.jpg)

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் போட்டியிட்டதனால் எதிர்பார்த்த வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெறாது என்ற கணிப்பீட்டைப் பொய்யாக்கி 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றியீட்டினர்.
திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. வந்தவாசியில் வன்னியர் அதிகளவில் வாழ்வதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகம் என்ற மாயை இருந்தது.
இத்தேர்தலில் இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரசாரமாக இருந்தது.
ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூரில் ஸ்டாலினும், வந்தவாசியில் அழகிரியும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப் போர் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் கசிந்த இவ்வேளையில் இடைத்தேர்தலின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தனது செல்வாக்கு இன்னமும் மங்கி விட வில்லை என்பதை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்துவதற்கும் இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதற்கு இடைத்தேர்தலின் வெற்றி உதவி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கும் திருச்செந்தூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்குக்கும் இடையே யான பலப்பரீட்சையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியீட்டியுள்ளார்.
2001 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் இடைத் தேர்தல் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்வதைவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் துரோகம் செய்த அனிதா ராதாகிருஷ்ணனை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்தார். நம்பி வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைவிடக் கூடாது என்ற கொள்கையுடன் முத ல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் அனிதா
ராதாகிருஷ்ணன் 13,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட 16,623 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார். இதன் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்ற மாயை தேர்தல் முடிவு உடைத்தெறிந்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து திருச்செந்தூரை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றி உள்ளது.
வந்தவாசி இடைத் தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. வந்தவாசி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ஜெயராமன் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜெயராமனின் மகனான கமலக்கண்ணனை திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிறுத்தியது. தந்தையைவிட அதிக வாக்குகள் பெற்று கமலக் கண்ணன் வெற்றி பெற்றார்.
இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற திரம்விட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாது, தனது தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இரு பிரதான கட்சிகளும் பணமும் அன்பளிப்புகளும் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
விஜயகாந்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கனவுடன் அரசியலில் புகுந்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை உணர்ந்தும் உணராதவர் போல் நடந்து கொள்கிறார். கடந்த தேர்தல்களின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைத் தகர்த்த விஜயகாந்த் தே.மு.தி.க. இம்முறை இரண்டு தொகுதிகளிலும் கட்டுப்பணத்தை இழந்துள்ளார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் புயலாக மாறி புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என்ற கணிப்பீடுகள் எல்லாவற்றையும் வாக்காளர்கள் பொய்யாக்கி விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறவைத் துண்டித்து விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் எனத் துடித்த காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் திரம்விட முன்னேற்றக் கழகம் கரியைப் பூசி உள்ளது.
முதல்வரின் அரசியல் வாரிசுகளான ஸ்டாலினும் அழகிரியும், திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி நாயகர்களாக விளங்குகின்றனர். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பிரச்சினை அதிகாரம் மிக்கவர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு என்று பரவலாகத் தகவல் வெளியானாலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தை இருவரும் நிறைவேற்றி விட்டனர். முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து கொண்டே வெற்றிக் கனியைப் பறித்து விட்டார். கருணாநிதிக்கு பின்னர் கட்சியை வழி நடத்த இரண்டு புதல்வர்களும் இருக்கிறார்கள் என்ற தெம்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலை புறக்கணிக்கும்படி ராமதாஸ் விடுத்த கோரிக்கையை எவரும் கணக்கில் எடுக்கவில்லை. திருச்செந்தூரில் 17 பேரும், வந்த வாசியில் 21 பேரும் தேர்தலைப் புறக்கணிக்கும் படிவத்தை நிரப்பியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் புறந்தள் ளப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை இர ண்டு தொகுதிகளிலும் உள்ள மக்கள் நிராகரி த்து விட்டனர்.
அடுத்து நடைபெறும் தேர்தலில் கூட்டணியில் சேர்வதற்கான பேரம் பேசும் தகுதியை ராமதாஸும் விஜயகாந்தும் இழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் பலம் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் உள்ளது என்ற மாயை அகன்று விட்டது. இவர்களை தமது கட்சியில் சேர்ப்பதை விட இவர்களது கட்சித் தொண்டர்களையும் பிரபலமானவர்களையும் தமது கட்சிக்கு இழுக்கும் வேலையை பிரதான எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை வலுப்படுத்த வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கான பேரம் பேசும் வலுவை திராவிட முன்னேற்றக் கழகம் அதிகரித்துள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 27/12/09
1 comment:
வருது வாயில நல்லா!
பிரியாணியும் காசும் கொடுத்து ஓட்டு வாங்கிட்டு இப்போ சாதித்தது அப்படீன்னு வேற சொல்ல வெட்கமாயில்ல!
அதுசரி, வெட்கம் இருந்தால்தானே அதைப்பத்தி கவலைப்படணும்.
Post a Comment