Monday, February 7, 2011

குழம்பியுள்ளகூட்டணிப் பேச்சுவார்த்தைகள்

தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை குழப்ப நிலையிலேயே உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்து வந்தனர். ஆனால் டெல்லியில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்øதையில் முடிவு எட்டப்படவில்லை. ராசாவின் கைது கூட்டணி பேரத்தைக் குழப்பியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இணைவதற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது என தகவல்கள் வெளிவந்தன. விஜயகாந்த் தரப்பில் விடுக்கப்பட்ட நிபந்தனையினால் பேச்சுவார்த்தை முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று விடுத்த நிபந்தனையை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு தூதுக்கு மேல் தூது அனுப்பினார் ராமதாஸ். ராமதாஸின் தூதர்களுக்கு சாதகமான பதிலை வழங்காத முதல்வர் கருணாநிதி, கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கிறது என டில்லியில் கூறினார். கூட்டணி சேர்வதற்காக கெஞ்சிக் கொண்டிருந்த ராமதாஸ் கூட்டணி பற்றி நாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தடாலடியாக அறிவித்தார்.
தமிழக அரசியலில் என்றுமே இல்லாதவாறு கூட்டணிப் பேரங்கள் குழம்பிப் போயுள்ளன. தனி ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் கட்சிகள் அதிக தொகுதி கேட்டு நெருக்கடி கொடுக்கின்றன. கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் டில்லிக்குச் சென்ற முதல்வர் கருணாநிதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை கருணாநிதி நம்பி இருந்தார். சோனியாவின் சுகவீனம் காரணமாக சந்திப்பு பிற்போடப்பட்டது. சோனியாவைச் சந்திக்காது தமிழகத்துக்குத் திரும்பினால், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற பிரசாரம் பெரிதாகி விடும் என்பதை உணர்ந்த கருணாநிதி சோனியாவைச் சந்திப்பதில் அதிக அக்கறை காட்டினார்.
அதிக தொகுதி, துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் பங்கு ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த மூன்றையும் அங்கீகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. அதிக தொகுதிகள் கொடுத்தால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. துணை முதல்வர் பதவியைக் கொடுத்தால் ஸ்டாலினுக்கு எதைக் கொடுப்பது. மகனுக்காக முதல்வர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆகையால் இம் மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான பதிலை வழங்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி.
முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்கி வரவேண்டிய நிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைவசம் உள்ளதால்தான் ராசா கைது செய்யப்பட்டதாக சி. பி. ஐ. அறிவித்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெறும் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையை இழந்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி, கருணாநிதி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிய சோனியா விழித்துக் கொண்டதால் சோனியா கீறிய கோட்டில் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார் கருணாநிதி. காங்கிரஸின் கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடரும். இல்லை என்றால் விஜயகாந்துடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணையப் போகிறார்கள் என்ற செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. இருவரும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. விஜயகாந்த் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையினால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தனக்கு இணையாக ஆண்கள் வருவதையே விரும்பாத ஜெயலலிதா இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுக்க மாட்டார்.
அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த், தன் மனைவியை துணை முதல்வராக்க விரும்புவதாக வெளியானால் செய்தி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியுள்ளது. அப்படி ஒரு கோரிக்கையை தான் முன் வைக்கவில்லை என்று அறிக்கை விடக் கூடிய நிலையில் விஜயகாந்த் இல்லை. அப்படி ஒரு அறிக்கை வெளியானால் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்றதை ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும்.
மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை விஜயகாந்த் கேட்கிறார் என்ற தகவலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் கசிய விட்டிருக்கலாம். விஜயகாந்தின் கோரிக்கைகளை ஏற்கும் நிலையில் ஜெயலலிதா இல்லை. ஆகையினால் இந்தக் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவாகி உள்ளது. விஜயகாந்தின் பார்வை காங்கிரஸ் மீது உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டால் காங்கிரஸுடன் விஜயகாந்த் கைகோர்ப்பார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் தூது விட்ட ராமதாஸ், எந்தக் கூட்டணியிலும் சேராது நழுவி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி எமது கூட்டணியில் உள்ளது என்று டில்லியில் முழங்கினார் கருணாநிதி. உடனடியாக மறுப்பறிக்கை விட்டு கூட்டணி பற்றி இன்னமும் நாம் முடிவு செய்யவில்லை என்றார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸின் மறுப்பறிக்கையைப் பார்த்த கருணாநிதி, எமது கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றார்.
தன் மகன் அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற கொள்கையில் உள்ளார் டாக்டர் ராமதாஸ். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியைப் பெறலாம். ஆகையினால் வெற்றி பெறக் கூடிய 35 தொகுதிகளை எதிர்பார்க்கிறார் ராமதாஸ். மகன் அன்பு மணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தருவதாக வாக்குறுதியளித்தால் போட்டியிடும் தொகுதிகளைக் குறைக்கத் தயாராக உள்ளார் ராமதாஸ்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கும் கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு சேவை செய்யப் போவதாக வெளிப்படையாகக் கூறினாலும் தமது சொந்த நலனிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீட06/021/11

No comments: