Sunday, October 24, 2010

கூட்டணிக் கனவில் தலைவர்கள்இலவசத்தை எதிர்பார்க்கும் மக்கள்




தமிழக சட்டமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடைபெறாது என்று முதல்வர் கருணாநிதி அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட்டார். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன தமது பலத்தைக் காண்பிப்பதற்காக ஏட்டிக்குப் போட்டியாக கூட்டங்களை நடத்துகின்றன.
காங்கிரஸ் கட்சி திருச்சியில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 125 ஆவது ஆண்டு விழா, ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா திருச்சியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி இக்கூட்டத்தில் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோனியா காந்தியின் திருச்சி உரை காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது. தமிழகத்தில் நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம். அதேநேரம் தனது தனித்துவத்தை காங்கிரஸ் ஒருபோதும் இழக்காது. தமிழகத்தில் காங்கிரஸ்தான் எதிர்காலத்தில் பிரதான அரசியல்கட்சியாக இருக்கும் என்று எண்ணி பல இலட்சக்கணக்கானோர் கட்சியில் இணைந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் புதிய சரித்திரத்தின் தொடக்கத்தை எழுதுகிற ஓர் அற்புதமான நிகழ்வு. இந்தப் புதிய தொடக்கத்தை எழுதுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். புதிய சரித்திரத்தை எழுத வேண்டும் என்று சோனியா காந்தி உøரயாற்றினார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நாசூக்காகக் கூறியுள்ளார் சோனியா காந்தி.
தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்கான சகல முயற்சிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. இழந்து விட்ட ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு துடிக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். வியூகமஅமைத்து வேலை செய்து வருகிறது. திராவிடக் கழகங்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தது போதும் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உத்வேகம் காங்கிரஸ் கட்சியிடம் ஏற்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வருகின்றனர். பல கோஷ்டியாகப் பிரிந்திருக்கும் அவர்கள் பேச்சுடன் மட்டும் நின்று விடுவார்கள் என்பது வெளிப்படை. தமிழகக் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கே பலமாக முட்டி மோதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதல்வராகும் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும், தமிழகத் தலைவர்களும் முழங்கும் போது அமைதியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் சோனியாவின் பேச்சால் விழிப்படைந்துள்ளது. தமது தலைமையில் சிறு கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்கலாம் என்று கருதுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் பலமாக இருக்கும் வேளையில் காங்கிரஸின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சாத்தியக் கூறு இல்லை.
மக்களுடன்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் அரசியல் அரங்கில் நுழைந்த விஜயகாந்த் அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு இறங்கி வந்துள்ளார். காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்துடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் தகவல்களை காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உத்தியோகபூர்வமாக மறுப்பறிக்கை விடவில்லை. யாருடன் கூட்டணி என்பது பற்றி விஜயகாந்த் வாயே திறக்கவில்லை.
பலமான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அரசியல் தலைவர்களின் கனவு. ஆனால் தமிழக மக்களின் கருத்து வேறு விதமாக உள்ளது. பலமான கூட்டணி அல்ல நாம் வழங்கும் தீர்ப்பே ஆட்சியைத் தீர்மானிக்கும் என்று மக்கள் கூறியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் கிராமப் புறங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஒரு ரூபாவுக்கு படி அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ், இலவச வீடு, உயிர் காக்கும் கலைஞர் காப்புறுதித் திட்டம் போன்றவற்றினால் கிராமப் புறத்தில் உள்ள மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடமேற வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி சேர வேண்டிய நிலையே சிறு கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மதுரையில் குறுகிய மன்னனாக அழகிரி கோலோச்சுகிறார். மதுரையில் நடைபெறும் சகல தேர்தல்களிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார் அழகிரி. தமிழகம் எங்கும் சூறாவளியாகச் சுற்றுப் பயணம் செய்யும் ஜெயலலிதா மதுரைக்குப் போவதாக அறிவித்ததும் சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. மதுரைக்கு வந்தால் உயிருடன் திரும்பிப் போக முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபிகள் மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தேகம் கொள்கிறது. எச்சரிக்கை விடுத்தவர்கள் கையும் மெய்யுமாகப் பிடிப்படவில்லை.
இதேபோன்று தமிழக முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான கொலை மிரட்டல்களால் தமிழக அரசியல் தரம் தாழ்ந்துள்ளது. மதுரையில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மதுரையில் சிறு சம்பவமாவது ஏற்பட வேண்டும். அதை வைத்தே தமிழக அரசை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்துள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/10/20

No comments: