Thursday, October 14, 2010

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்பாதுகாப்பை அதிகரிக்கக் கோரிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன நடத்தும் பிரமாண்டமான கூட்டங்களினால் தமிழக நகரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சி கூட்டம் நடத்தும் அதே இடத்தில் மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்த கட்சி கூட்டத்தை நடத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தான் இதுவரை ஏட்டிக்குப் போட்டியாகக் கூட்டத்தை நடத்தின. இந்த இரண்டு கட்சிகளுக்கும் போட்டியாக இப்போது காங்கிரஸ் கட்சியும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தும் கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டங்களில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து தமிழக ஆளும் கட்சி கொஞ்சம் மிரண்டு போயுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இப்படித்தான் கூட்டம் கூடியது. தேர்தல் முடிவு எமக்குச் சாதகமாக அமைந்தது என்று திருப்திப்படுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழகத்தின் சகல நகரங்களிலும் கூட்டம் நடத்தும் ஜெயலலிதா மதுரையில் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்த தினத்தில் இருந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலே மீனாட்சி அம்மன் ஆலயம் இருப்பதனால் மதுரை அம்மாவின் ஆட்சி என்பார்கள். தமிழக அரசியலைப் பொறுத்தவரை மதுரை அண்ணனின் ஆட்சி என்பார்கள். அழகிரியை மதுரையில் உள்ளவர்கள் அண்ணன் என்றே அழைப்பார்கள். அண்ணன் அழகிரியின் கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் அம்மா காலடி வைக்கக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதாது எனவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மனுக் கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றி தமிழக அரசு தீவிர விசாரணை செய்து வருகிறது. மதுரைக்கு வந்தால் கொல்லப்படுவார் என்று ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலின் பின்னணியில் அழகிரியின் அனுதாபிகள் இருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தேகப்படுகிறது.
மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடத்தும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அழகிரிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்பதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்குரிய முன் ஏற்பாடுகளை தமிழக அரசு எடுக்கவுள்ளது. மதுரைக் கூட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறார். மதுரையில் ஜெயலலிதா நடத்தும் கூட்டம் தோல்வி அடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. ஆகையினால் மதுரையில் நடைபெறும் கூட்டத்துக்கு அதி உச்ச பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும்.
தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக கருணாநிதியும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜெயலலிதாவும் காய்களை நகர்த்தி வரும்வேளையில் ஆட்சியில் பங்கு பெறுவதற்கான திட்டங்களுடன் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வி அடையும் திராவிடக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தமிழகத் தேர்தலில் எதனையும் சாதிக்க முடியாது. என்பதை காங்கிரஸ் தலைமைப் பீடம் நன்கு உணர்ந்துள்ளது.
கருணாநிதியுடனா, ஜெயலலிதாவுடனா கூட்டணி என்று காங்கிரஸ் தலைமைப் பீடத்தைக் கேட்டால் கருணாநிதியுடன் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைமைப் பீடம் பட்டென பதில் கூறிவிடும். கருணாநிதிக்கும் இது நன்கு தெரியும். அதனால் தான் இளங்கோவனின் பேச்சுக்கு எந்தவிதமான பதிலையும் கருணாநிதி வெளியிடுவதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியின் குடும்பத்தையும் யாராவது விமர்சித்தால் சாட்டையடி கொடுப்பது போல் பதிலளிக்கும் கருணாநிதி இளங்கோவனின் இயலாமையை பற்றி நன்கு தெரிந்த படியினால் அதற்கு பதிலளிப்பதில்லை.
கருணாநிதியை அனுசரித்துப் போக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமைப் பீடம் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது கூட்டணியைப் பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று குலாம் நபி ஆஷாத் மறைமுகமாக இளங்கோவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே இளங்கோவன் வெளியேறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ராகுல்காந்தி, இளங்கோவன், போன்றவர்கள் கருணாநிதியுடனான கூட்டணியை விரும்பவில்லை. சோனியா காந்தியும் மன்மோகன் காந்தியும் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். சோனியாவின் முடிவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதுவும் செய்வதற்கு விரும்ப மாட்டார்கள். இளங்கோவனும் சோனியாவின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் செய்வதற்கு இப்போதைக்குத் தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் பிரிந்து விட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தும் பயனடைந்து விடுவார்கள். காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழக் கூட்டணியில் இப்போதைக்கு பிளவு ஏற்படும் சூழ்நிலை இல்லை. இளங்கோவன் போன்றவர்கள் எதிர்ப்புக் காட்டினாலும் சோனியாவின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கட்டுப்பட்டு விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/09/10

No comments: