Sunday, February 20, 2011

ஷேவாக் கோஹ்லி சதம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 87 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 370 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் மிர்பூர் தேசிய மைதானத்தில் முதலாவது உலகக் கிண்ண போட்டி நடைபெற்றது. ஷேவாக், டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
முதலாவது பந்தை பவுண்டரிக்கு அடித்து 10 ஆவது உலகக் கிண்ணப் போட்டியன்று ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஷேவாக்.
ஷேவாக்கும் டெண்டுல்கரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 8.5 ஓவர்களில் 50 ஓட்டங்களை எடுத்தது இந்தியா. சச்சின் டெண்டுல்கர் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளைச் சந்தித்த சச்சின் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷேவாக்குடன் கம்பீர் இணைந்தார். இருவரும் இணைந்து வழமையான அதிரடியை வெளிப்படுத்தினர். 39 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றவேளையில் மஹமதுல்லாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. இருவரும் அதிரடியை வெளிப்படுத்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 45 பந்துகளில் ஒரு சிக்சர், ஏழு பவு ண்டரிகள் அடங்கலாக 50 ஓட் டங்கள் எடுத்தார் ஷேவாக். ஷேவாக் கோஹ்லி இருவரையும் பிரிக்க முடியாது திணறினார்கள் பங்களாதேஷ் வீரர்கள். 94 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்கர், ஒன்பது பவுண்டரி அடங்கலாக 10 ஆவது உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது சதத்தை அடித்தார் ஷேவாக்.
மறுமுனையில் 46 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஹ்லி ஐந்து பவுண்டரிகளுடன் அரைச் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் 150 ஓட்டங்கள் அடித்தார். இதில் நான்கு சிக்ஸர் 13 பவுண்டரிகள் அடங்கும். ஷேவாக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் அவரது அதிரடியின் வேகம் குறைந்தது. ஷேவாக்குக்கு ரன்னராக கம்பீர் களம் புகுந்தார்.
உலகக் கிண்ண போட்டியில் அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனை தென்னாபிரிக்க வீரராக ஹேர்ஸ்டன் திகழ்கிறார். ஹேர்ஸ்டனின் 188 ஓட்டங்களைக் கடந்து ஷேவாக் புதிய சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் அல்ஹசனின் பந்தில் ஆட்டமிழந்தார் ஷேவாக். 140 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் 175 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஐந்து சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை களிப்படையச் செய்தார் ஷேவாக்.
மூன்றாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷேவாக், கோஹ்லி ஆகியோர் 145 பந்துகளில் 203 ஓட்டங்களை அடித்து புதிய சாதனை படைத்தனர். ஷேவாக் ஆட்டமிழந்ததும் களம் புகுந்த யூசுப்பதான் வழமை போன்று அதிரடி காட்டினார். கோஹ்லி சதத்தை நெருங்கும் வேளையில் மறுமுனையில் பதான் அதிரடியாக ஓட்டங்க ளைக் குவித்தார்.
49 ஓவர்கள் முடிந்து 50 ஆவது ஓவரின் நான்காவது பந்தை யூசுப் பதான் எதிர்நோக்கினார். செஞ்சரி அடிக்க கோஹ் லிக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ரசிகர்கள் பதை பதைத்தனர். ஒரே ஒரு ஓட்டத்துடன் நின்று விட்டார் யூசுப் பதான். ஒரு ஓட்டம் எடுத்து உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதலாவது சதத்தை அடித்தார் கோஹ்லி 83 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஹ்லி இரண்டு சிக்ஸர் எட்டு பவுண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் யூசுப்பதான் ஆட்டமிழந்தார். பதான் 8 ஓட்டங்கள் எடுத்தார். கோஹ்லி ஆட்டமிழக்காது 100 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி 27 ஓவர்களில் 218 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி. ருபெல் ஹொசைன், சஹீர் அல் ஹசன் ஆகிய இருவரும் சராசரியாக ஆறு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். ஏனையோர் அதிக ஓட்டங்களைக் கொடுத்தனர்.
சஃவியுல் இஸ்லாம், சகிப் அல் ஹசன், மஹமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
371 என்ற பிரமாண்டமõன இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமீம் இக்பாலும் இமருல் கயஸும் மிரட்டினார்கள்.
ஸ்ரீசாந்தின் ஒரு ஓவரில் இமருல் கயஸ் 24 ஓட்டங்கள் எடுத்தார். 30 பந்துகளில் பங்களாதேஷ் 50 ஓட்டங்களை எட்டியது. பட்டேலின் பந்தில் இமருல் கயஸ் ஆட்டமிழந்தார். 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.
தமிம் இக்பாலுடன் சித்திக் ஜோடி சேர்ந்தார். 10 ஓவர்களில் 68 ஓட்டங்கள் எடுத்த னர். பங்களாதேஷ் ரசிகர்களின் பலத்த ஆரவார இரைச்சலுக்கு மத்தியில் 15 ஓவர்க ளில் 93 ஓட்டங்கள் எடுத்தது பங்களாதேஷ்.
ஹர்பஜன் சிங், யூசுப் பதான் ஆகியோரின் பந்து வீச்சு பங்களாதேஷின் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தியது. அவர்கள் இருவரும் இணைந்து வீசிய 11 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாது திண்டாடினார்கள் பங்களாதேஷ் வீரர்கள்.
அதிரடியாக விளையாடிய தமிம் இக்பால் மந்தமாக விளையாடினார். யுவராஜ் சிங்கின் பந்தில் சிக்சர் அடித்து மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தமிம் இக்பாலின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் முனாப் பட்டேல்.
முனாப் பட்டேலின் பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்த தமிம் இக்பால் ஆட்டமிழந்தார். 86 பந்துகளுக்கு முகம் கொடுத்த தமிம் இக்பால் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்தார்.
வெற்றிக்காகப் போராடிய அணித் தலைவர் சாஹிப் அல் ஹஸிர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முஷிபுர் ரஹிம் 28, ரகிபுல் ஹஸன் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். 50 ஓவர்கள் பங்களாதேஷ் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்கள் எடுத்தது.
ஐந்து ஓவர்கள் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 53 ஓட்டங்களைக் கொடுத்தார். முனாப் பட்டேல் 48 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும் சகிர்கான் இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்பஜன், யூசுப்பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஷேவாக் தெரிவு செய்யப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் சஹிட் அல்ஹசன் 260 ஓட்டங்கள் வரை துரத்தி வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
அணித் தலைவரின் எதிர்பார்ப்பை சக வீரர்கள் நிறைவேற்றி விட்டனர். இந்தியாவும் பங்களாதேஷûம் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இந்தியா 21 போட்டிகளிலும் பங்களாதேஷ் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றன.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: