Tuesday, February 12, 2008

மோடியின் வருகையால் உற்சாகமா பா.ஜ.க.



வர்மா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தின் பின்னர் தமிழக அரசியலில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. பாரதீய ஜனதாக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றன.
காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன நரேந்திர மோடியின் தமிழக விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தை முன்னிட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த மதக்கலவரங்களுக்கு நரேந்திர மோடியின் மீதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குஜராத்தில் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்தபடியினால் குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நரேந்திர மோடியின் வெற்றி காங்கிரஸ் கட்சியை மட்டுமல்லாது பாரதீய ஜனதாக் கட்சியையும் அதிர்ச்சியடையச் செய்தது.
துக்ளக் சஞ்சிகையின் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவே நரேந்திர மோடி தமிழகத்துக்கு விஜயம் செய்தார். காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடும் காமராஜர் அரங்கத்தில் துக்ளக்கின் ஆண்டு விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிரியான மோடி பங்குபற்றும் நிகழ்ச்சிக்கு காமராஜர் அரங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டதனால் காங்கிரஸ் கட்சியினர் கொதித்துப் போயுள்ளனர்.
துக்ளக் சஞ்சிகையின் ஆண்டு விழாவில் நரேந்திர மோடி பங்குபற்றியதை விட நரேந்திர மோடி ஜெயலலிதா சந்திப்புத்தான் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் சுமார் முக்கால் மணி நேரம் பேசினார்கள். கட்சிப் பிரமுகர்கள் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் இருவரும் பேசியதால் அவர்களின் பேச்சு விபரம் வெளியில் வரவில்லை. ஆனால், ஏராளமான ஊகங்கள் கசியத் தொடங்கி விட்டன.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும், அ.தி.மு.கவும் இணைந்து போட்டியிடும் என்ற கருத்து மேலோங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி சேர, அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் போட்டி போடுகின்றன. பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு தமிழகத்தின் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
காங்கிரஸ் கட்சியையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இப்போதைக்கு பிரிக்க முடியாது. தமது பலம், பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்ட இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுப்புகளுடன் கூட்டணியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
நரேந்திர மோடிக்கு மிகப் பிரமாண்டமானதொரு விருந்தை ஜெயலலிதா வழங்கினார். கடந்த முறை நரேந்திர மோடி வெற்றி பெற்றதும் அவருக்கு முதலில் வாழ்த்துத் தெரிவித்தவர் ஜெயலலிதா. இந்த முறை குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோடியின் முதல் விஜயம் இதுவாகும்.
இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஜெயலலிதா பாரதீய ஜனதாக் கட்சியின் மீது நாட்டம் கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்த ஜெயலலிதா, இப்போது பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்வதற்கு முயற்சிக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் இணைந்தால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதில் ஒட்டிக் கொள்ளும்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்களின் பொங்கல் செய்திகள் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பச்சைக்கொடி காட்டி விட்டதென்றே நினைக்கத் தோன்றுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை இருக்கையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டணி இல்லாது தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். வடுஜன் சமாஜக் கட்சித் தலைவி மாயாவதி. தலித், பிராமணர் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார் மாயாவதி.மாயாவதியுடன் கூட்டணி சேர தமிழகத்தின் இரு கட்சிகள் விரும்புகின்றன.
ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட மாயாவதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியும் விஜயகாந்தும் இணைந்தால் பலம்மிக்க மூன்றாவது அணி தமிழகத்தில் உருவாகிவிடும்.

வர்மா

வீரகேசரி வார வெளியீடு: 20.01.2008

1 comment:

Thamiz Priyan said...

//விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட மாயாவதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியும் விஜயகாந்தும் இணைந்தால் பலம்மிக்க மூன்றாவது அணி தமிழகத்தில் உருவாகிவிடும்.//

நல்ல நகைச்சுவையான எழுத்தாளர் போல இருக்கு. :)