Monday, November 23, 2009

தி.மு.க.வை ஒதுக்குகிறது காங்கிரஸ்கூட்டணியை விரும்புகிறது தி.மு.க.


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. பல விடயங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை பெற்றே நிறைவேற்றி வந்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தெரியாமலே பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர்திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கத் தொடங்கியது காங்கிரஸ் கட்சி. மத்திய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஒதுக்குவதில் ஆரம்பித்த பிரச்சினை முல்லைப் பெரியாறு அணை விவகாரம் வரை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டமடைந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியுடனான ஆலோசனையின் பின்னரே சகல முடிவுகளும் எடுக்கப்பட்டன. பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கை அரசு அறிவித்த பின்னர் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் இன்றி பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்துக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர். ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தின் பின்னர் இந் நடைமுறை மாற்றம் பெற்றது. தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. தொலைபேசியில்கூட அவருடன் உரையாடவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆஷாத் சென்னைக்குச் சென்றபோது முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான உறவு பலமாக இருக்கிறது, கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று பேட்டியளித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியை சந்திப்பது சம்பிரதாய முறையாக இருந்து வந்தது.
இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரும்போது அல்லது இலங்கையில் இருந்து டில்லிக்குச் செல்லும்போது தமிழக முதல்வரைச் சந்திப்பது சம்பிரதாயமாக இருந்து வந்தது. இந்தச் சம்பிரதாய வழமையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் காங்கிரஸ் மேலிடம் ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் இதனைப் புரிந்து கொண்டுள்ளது. ஆனால், கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடம் அடிக்கடி உரத்துக் கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் போக்கைப் புரிந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ் பிரமுகரான இளங்கோவன், தனது வெறுப்பைத் தீவிரமாக்கி உள்ளார்.
திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்த வைபவம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு உரையாற்றிவர்களில் அதிகமானோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை எச்சரிக்கும் தொனியிலேயே தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
திருநாவுக்கரசருக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. எம்.ஜி. ஆரின் விசுவாசிகளும் திருநாவுக்கரசரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இன்னமும் அவர் மீது மதிப்பு வைத்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
ஆனால், அவரின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியின் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிபீடம் ஏற முடியாது என்பது வெளிப்படையானது.
மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அமைச்சுப் பதவி வழங்கி உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி குரலெழுப்பி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் குரலை சோனியா காந்தியின் துணையுடன் தமிழக முதல்வர் கருணாநிதி அடக்கி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும்போது காங்கிரஸ் தலைமைப் பீடம் தலையிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை சாந்தப்படுத்துவது வழமையானது. தமிழக காங்கிரஸ் தலைவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விமர்சிக்கும் போது தலைமைப் பீடம் எதுவும் சொல்வதில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அவமானங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி தொடர்கிறது என்று அவ்வப்போது அறிக்கை விடுத்து வருகிறது.
தமிழக அரசாங்கத்தில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கத் துடிக்கின்றனர். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வராகவும் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இருக்கலாம் என்று காங்கிரஸ் விரும்புகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்வரை விஜயகாந்த் காங்கிரஸுடன் சேர மாட்டார்.
ஆகையினால், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கும் கைங்கரியத்தை காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். என்னதான் பிரச்சினை ஏற்பட்டாலும் கூட்டணியில் இருந்து இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. இதே போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக கைவிட காங்கிரஸ் கட்சியும் தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரித்ததனால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்ற கருத்து உள்ளது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே பகிஷ்கரித்த இடைத் தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளை விஜயகாந்தின் கட்சி பெறவில்லை. இந் நிலையில் விஜயகாந்துடன் இணைந்தாலும் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸுக்கு சிரமமானதே.
காங்கிரஸுடனான கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவர்.
இதேபோன்று ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ராமதாஸும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகக் கூடும். இதுவரை செய்த சாதனைகளை முன்வைத்து புதிய வியூகத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கும்.
வெளியிலே பூகம்பங்கள் ஏற்படும் வேளை இரண்டு கட்சித் தலைவர்களும் எதுவும் நடக்காதது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சி காட்டிய ஆதரவினால் கூட்டணிக் கட்சிகளைத் தூக்கி எறிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான பனிப் போர் வெளிச்சத்துக்கு வரும் நாளை எதிர்க் கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 22/11/09

No comments: