Thursday, May 8, 2008

தமிழக அரசியல் கட்சிகளிடையே இணையத்தளத்தால் எழுந்த சலசலப்பு




மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ளன. டி.ஆர். பாலுவின் மகன் மாரி நடத்தும் நிறுவனங்களுக்கு எரிவாயு பெறுவதற்காக மத்திய அரசை அவர் வற்புறுத்தி உள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.
டி.ஆர். பாலுவின் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் சிபாரிசு செய்துள்ளது. ஆகையால் பிரதமர் உரிய பதிலளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
டி.ஆர். பாலு மீதான இந்தக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அலுவல்கள் இரண்டு நாட்களாக முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை டி.ஆர். பாலு மறுக்கவில்லை. எனது மகன் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி பெற்றோலியத்துறை அமைச்சரிடம் கேட்டது உண்மைதான். இதில் தவறு ஒன்றும் இல்லை. இரண்டு நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நன்மை கருதி சலுகை விலையில் எரிபொருள் கேட்டதில் எதுவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஒருவர் தனது சொந்த நிறுவனத்துக்கு சலுகை காட்டும்படி கேட்டது தவறுதான் என்பதில் அவரை எதிர்ப்பவர்கள் உறுதியாக உள்ளனர். நஷ்டம் காரணமாக எத்தனையோ நிறுவனங்கள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சலுகை காட்டும்படி டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தாரா என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன்தான் இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி நியாயத்தைக் கேட்டார். பாரதீய ஜனதாக் கட்சி, சமாஜவாடி ஆகிய கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் குரல் கொடுத்தன.
தனது குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கும்படி டி.ஆர். பாலு பிரதமர் அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையின் பிரகாரம் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் பெற்றோலியத்துறை அமைச்சருக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எட்டுக் கடிதங்களின் நகல்களையும் வெளியிட்டு டி.ஆர். பாலுவை மேலும் சிக்கலில் வீழ்த்தியுள்ளது. கிங்ஸ் ஒவ் இந்தியா கோப்பரேசன், கிங்ஸ் இந்தியா பவர் கோப்பரேசன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சராவதற்காக இதனது நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் டி.ஆர். பாலு.
பாரதீய ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர். பாலுவின் மகன் ராஜ்குமாரின் பொறுப்பில் இருந்த கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம், மத்திய பெற்றோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தது. டி.ஆர். பாலுவின் மகனின் நிறுவனத்துக்கு 10 ஆயிரம் கியூபெக் மீற்றர் எரிவாயு சலுகை விலையில் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. டி. ஆர். பாலுவின் மகன்களான ராஜ்குமார், செல்வக்குமார் ஆகிய இருவரும் இரண்டு நிறுவனங்களுக்கும் தலைவரானார்கள். இந்த நிறுவனங்களில் அதிக பங்குகளை டி.ஆர். பாலுவின் மனைவியும் உறவினர்களும் வைத்திருக்கின்றனர். ஆகையால் ஏனைய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தன.
பாரதீய ஜனதாகக் கட்சியின் காலத்திலே ஆரம்பமான இப்பிரச்சினை இன்றுதான் சந்திக்கு வந்துள்ளது. டி.ஆர்.பாலுவின் மகனின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாரதீய ஜனதாக் கட்சியே இன்று டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் கூச்சலிடுகிறது.
நலிவடைந்த நிறுவனங்கள் என மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் கிங்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் பாக்கி வைத்திருக்கும் நலிவடைந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு சலுகை காட்ட முற்படுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஆனால் அமைச்சர் டி.ஆர்.பாலுவின் விளக்கமோ வேறு வகையாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகியபோது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தேன். என்னையே பழிவாங்குவதற்காகவே நலிவடைந்த நிறுவனங்களின் பட்டியலில் எனது மகனின் நிறுவனத்தை இணைத்தது அந்த நிறுவனத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பங்குதாரர் ஆகியோரின் வேண்டுதலின் பேரில்தான் சலுகை விலையில் எரிவாயு வழங்க கோரிக்கை விடுத்தேன். இதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கிறார் டி.ஆர். பாலு.
சேது சமுத்திரத் திட்டத்தில் கடலில் மணலைத் தோண்டும் ஒப்பந்தம் திரும்பத் தரப்படாத வங்கிக் கடன், மானிய விலையில் மீன்பிடி படகுகளை வாங்கி விற்றது போன்ற பல பிரச்சினைகளை டி.ஆர். பாலுவுக்கு எதிராக வெளிக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
முதல்வரின் மகனும் தமிழக அமைச்சருமான மு.கா. ஸ்டாலினின் அதிகாரபூர்வமான இணையதளமொன்றின் மூலம் மக்களுடன் மிக நெருக்கமாகியுள்ளார். எமக்கே ஸ்டாலின்.நெட்(www.mkstalin.net ) என்ற அந்த இணையத்தளத்தில் ஸ்டாலினின் சேவைகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் என்பன விலாவாரியாக உள்ளன.
மக்கள் கருத்துகளுக்கு அந்த இணையத்தளத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வெளிவரும் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் இணையத்தளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை பற்றி வெளியான விமர்சனம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் டாக்டர் ராமதாஸுக்கு அக்கறை இல்லை. தனது கட்சியை வளர்ப்பதிலும் குடும்பத்தை காப்பாற்றுவதிலுமே டாக்டர் ராமதாஸ் குறியாக இருக்கிறார் என்று இணையத்தள வாசகர்கள் சிலர் டாக்டர் ராமதாஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
டாக்டர் ராமதாஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் உருவாகுவதும் அவை அடங்கிப் போவதும் வழமையானதே. இந்த நிலையில் இணையத்தளக் கருத்துக்கள் ராமதாஸைப் பற்றி அவதூறு பரப்புகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இணையத்தளத்தில் வெளியாகும் கருத்துக்கள் வாசகர்களுடையதே தவிர அவற்றுக்கும் இணையத்தளத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று இணையத்தளப் பொறுப்பாளராக முஹம்மது ஜின்னா கூறியுள்ளார்.
இணையத்தளம் கருத்துக்களைப் படித்து அதற்குரிய பதில்களை ஸ்டாலின் எழுதி வருகிறார். இணையத்தளத்தில் வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் கருத்தை ராமதாஸும் அறியவேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய கருத்துக்கள் வெளியாவதாக உணர முடிகிறது.
மக்களிடமும் தொண்டர்களிடமும் நெருங்கிப் பழகும் ஸ்டாலினை இந்த இணையத்தளம் மேலும் நெருக்கமாக்கி உள்ளது. அமைச்சர் ஸ்டாலினிடம் நேரில் செல்ல முடியாத பல கருத்துக்களை இணைய தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஸ்டாலினின் தொழில் நுட்ப வளர்ச்சி பழைய தலைவர்களை கதி கலங்க வைத்துள்ளது.

வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;04.05.2008

5 comments:

வெ. ஜெயகணபதி said...

If I type www.mkstalin.com, It is not going...
May I know the right website address pls..?

வர்மா said...

நண்பரே www.mkstalin.net என்ற வெப்சைட்டை முயற்சி செய்யுங்கள்

Theodore said...

I pray to God for the success of Mr.Stalin's good efforts to bring 100 % success to his fantastic alliance of DMK-Congress-Viduthalai Siruthaikal in Tamilnadu and Pondi

Anonymous said...

dear sir this is manoj r pandiyaat,iam very happy to see and hear your enthusiastic performance for the welfare of the people,may god bess you and i always remember you in my prayer, thank you manoj r pandiyaat coimbatore

Unknown said...

hai