட முன்னேற்றக்கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதையே ஏனைய கட்சித் தலைவர்கள் விரும்புவார்கள். இந்த இரண்டு கட்சிகளும் இல்லையென்றால் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க பல தலைவர்கள் ஆவலாக உள்ளனர். கூட்டணி சேர்வதில்லை என்ற வீறாப்புடன் விஜயகாந்த் இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வர மாட்டாது. ஆகையினால், திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், விஜயகாந்தின் கட்சி ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைப்பதையே டில்லித் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

டாக்டர் ராமதாஸின் கனவு நனவாகும் நிலை இப்போதைக்கு தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவின் வடமாநிலங்களில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சி, தென் பகுதிகளில் தனது இருப்பைத் தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருந்து இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி வெளியேறமாட்டாது.

தமிழக அரசியலுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற ஆசை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது. முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவர்களாக உள்ளனர். விஜயகாந்த் வளர்ந்து வருகிறார்.

விஜயகாந்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதில் முதல்வரும் ஜெயலலிதாவும் தம்மால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த முயற்சிகளையும் மீறி விஜயகாந்த் விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறார்.

சென்னை லயோலாக் கல்லூரி அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜயகாந்த்துக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் செல்வாக்கு சரிந்துள்ளது.

தமிழக சட்ட மன்றத்தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். ஏனைய கட்சிகளின் வாக்குகள் விஜயகாந்தின் கட்சியினால் பிரிக்கப்பட்டது. விஜயகாந்தின் கட்சியினர் எவரும் வெற்றி பெறவில்லை. ஆகையினால் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து பேர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் விஜயகாந்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வீரகேசரி வார வெளியீடு 06.01.2008
வர்மா

8 comments:

tommoy said...

////நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து பேர் வெற்றி பெற்றால்//

நல்ல நகைச்சுவையோடு முடித்துள்ளீர்கள். அருமை..

Anonymous said...

நல்லதை நடத்திட நிலைத்திட நானிலம் தயாராகிறதா!.

நல்லது! நடக்கட்டும்!!
நல்லது! நடக்கட்டும்!!

Anonymous said...

விஜயகாந்த் கட்சிக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கிறார்களோ! இல்லையோ!

விஜயகாந்த் போன்றவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வது தமிழ்நாட்டுக்கு அவமானம்...

வர்மா said...

நல்லது எங்கே நடக்கப்போகிறது ?

வர்மா said...

முரளி said..
. நல்ல நகைச்சுவையோடு முடித்துள்ளீர்கள். அருமை..

முதல்வரின் வாரிசுகள் ஜெயலலிதா விஜெயகாந்த் அன்புமணி சரத்குமார் தமிழககாங்கிரஸ் கோஸ்டிகள் எல்லாரும் முதல்வர்கனவில் மிதக்கிறார்கள் அதுதான் நானும்......

Thamizhan said...

தொண்டர்களாக இருந்து தலைவர்கள் ஆவது நிலைத்து நிற்கும்.
தலைவர்களாகவேத் தொடங்கி தொண்டு செய்வேன் என்று ஏமாற்ற நினைப்பது
எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?
பணம் பாதாளம் வரை பாயும்.ஆனால்
நீடிக்குமா?நிலைக்குமா?
அரசியலுக்கு வருபவர்கள் முதலில் அவர்கள் தெரு,ஊர் என்று தொண்டைத் தொடங்கி வளர்ந்ததெல்லாம் என்ன வாயிற்று?

வர்மா said...

தொண்டர்கள் தலைவர்கள் ஆகமுடியாத நிலை உள்ளது. வாரிசுஅரசியல்தமிழனிந்தன்மானத்தைவிலைபேசுகிறது.

bala said...

//தொண்டர்கள் தலைவர்கள் ஆகமுடியாத நிலை உள்ளது. வாரிசுஅரசியல்தமிழனிந்தன்மானத்தைவிலைபேசுகிறது//

வர்மா அய்யா,
என்ன, வாரிசு அரசியல் தமிழன் தன் மானத்துக்கு, விலை பேசுகிறதா?என்ன ஆணவம்?தமிழன், தன் மானத்தை பார்ப்பனீயத்திடம் அடகு வைத்து விட்டதாக பெரியாரிஸ்ட்களும்,ம க இ க பொலி பீரோ ஆசாமிகளும் கூப்பாடு போடுகின்றனரே,அந்த பார்ப்பனீயத்திடமா மஞ்ச துண்டின் வாரிசு அரசியல் தன்மானத்துக்கு விலை பேசுகிறது? இதை விட தமிழன் தன்மானம் தரம் தாழ முடியுமா?நெஞ்சம் பதறுகிறது அய்யா.

பாலா