Monday, December 14, 2009

ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்குதயாராகியுள்ள கருணாநிதி


கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய வயதையும் தாண்டி சுறுசுறுப்பாக அரசியல் பணியை நடத்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் தான் அவரது மகன் மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார். தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினை நியமிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் களையப்பட்டு விட்டன. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஸ்டாலினை எதிர்த்தவர்களின் வாய் அடைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் முதல்வராவதற்கான சகல தகுதிகளும் தனக்கு இருப்பதாக ஸ்டாலின் நிரூபித்துள்ளார். கருணாநிதி வைத்த சகல பரீட்சைகளிலும் ஸ்டாலின் சித்தியடைந்து விட்டார்.
மாணவர் அணி, அணித் தலைவர் பதவி, தமிழக சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், கட்சியின் பொருளாளர் ஆகிய பதவிகளில் தனது திறமையை நிரூபித்த ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதல்வராகி, அப்பதவியிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஸ்டாலினுக்கு எதிராக கட்சிக்குள் இருந்த சகல எதிர்ப்புகளும் நீக்கப்பட்டு நிம்மதியாக இருந்த வேளையில் அழகிரியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினுக்கு அச்சுறுத்தலை விடுத்தது. மாநில அரசுக்கு ஸ்டாலின், மத்திய அரசுக்கு அழகிரி என்ற சூத்திரத்தின் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்திய மத்திய அமைச்சர் பதவி அழகிரி எதிர்பார்த்த சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது திணறும் அழகிரி, தமிழக அரசியலில் கால்பதிக்கத் துடிக்கிறார். தம்பி ஸ்டாலினின் கீழ் அண்ணன் அழகிரி பணி புரிய மாட்டார் என்பதனால் அதிகாரம் உள்ள பதவி ஒன்று அழகிரிக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்டாலின் முதல்வரானால் துணை முதல்வர் பதவியின் நிலை என்ன என்ற கேள்விக்கு உடனடியாக விடை தெரியவில்லை. ஸ்டாலினின் கீழ் துணை முதல்வராவதை அழகிரி விரும்ப மாட்டார். அழகிரியை முதல்வராக்கினால் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் என்பதும் கருணாநிதிக்குத் தெரியும். ஆகையினால் அழகிரி துணை முதல்வராகும் சந்தர்ப்பம் இல்லை.
அழகிரியைத் தவிர வேறு ஒருவர் துணை முதல்வரானால் அது அழகிரியை அவமானப்படுத்துவது போல் ஆகி விடும். வேலைப்பளு அதிகமானதாலும் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது. உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் ஸ்டாலின் சேவை செய்யும் வேளையில் துணை முதல்வரை நியமித்து ஸ்டாலினுக்கு இணையாக இன்னொருவர் உருவாகுவதை கருணாநிதி விரும்ப மாட்டார். ஆகையினால் ஸ்டாலின் முதல்வரானதும் துணை முதல்வர் பதவி இல்லாமல் போவதற்குரிய சந்தர்ப்பம் மிக அதிகமாக உள்ளது.
அழகிரியின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் தமிழகத்தின் தென் மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசமாகின. அழகிரியின் அணுகுமுறையும், திட்டமிடலும் தமிழக இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரு வெற்றியைப் பெற்றுத் தந்தன.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய இருவரையும் சமாளிக்கக் கூடிய வல்லமை அழகிரிக்கு இருப்பதனால் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவி ஒன்று அழகிரிக்கு வழங்கப்படலாம். தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் பாரிய பொறுப்பு அழகிரியிடம் ஒப்படைக்கப்பட்டால் வேலைப் பளுவை காரணம் காட்டி மத்திய அமைச்சுப் பதவியிலிருந்து அழகிரி விலகிவிடுவார். கனிமொழி அமைச்சராவார் என்ற கருத்தும் உள்ளது.ஓய்வு ஒழிச்சல் இல்லாது அரசியல், இலக்கியம் என்ற இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாகப் பயணம் செய்ய கருணாநிதி, ஓய்வைப் பற்றி அறிவித்தமை அவரின் மனதில் உள்ள காயத்தின் வெளிப்பாடே என்ற கருத்தும் உள்ளது. தமிழக அமைச்சர்கள் சிலர் முறைகேடாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகள் வாங்கியது கருணாநிதியை வெகுவாகப் பாதித்துள்ளது. முறைகேடாக வாங்கிய சொத்துகளை மீள ஒப்படைக்கும்படி கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதியவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். தான் மட்டும் பதவியில் ஒட்டிக் கொண்டு மற்றையவர்களை ஒதுங்கும்படி கட்டளையிடுவது நியாயமாகுமா என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் கருணாநிதி உள்ளார். ஸ்டாலினுக்கு பதவி உயர்வு, இளைஞர்களுக்கு கருணாநிதி வழி விடுகிறார் என்ற இரண்டு காரியங்கள் நடைபெற வேண்டுமானால் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்றால் அவரது இலக்கியப் பணி அதிகரிக்கும்.
கும்பிடிப்பூண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை வீழ்த்த வேண்டும் என்ற கங்கணத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக்கியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உறுதிபூண்டுள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைதூக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் காரிய மாற்றுகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான திருச்செந்தூரையும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பணியாற்றியதைப் போன்றே பணியாற்றி திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சிந்தித்து செயல்படுகிறது.
கடந்த இடைத்தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றதைப்போல் இம்முறையும் வெற்றி பெற திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது.

அதேவேளை, அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக முதல்வர் கருணாநிதி விடுத்த அறிக்கையின் பின்னால் அவர் மனம் புண்படும்படியான காரியங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. முதல்வரின் தலைமையில் நடைபெறும் கடைசித் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதனால் வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் நடைபெற்ற சகல இடைத்தேர்தல்களிலும் தோல்வியடைந்த அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13/12/09

No comments: