Monday, October 22, 2012

தடம்மாறிய‌தமிழ்ப்படங்கள் 41காதலனும் காதலியும் ஒருவர் மீது ஒருவர் தொடாது தூரத்தே நின்று காதல் வசனம் பேசிய காட்சிகள் எல்லா ம் 1935 ஆம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. முத்தமழை, கற்பழிப்பு, காதல் காட்சிகளில் நெருக்கம் என்பனவற்றை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய மேனகா பல சர்ச்சைகளில் சிக்கியது.
டி.கே. சண்முகம் கே.டி. ருக்மணி, எம்.எஸ். விஜயாள் ஆகியோர் முத்தக் காட்சியிலும் கற்பழிப்புக் காட்சியிலும் நடிக்க மறுத்து விட்டனர். டைரக்டர் சாண் டோ ராஜா வின் வற்புறுத்தலினால் அக்காட்சிகள் மேனகா படத்தில் இடம்பெற்றன.
ஆசாரம் மிக்க பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் டி.கே. பகவதி. அவருடைய மனைவி எம்.எஸ். விஜயாள். மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். டி.கே. பகவதி மூத்த சகோதரிகள் இருவர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார் டி.கே. பகவதி கணவனை இழந்து வீட்டிலே இருக்கும்அக்காவுக்கு தம்பியும் மனைவியும் நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை. வக்கீலாக கடமையாற்றும் டி.கே.பகவதி நீதிமன்றத்துக்குச் சென்றபோது அக்காவும் வேறு இருவரும் சேர்ந்து 5000 ரூபாவுக்கு டி.கே. சண்முகத்துக்கு எம்.எஸ். விஜயாளை விற்று விடுகின்றனர்.
நீதிமன்றத்தால் திரும்பி வந்த டி.கே. பகவதியிடம் மனைவி நாடகக்காரருடன் ஓடி விட்டதாகப் பொய் கூறுகின்றனர். பணத்துக்கு வாங்கிய எம்.எஸ். விஜயாளைக் கற்பழிக்க முயற்சிக்கிறார் டி.கே. சண்முகம், டி.கே. சண்முகத்திடமிருந்து தப்பித்த விஜ யாள் தற்கொலை செய்ய முயற்சி செய்த போது டி.கே.சண்முகத்தின் மனைவி ருக்மணி காப்பாற்றுகிறார். மனைவியைப் பிரிந்த டி.கே. பகவதி பைத்தியமாக அலைந்து கார் விபத்தில் சிக்குகிறார். இதனை அறிந்த விஜயாள் நர்ஸ் வேஷத்தில் சென்று பணிவிடை செய்கிறார்.
சுய நினைவுக்குத் திரும்பிய டி.கே. பகவதி மனைவி உத்தமி என அறிகிறார். நடந்த தவறுகளுக்கு டி.கே. சண்முகம் மன்னிப்புக் கேட்கிறார். கதாநாயகி விஜயாள் மேனகா என்ற பாத்திரத்தில் நடித்ததனால் இப்படத்துக்கு மேனகா எனப் பெயர் குறிப்பிடப்பட்டது.
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை டி.கே. சண்முகம் கோ தரர்கள் நாடகமாக நடித்தனர். எம்.கே. ராதாவின் தந்தை எம். கந்தசாமி நாடகத்தின் வசனத்தை எழுதினார். திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பனியின் சார்பில் எஸ்.கே. மொய்தீன்,சோமசுந்தரம், சேசவ லால் காளிதாஸ், சேட் ஆகியோர் தயாரித்தனர். ராஜா சாண்டோ இயக்கிய இப்படத்துக்கு டி.கே. முத்துசாமி இசை அமைத்தார்.
ஹிந்திப் படங்களில் நடித்த ராஜா சாண்டோ பம்பாயில் குடியிருந்தார். அங்குள்ள மூவி டோன் படக் கம்பனியில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். அவர் மாதச் சம்பளத்துக்குப் பணியாற்றிய ரஞ்சித் மூவி டோன் படக் கம்பனியில் 30 நாட்களில் மேனகா படமாக்கப்பட்டது.
கணவனை இழந்த அக்காவாக டி.கே. சண்முகத்தின் அண்ணன் முத்துசாமி நடித்தார். இப்படத்தின் வேலைக்காரனின் மனைவியாக சுப்பையாவும் மகளாக திவாகரனும் நடித்தனர். இப்படத்தின் பின்னர் ஆண் வேடத்தில் பெண்களும், பெண் வேடத்தில் ஆண்களும் நடிப்பது அதிகமாகியது.
டி.கே. பசுபதி, டி.கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், ராமசாமி கே.ஆர். ராமசாமி, டி.என். சிவதாணு ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானார்கள்.
எனது நாடக வாழ்க்கை என்ற புத்தகத்தில் டி.கே. சண்முகம் மேனகா படம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சியின் ஒத்திகைகையை நினைத்து என் மனம் வெட்கத்தால் குன்றியது. ஒரு கையால் ருக்மணியை அணைத்தபடி அவரின் வலது கையிலிருந்து தோள்வரை முத்தமிட வேண்டும். கூச்சத்தால் உயிரே போய்விடும் போலிருந்தது.
தப்பி ஓடும் விஜயாளைத் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்த வேண்டும் இப்படி ஒரு காட்சி எங்களது நாடகத்திலோ வடுவூரானின் நாவலிலோ இல்லை. டைரக்டர் ராஜாவின் கற்பனை.. இந்தக் காட்சி வேண்டாம் என்று நான் மறுத்தேன். விஜயாளும் இக்காட்சியை விரும்பவில்லை. ஐயாயிரம் ரூபா கொடுத்துவிட்டு தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் இருப்பானா என்று பதிலளித்த இயக்குனரின் வற்புறுத்தலினால் அக்காட்சியில் நடித்தேன்.

ரமணி
மித்திரன் 14/10/12

No comments: