Monday, November 30, 2009

ஜெயலலிதாவின் முடிவால்உற்சாகமான தொண்டர்கள்


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதனால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அனிதா ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்தார். வந்தவாசி தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஜெயராமன் மரணமானதால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வந்தவாசி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள்.
தமிழக அரசின் செல்வாக்கு, மின்னணு இயந்திரத்தில் முறைகேடு, பணத்துக்கு வாக்காளர்களை வாங்குவது போன்ற குற்றச்சாட்டுகளினால் கடந்த முறை நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களைப் புறக்கணித்த ஜெயலலிதா திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலில் அறிந்து தேர்தலில் முனைப்புக் காட்டி உள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை நம்பி களமிறங்கிய விஜயகாந்த் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறவில்லை. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் மும்முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழமைபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரம் செய்யவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உட்பூசல்கள் அதிகரித்து வரும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக ஆர்வமுடன் பிரசாரம் செய்யும் தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? ஒப்புக்காகப் பிரசாரம் செய்பவர்கள் யார் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரப் பணிகளை ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கு வெளிக்காட்ட வேண்டிய கட்டாய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத்தேர்தலுக்கு முகம்
கொடுக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இடைத்தேர்தலின் பிரதான பிரசாரமாக எதிர்க்கட்சிகளினால் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகவும் கர்நாடக அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் மத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதை பிரதான எதிர்க்கட்சிகள் மக்கள் முன் விளக்கத் தொடங்கிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அமைச்சின் செயற்பாட்டுக்கு எதிராக தான் எடுத்திருக்கும் நடவடிக்கையை மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்த இடைத்தேர்தலில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்தின் கட்சி அடுத்த மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாததனால் விஜயகாந்தின் கட்சிக்கு வழமையைவிட கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் கட்சிக்கு கிடைப்பது சந்தேகம்.
விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கையினால் வழமை போன்று வாக்குகள் சிதறுமே தவிர அவரது கட்சி வேட்பாளர் வெற்றி பெறமாட்டார்.
வந்தவாசி தேர்தல் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமானது. வந்தவாசியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பது சிரமமானது. வன்னியர் அதிகமுள்ள தொகுதி வந்தவாசி.
வன்னிய சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனி மரமாக நிற்கிறது. எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தவாசியிலும் செல்வாக்கு உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் குறைந்து கொண்டு போவதை கடந்த கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் முயற்சி செய்கின்றன.
திருச்செந்தூர் தொகுதியின் மீது தமிழகத்தின் பார்வை விழுந்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியுமே கடந்த தடவை திருச்செந்தூர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானித்தன.
இம்முறை அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியா, திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெறப் போகிறது என்பதை அறிவதற்கு தமிழகம் ஆவலுடன் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூரில் களமிறக்கியுள்ளது. அம்மன்டி, நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு துணையாக நின்றவர் அம்மன்டி நாராயணன். தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதா கிருஷ்ணன் அரசியலுக்கு அறிமுகமாகியபோது அவருக்கு பலத்த எதிர்ப்பு வந்தது.
அந்த எதிர்ப்புகளை சமாளித்து அனிதா
ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ததில் அம்மன்டி நாராயணனுக்கும் பங்கு உள்ளது. அம்மன்டி நாராயணனை வேட்பாளராக அறிவித்து அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கை உடைத்துள்ளார் ஜெயலலிதா.
திருசெந்தூர்த் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரனைத் தோற்கடித்தார்.
2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஏ.டி.கே. ஜெயசீலன் போட்டியிட்டு 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுவரை 12 பொதுத் தேர்தலையும் ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்த திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதி இப்போது இரண்டாவது இடைத்தேர்தலுக்குத் தயாராகி விட்டது.
13 தேர்தல்களைச் சந்தித்த திருச்செந்தூர் தொகுதியில் ஏழு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகமும் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையே திருச்செந்தூரில் ஓங்கி உள்ளது. கட்சியின் செல்வாக்கா, வேட்பாளரின் செல்வாக்கா திருச்செந்தூர் தொகுதியில் வெற்றியைத் தேடித் தரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/11/09

No comments: