ஆழமான இரவின் அமைதியைக்கிழித்துக்கொண்டுஅந்த அவலக்குரல் கேட்டது. அண்டை அயலில் உள்ளவர்கள்
சத்தம் வந்தவீட்டை நோக்கி ஓடினார்கள்.ஓடும்போது
என்னநடந்ததுஎன ஒருவரை ஒருவர் வினவினார்கள்.போய்ப்பார்த்தால் தெரியும்தானே எனச்சொல்லிக்கொண்டு ஒரு முதியவர்குடுகுடுவென ஓடினார்.
"அண்ணைஅழாஅதேங்கோ .சட்டம்பியார் என்ன நடந்ததெனச் சொல்லுங்கோ".
வந்தவர்களின் வார்த்தையைக்கேளாமல் வேலுச்சட்டம்பியார் தலையில் அடித்துக்குழறினார்.வேலுச்சட்டம்பியார்
என எல்லோராலும் அழைக்கப்படும் வேலுப்பிள்ளை வேலையிலிருந்து இளைப்பாறிவிட்டார்.அவருக்குஎழுபது வயதென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
பனிஎன்றாலும் மழை என்றாலும் பொருட்படுத்தாமல் அதிகாலை
நான்குமணிக்குத்தோட்டத்துக்குப்போய்விடுவார்.உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல்
தோட்டத்தில் நிற்பார்.
இரவு ஒன்பது மணிக்கு
சைக்கிளில் மிசினைவைத்துக்கொண்டு வந்தவர்
முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு
கிணற்றடியில் முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்துபார்த்தபோது
சைக்கிலுடன் மிசினும் மாயமாக மறைந்துவிட்டது.
தோட்டம்,வீட்டிலுள்ள மா,
பலா, வாழ போன்றவற்றுக்கு நீர் இறைப்பது
ஊரில் மிசின் இல்லாதவர்களின் தோட்டங்களுக்கு வாடகைக்கு
விட்டுச்சம்பாதிப்பது போன்ற வேலைகளைச்செய்துவந்த மிசின்மிசினை
இழந்த சட்டம்பியார் தனது கையை இழந்தது
போலவும்,தோட்டத்துக்கு மிசினைக்கொண்டுபோவது, காய் கறிவகைகளைக் கரவெட்டியிலிருந்து
நெல்லியடிச்சந்தைக்குக் கொண்டுபோவது, நெல்லியடியிலிருந்து உரம்,பசளை போன்றவற்றை
வீட்டுக்குக்கொண்டுசெல்லும்
சைக்கிளை இழந்ததால் தனது காலை இழந்ததுபோல்
தவித்தார்.
" பாவம் சட்டம்பியார் கனவிலைகூடத்தீங்கு
நினையாதவருக்கு ஆரோ ஒருதரித்திரம்பிடிச்சது இப்பிடிச்செய்துபோட்டுது. கடவுள் எடுத்தாளுக்குப்பாடம்படிப்பிப்பார்.
அவர் நல்ல பக்திமான். கடவுள்
கைவிடார்."என ஒருசிலர் அனுதாபப்பட்டனர்.
“ உந்தாளுக்கேன்
தோட்டம். ஆருக்காக உப்பிடி
எல்லாம் சம்பாதிக்குது.பெண்டில்.பிள்ளை இல்லாதாள் கிடைக்கிறபென்சனிலை காலத்தைக் கொண்டுபோகமாட்டுதே?
நாளைக்கு ஆரோ ஒருத்தன்
தானே கொள்ளிவைச்சிட்டு சுருட்டிக்கொண்டு போகப்போறான்."
அவரின் விடாமுயற்சி முன்னேற்றம்
ஆகியவற்றைக் காணச்சகிக்காதவர்கள் புலம்பினார்கள். மூன்றுதரம் தலையில்
குட்டி "எல்லாம்
உனக்குத்தெரியும்" என மேலே பார்த்துக்
கும்பிட்டார் வேலுச்சட்டம்பியார்.
வேலுச்சட்டம்பியாரின்
வீட்டின் முன்னால் நின்ற ஜீப்பிலிருந்து
பொலிஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார்.
அவரைத்தொடர்ந்து வேலுச்சட்டம்பியாரும் சில
பொலிஸ்காரர்களும் இறங்கினார்கள்.சைக்கிள் நின்ற
இடம், கிணற்றடி எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்த இன்ஸ்பெக்டர் "மாஸ்ரர் சந்தேகமிருந்தால் ஆளைச்சொல்லுங்கோ"
என்றார்.
"ஒருதரிலும் எனக்குச்சந்தேகமில்லை"
என்று வேலுச்சட்டம்பியார்
சொன்னார். யார் மீதாவது
சந்தேகமிருந்தால்
உடனடியாக வந்து சொல்லவேண்டும்
என இன்ஸ்பெக்டர் கூறினார். பொலிஸ்ஜீப்
போனதும் சுற்றி நின்று
புதினம் பார்த்தவர்கள் கலையத்தொடங்கினர்.
“மாஸ்ரர் எனக்கெண்டால் உவன் யோகுவிலைதான்
சந்தேகம்.அவன் போகவும்
வரவும்
உங்கடை வீட்டைத்தான் பாக்கிறான்.பொலிஸ் வந்த
உடனை வெறிக்கிட்டுக்கொண்டுபோனான் .உடனை போய்
அவனைப்பிடிச்சு நாலு இடி போட்டுக்கேக்கச்சொல்லுங்கோ" எனத்தாமு கூறிய
வார்த்தைகளைக்கேட்ட வேலுச்சட்டம்பியார்
சிரித்தார்.
" தாமு, என்னுடைய சைக்கிள்.மிசின் களவுபோனது எல்லாம் இறைவனுக்குத்தெரியும். அவனின்றி ஓரணுவும்
அசையாது கண்டியோ. அது
போறதையும் அவன் பாத்திருப்பான்
தாற நேரம் திருப்பித்தருவான்.களவு போனதை நான் காணேல்லை.உன்ரை சொல்லைக்கேட்டு
அவனை மாட்டி விட
விரும்பேல்லை."
தனது
மகளைச்சுற்றிவரும் யோகுவைக்கண்டிக்கப்பயந்த
தாமு, வேலுச்சட்டம்பியாரிடம்யோகுவைப்பற்றிக்கூடாமல் சொல்லி அவனைப்பொலிஸில் மாட்டிவைத்து அடி குடுப்பிக்கவேண்டும்
என எண்ணிக்கொண்டுவந்தார்.அவரின்
எண்ணம் நிறைவேறாதபடியால் வேண்டாவெறுப்பாக விடைபெற்றார்.
பருத்தித்துறையில் சைக்கிள்
களவெடுக்கும்போது
பிடிபட்ட ஒருவனின்
மூலம் மூன்று சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக எல்லோரும்
பேசிக்கொண்டார்கள். வேலுச்சட்டம்பியாரின் காதுக்கும் இது எட்டியது.அவர் உடனே பருத்தித்துறைப்பொலிஸ்நிலையத்துக்குச்சென்று சைக்கிள்களைப்பார்த்தார். அதிலே தனது சைக்கிளும் இருக்கும்
என்ற நம்பிக்கையுடன்
சென்றவர் ஏமாற்றமடைந்தார்.
"மாஸ்ரர் கவலைப்படாதேங்கோ.உங்கடை சைக்கிலும்
கெதியிலை கிடைக்கும். பலவருசங்களூக்கு
முந்திகளவுபோன சைக்கிலெல்லாம்
கிடைச்சிருக்கு.உங்கடை சைக்கிலும்
கெதியாக்கிடைக்கும்."
என ஆறுதல் சொல்லி
அனுப்பினார். இன்ஸ்பெக்டர்.
நீண்டநாட்களின்பின்தொண்டமானாறு செல்வச்சன்னதிக்குச்சென்ற வேலுச்சட்டம்பியார் விபூதியை
அள்ளி "சிவ சிவா" எனச்சொல்லியபடி நெற்றியிலே
பூசினார். தலையிலே மூன்றுமுறைகுட்டி
விநாயகனை வணங்கினார்.
முருகனின் முன்னால்
நின்று இரண்டுகைளையும் தலைக்கு மேலே கூப்பியபடி," அப்பனேமுருகா ஒப்பிலா மணியே
கடைசியாஉன்னட்டத்தான் சைக்கிளிலை வந்தனான். உனனைக்கும்பிட்டபலன்
அண்டைக்கே சைக்கிள் களவு
போட்டுது.கள்ளனை
உனக்குத்தெரிஞ்சிருக்கும். உன்னட்டை வாறேல்லை
எண்டுதான் நினைச்சிருந்தனான். எண்டாலும் உன்னை
மறக்கமுடியவில்லையடா
அப்பனே"
"நடந்துவந்து
உண்னட்டை முறயிடவேணும் எணடுதான்
இண்டைக்கு நடந்துவந்தனான்.நான்
சொல்லித்தான் களவி
போனது உனக்குத்தெரியவேணுமெண்டதில்லை. எண்டாலும் சொல்லுறன்.நான் சொல்லுறதையும் கேட்டுக்கொள்." என
வாய்விட்டு அழுது தனது குறைகளை
வெளிப்படுத்தினார்.
இலங்கையின் எந்தப்பகுதியில் சைக்கிள்
திருடன் அகப்பட்டு சைக்கிள்கள்
கைப்பற்றப்பட்டன என்று பத்திரிகையில் செய்தி வந்தால்
உடனடியாகப்பருத்தித்த்துறைப்பொலிஸ் நிலையத்துக்குப்போய் விசாரிப்பார்.வேலுச்சட்டம்பியாரின்
சைக்கிளும் மிசினும் களவுபோனதைப்பலர்
மறந்துவிட்டனர். ஒரு
சிலர் மட்டும்
அவரைக்கண்டால் மட்டும் அனுதாபம்
காட்டுவார்கள்.
வேலுச்சட்டம்பியார்
பொலிஸ்நிலையத்திலிருந்துவந்ததும் அவரின் வீட்டைச்சனம் மொய்த்தது.
நான்கு வருடங்களுக்கு முன் களவுபோன சைக்கிள்
கிடைத்ததை அறிய யாருக்குத்தான்
ஆவல் இராது.பொலிஸ்
நிலையம் சென்றுவந்த
வேலுச்சட்டம்பியார் விபரமாக விளக்கிக்கூறினார்.
"மாத்தறைப்பொலிஸார் ஒரு
சைக்கிள்த்திருடனைப்பிடித்தார்கள்.அவன்கொடுத்த
தகவல்களின்படி
பல சைக்கிள்கள் மீட்கப்பட்டன. அதிலே
ஒன்று அவன் பருத்தித்துறையில் உள்ள ஒருவரிடம் வாங்கியது.
அந்தச்சயிக்கில் நம்பரை பருத்தித்துறைப்பொலிசுக்கு அறிவிச்சார்கள் .அதுகளவு போனசைக்கிள்
எண்டு பருத்தித்துறைப்பொலிஸ் கண்டுபிடிச்சுது.
திங்கக்கிளமை சைக்கில்
பருத்தித்துறைக்கு வரும்."
வேலுச்சட்டம்பியாரின்
அதிர்ஷ்டத்திப்பற்றி எல்லோரும்
வியந்து கதைத்தார்கள். வீட்டுக்குவந்த
எல்லோருக்கும் இனிப்புக்கொடுத்தார் சட்டம்பியார்.
கோயில்கள் எல்லாவற்றுக்கும் போய் அர்ச்சனைசெய்து,
நேர்த்திக்கடன்களை
நிறைவேற்றினார் சட்டம்பியார்.திங்கட்கிழமை
மிகுந்தசந்தோசத்துடன் பருத்தித்துறைப்பொலிஸ்
நிலையத்துக்குப்போனார் வேலுச்சட்டம்பியார்.
"மாஸ்ரர் மன்னிச்சுக்கொள்ளுங்கோ சைக்கிள் இன்னும் வந்து
சேரவில்லை.நாளைக்கு ஒருக்கா
வந்து பாருங்கோ.
இன்ஸ்பெக்டரின் வார்த்தையைக்கேட்ட சட்டம்பியார் மனவருத்தத்துடன் வெளியேறினார்."இன்றுபோய் நாளை வாராய் என்றபடலம் ஒரு வாரமாகத்தொடர்ந்தது. வேலுச்சட்டம்பியாருக்கு அலுத்து விட்டது.
இன்றுதான் கடைசி இனிப்போவதில்லை எனநினைப்பார்.
கடைசியில் மனம் கேளாமல் போவார்.
வேலுச்சட்டம்பியாரைக்கண்ட இன்ஸ்பெக்டர்,
"மாஸ்ரர் நான் மிகவ்பும் மனவருத்தப்படுறன்.சைக்கிள்
கிடைக்குமெண்டுதான் எதிர்பார்த்தனான். ஆனால் இப்பிடிக்கிடைக்குமெண்டு
நினைக்கவில்லை." எனக்கூறிய இன்ஸ்பெக்டர் ஒரு அறையைக்காட்டினார்.
அவர் காட்டிய
அறையினுள் நுழைந்த சட்டம்பியார்
திடுக்கிட்டார். தன்னுடைய சைக்கிள்
தானா என அறிவதற்காக அருகிலே போய்
இலக்கத்தைப்பார்த்தார். சரியான இலக்கம் தான். மனம் கேளாமல் ஒவ்வொரு இலக்கமாகப்பார்த்தார்.
முழுச்சைக்கிளாகப்போனது முக்கோணபிறேமாகத்திரும்பி வந்துள்ளது.
இன்ஸ்பெக்டர் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு முக்கோணப்பிறேமைத்தூக்கித்தோளிலே
போட்டுக்கொண்டு பொலிஸ் ஸ்ரேசனைவிட்டு
வெளீயேறினார் வேலுச்சட்டம்பியார்.
நீர் இறைக்கும் இயந்திரத்திப்பற்றிய
தகவல் ஒன்றும் தெரியவில்லை.இதெண்டாலும் கிடைத்ததே என வேலுச்சட்டம்பியார் நினைக்கையில் "போனால்
போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
யாரடா......." என்றபாடல்
வானொலியில் ஒலிபரப்பாகியது.
"மனிதனே போறான்.இடையில் இது என்ன
பெரிசா? அடச்சீ போனால்
போகட்டும்" எனக்கூறிக்கொண்டு நடந்தார் வேலுச்சட்டம்பியார்.
ஏ.ரவிவர்மா
ஈழநாடு வாரமலர்
ஞாயிற்றுக்கிழமை
02/12/1979
No comments:
Post a Comment