Sunday, December 27, 2009

உலகக்கிண்ணம்2010


ஹொண்டூராஸ்
வட அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தெரிவான மூன்றாவது நாடு ஹொண்டூராஸ். அரசியல் மாற்றத்தினால் சோர்வடைந்திருந்த ஹொண்டூராஸ் நாட்டின் மக்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவை மட்டுமே விளையாடுவதற்கு தகுதி பெற்ற ஹொண்டூராஸ் 28 வருடங்களின் பின்னர் மூன்றாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 10 வெற்றியையும் ஆறு தோல்விகளையும் சந்தித்த ஹொண்டூராஸ் இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது.
32 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 18 கோல்கள் அடிக்கப்பட்டன. 38 தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது.
நான்காவது சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஹொண்டூராஸ் ஐந்து வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. 17 கோல்கள் அடித்த ஹொண்டூராஸுக்கு எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன.
16 புள்ளிகளைப் பெற்றது. நான்காவது சுற்றில் கடைசிப் போட்டியில் எல்சல்வடோரை 1 0 என்ற கோல்களினால் வெற்றி பெற்றது. ஹொண்டூராஸ் மக்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர்.
அமெரிக்காவும் மெக்ஸிக்கோவும் தெரிவாகி விட்டன. அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டியில் கோஸ்ரரிக்கா வெற்றி பெற்றால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை கோஸ்ரரிக்கா பெற்று விடும்.
ஹொண்டூராஸ் வெளியேறி விடும். அந்தப் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறவேண்டும் என்றே ஹொண்டூராஸ் மக்கள் விரும்பினார்கள். அமெரிக்காவுக்கும் ஹொண்டூராஸுக்கும் இடையே அரசியல் பிரச்சினை இருந்தாலும் அமெரிக்காவின் வெற்றியை ஹொண்டூரஸ் மக்கள் விரும்பினார்கள்.
அமெரிக்காவுக்கும் கோஸ்ரரிக்காவுக்கும் இடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது. ஹொண்டூராஸைப் போன்றே கோஸ்ரரிக்காவும்
10 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஹொண்டூராஸ், கோஸ்ரரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் தலா 16 புள்ளிகளைப் பெற்றன. விகிதாசார அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட ஹொண்டூராஸ் தகுதி பெற்றது.
டேவிட் அசோ, வில்சன் பலதியோல் ஜுலியோ லியோன், அமோடோடுவாரா ஆகியோர் ஹொண்டூராஸின் நட்சத்திர வீரர்களாவர். கார்லோஸ்பவல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஸ்பெயின், சிலி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுடன் "எச்' பிரிவில் ஹொண்டூராஸ் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: