Sunday, February 10, 2008

போராடத் தயாராகிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்

ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் தமது கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றனர். அதேவேளை 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் கூறத் தொடங்கி விட்டார்.
2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கூட்டணி இல்லாது தனி ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது முடியாத காரியம். பலமான கூட்டணி அமைத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணை இன்றி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. இந்த இரண்டு கழகங்களையும் எதிர்த்து மூன்றாவது அணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்று கிருஷ்ணசாமி நினைக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்குப் போட்டியாக விஜயகாந்த் வளர்ந்து வருகிறார். விஜயகாந்தைத் தவிர்த்து மூன்றாவது அணி அமைக்க முடியாது.
விஜயகாந்த்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்தால் சிலவேளை வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவியை விஜயகாந்த் விட்டுக் கொடுக்கமாட்டார்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் ஆட்சியில் இருந்து வெளியேறி 40 ஆண்டுகளாகி விட்டது. இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்படவில்லை. காங்கிரஸின் பாரம்பரியம் தமிழகத்தில் இல்லாமல் போய் விடும் சூழ்நிலை எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடமேற வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர்.
தென் மண்டல கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் போராட்ட வேகம் போதாது என்று குறை கூறியுள்ளனர். குமரி முதல் மதுரை வரையிலான எண்பது மாவட்டங்களின் பிரமுகர்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
காங்கிரஸ் கட்சி இதுவரை செய்த தவறுகள் எல்லாவற்றையும் அங்கு இருந்தவர்ககள் பட்டியலிட்டனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வதுடன் தனது பணி முடிந்து விட்டது என தாம் எண்ணியதை காலம் கடந்து காங்கிரஸ் கட்சி உணர்ந்து கொண்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகளை விடுத்துக் கொண்டு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பாதையில் சென்று மக்களின் மனதைக் கவர தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுமாறு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளமை அரசியல் அவதானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முதல்வரும், பா. சிதம்பரமும் மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். தமிழக அரசுக்கு எதிராக போராடும்படி அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்ததன் மூலம் முதல்வரையும் மீறி சில அத்துமீறல்கள் நடப்பதை உணரக் கூடியதாக உள்ளது.
அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கின் உரை அனுபவம் உள்ள அரசியல்வாதிகளை உலுக்கி விட்டது. தமிழக காங்கிரஸுக்கு புது இரத்தம் பாய்ச்சப்படவில்லை என்ற உண்மையை பகிரங்கப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் குறைவது மிக மிக அபூர்வமாக உள்ளது. இளைஞர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற உருப்படியான ஆலோசனையை கார்த்திக் சிதம்பரம் முன் வைத்தார்.
தமிழகத்தின் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு கும்பல் கும்பலாக ஆட்கள் சேருவார்கள். கட்சித் தலைவருடன் தொண்டர்கள் இணையும் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும். ஆனால், தமிழக காங்கிரஸில் பழைய அரசியல்வாதிகூட சேருவதாகக் காணோம். மக்களைக் கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி செயற்படாததே இதற்கு முக்கிய காரணம்.
தென் மாவட்ட காங்கிரஸ் கலந்தாய்வுக் கூட்டத்திலும் கோஷ்டிகளின் ஆதிக்கம் தலைதூக்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானதேசிகன் சுதர்ஸன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மயூரா ஜெயக்குமார் உட்பட பல தலைவர்கள் இருந்தும் அவர்கள் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காமல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது. அதே ஆர்வம் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் மனதில் இல்லாதது துர்அதிஷ்டமே. இந்த ஆர்ப்பாட்டம் பேச்சளவில் முடிந்து விடுமா? அல்லது செயலிலும் காட்டப்படுமா என்பதை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

வர்மா
வீரகேசரி வார வெளியீடு: 13.01.2008

4 comments:

Anonymous said...

//இந்த ஆர்ப்பாட்டம் பேச்சளவில் முடிந்து விடுமா? அல்லது செயலிலும் காட்டப்படுமா என்பதை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள்.//

ஹி..ஹி...செயலிலெல்லாம் காட்டப்படாது. கலைஞரு ஒரு போன் போட்டர்னா டெல்லில .:ப்யூஸப் புடுங்கிடுவாங்க. அத்தோட ஆட்டம் க்ளோஸு. அம்புடுதான் நம்ப வீரம்.
:-)))

வர்மா said...

ப்யூஸ் இருக்கும் இடம் உங்களுக்கும் தெரியுமா? வருகைக்குநன்றி

Anonymous said...

முதல்ல கிருஷ்ணசாமிக்கு நாக்கில இருக்கிற சனியனை ஓட்டனும். அவரது கட்சித் தலைவர் பதவியே ஆட்டங்காணுது. அதை முதல்ல காப்பாற்ற போராடச் சொல்லங்க.

புள்ளிராஜா

வர்மா said...

கிருஷ்ணசாமியின் நாக்கிலை கரும்புள்ளி அதுதானே அவரை ஆட்டிப்படைக்கிறது