
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரோடு யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் கட்சித் தொண்டர்களே மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கையில் புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டார் ஜெயலலிதா. கூட்டணி சேரும் பெரிய கட்சிகள் இரண்டும் தாம் வெற்றி பெறும் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்ட பின்னரே சிறிய கட்சிகளுடன் தொகுதிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவது வழமை. இம்முறை அதற்கு எதிர்மாறாக சிறிய கட்சிகளை முதலில் அரவணைத்துள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பு வழங்கியவர்கள் தலித் சமுதாயத்தினரே. எம்.ஜி. ஆரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த தலித் கட்சிகளுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சி வட மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலித் சமுதாய வாக்கு வங்கியைச் சிதறடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளிடம் இழந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை மீண்டும் பெறுவதற்காகவே புதிய தமிழகம் இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஜெயலலிதா.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் செ.கு. தமிழரசனின் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு
தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் பலம் வாய்ந்த தொகுதிகளிலேயே இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிடலாம் எனத் தெரியவருகிறது. அருந்ததியர் இனத்துக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கி அந்தச் சமூக மக்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மீது ஜெயலலிதா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்க முடியாத கருணாநிதி தலித்களை ஜெயலலிதா அவமானப்படுத்து
கிறார் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்காகவே தலித் கட்சிகளுடன் முதலில் தொகுதி ஒப்பந்தம் செய்துள்ளார் ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகி யோர் அறிக்கைவிட்டனர். தொகுதி உடன்பாட்டுக்காக இரு கட்சிகளும் ஐவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த ஐவர் குழு தம க்குள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதே தவிர இரண்டு குழுவும் இதுவரை சந்திக்கவில்லை.
அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி, மந்திரி சபையில் பங்கு என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை சாதகமான பதிலளிக்கவில்லை. 100 முதல் 80 தொகுதிகள்வரை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. 80 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தால் 80 தொகுதிகள் ஒதுக்கலாம். 30 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. மேலதிகமாக 50 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸுக்கான வெற்றி வாய்ப்புப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 30 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். 30 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபாட்டுடன் செயற்பட்டால் வெற்றி பெறலாம். மேலும் 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டு போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அதிக தொகுதிகள் கேட்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
அதிக தொகுதி, துணை முதல்வர் பதவி, மந்திரி சபையில் இடம் ஆகியவற்றுக்கு உறுதியான முடிவு காணப்பட்டால்தான் திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.
தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்போர் தொகை அதிகரித்துள்ளது. 132 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற கனிமொழி உட்பட சுமார் 5ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னர் பாக்கு நீரிணையில் சுமார் 500 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். படகுகள், வலைகள் பல அழிக்கப்பட்டன. அவற்றின் பெறுமதி கோடிகளைத் தாண்டும் எனத் தெரியவருகிறது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த கனிமொழி இப்போது சீறி எழுந்ததன் காரணம் தமிழக சட்ட சபைத் தேர்தல் என்பது வெளிப்படையானதே.
அரசியலில் இறங்குவதற்கான தருணம் பார்த்திருக்கும் நடிகர் விஜய் 22ஆம் திகதி
நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார். மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் விஜய் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் உள்ளது. விஜய் நடித்த காவலன் திரைப்படம் வெளியாவதைத் தடுப்பதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள்தான் காரணம் என்று விஜய் வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆகையினால் விஜய் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் மீனவர் பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெறும். மீனவர்கள் கடலில் தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராக மீனவர்கள் வாக்களிப்பார்கள். மீனவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 20/02/11
No comments:
Post a Comment