""யன்னலைத்
திறந்தால் காற்று வரும்'' என்று
நித்தியானந்தா கூறியதால் மனம் மகிழ்ந்தவர்கள் கதவைத்
திறந்து அவரை தம் மானசீக
குருவாக ஏற்றார்கள். நித்தியானந்தாவின் பள்ளியறைக் கதவை நடிகை
ரஞ்சிதா திறந்ததனால் நித்தியானந்தாவின்
காலடியில் கிடந்தவர்கள், அவரை தம்
காலால் எட்டி உதைத்தனர். கோபுரத்தில்
இருந்த நித்தியானந்தா சாக்கடையில் தூக்கி
வீசப்பட்டார்.
வசீகரப்
புன்னகையால் கவர்ந்த
இளந் துறவியின் பின்னால் முதியவர்களும் இளைஞர்களும் சென்றனர். பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் ஆகியன நித்தியானந்தாவின் புகழ்
பாடின. உலகெங்கும்
கிளை நிறுவிய நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில்
இலட்சக்கணக்கான தொண்டர்கள் இணைந்தனர். கோடிக்கணக்கான பணம் புரளத் தொடங்கியது.
நித்தியானந்தாவின் ஆன்மிக
வலையில் தம்மை மறந்தவர்கள் அவரிடம்
சேர்ந்த கோடிக்கணக்கான சொத்துகளைக்
கவனிக்கத் தவறிவிட்டனர். ஆடம்பர மாளிகையிலும் இடாம்பீக
கார்களிலும் துறவி
பவனி வருவதை யாரும்
பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட சிலர் அவருடைய லீலைகளை
வெளியே கொண்டு
வர முயற்சி செய்தனர். அவர்கள்
வைத்த பொறியில் வசமாக மாட்டினார்
நடிகை ரஞ்சிதா.
நித்தியானந்த
சுவாமிகளின் புகழைப் பரப்பிய
ஊடகங்கள் அனைத்தையும் நித்தியானந்தா ரஞ்சிதா
படுக்கையறைக் காட்சிகள் ஆக்கிரமித்தன. இந்த அசிங்கத்தினால் அவமானப்பட்ட
பலர் நித்தியானந்தாவைத் தூக்கி வீசினர். அந்தப்
படங்கள் எல்லாம் போலி என
நம்பிய சிலர் நித்தியானந்தாவின்
காலடியில் தவமிருந்தனர்.
பெருமை
இழந்து பெட்டிப்பாம்பாக இருந்த நித்தியானந்தாவை இளைய
ஆதீனமாக மதுரை ஆதீனம் அறிவித்தமை.
இந்து சமய அபிமானிகளை அதிர்ச்சியடையச்
செய்தது. இந்த
நியமனத்தை எதிர்த்து
பல போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கெல்லாம் அசராத
மதுரை ஆதீனம் தனது நியமனத்தில்
உறுதியாக இருந்தார்.
திருஞானசம்பந்தரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை
நித்தியானந்தாவின் சீடர்கள் கைப்பற்றினர். மதுரை ஆதீனத்தின் செயற்பாடுகளில்
நித்தியானந்தாவின் கை ஓங்கியது. மதுரை ஆதீனம் அருணகிரியின்
உத்தரவை யாருமே மதிப்பதில்லை.
தான் செய்த தவறை மதுரை
ஆதீனம் உணர்ந்து கொண்டார். அதனைப் பகிரங்கப்படுத்த முடியாத
சூழ்நிலையில் இருந்தார்.
ரஞ்சிதாவுடனான
படுக்கையறைக் காட்சிகளால் அடங்கிக் கிடந்த நித்தியானந்தா
இளைய ஆதீனமானதும் தன்
சுயரூபத்தை வெளிக்காட்டத்
தொடங்கினார். நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்களும் நித்தியானந்தாவின்
தொல்லைகளும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நெருக்கடிக்குள்
தள்ளின.
நித்தியானந்தாவின்
மீது பாலியல் புகார் கூறி,
தலைமறைவாக இருந்த
ஆர்த்தி வெளிப்பட்டமை நித்தியானந்தாவுக்குத் தலையிடியைக் கொடுத்தது. ஆர்த்தியின் குற்றச்சாட்டுக் காரணமாக ஆண்மைப் பரிசோதனைக்கு
வருமாறு நீதிமன்றம்
விடுத்த அழைப்பு நித்தியானந்தாவைத் துரத்தியது.
நீதிமன்றத்தில் ஆஜராகாது காலத்தைக் கடத்தினார் நித்தியானந்தா.
நித்தியானந்தாவின்
சில்மிஷங்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அரசு விழித்துக்
கொண்டது. மதுரை
ஆதீனத்துக்கு எதிரான வழக்குகள், தமிழக
அரசின் கண்களைத் திறந்தன. தமிழக அரசும் நீதிமன்றமும்
கண்கொத்திப் பாம்பாக
மதுரை ஆதீனத்தை அவதானித்ததனால் தன்னை காப்பாற்ற வேண்டிய
சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,
நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக்கி இந்து
மக்களுக்கு அதிர்ச்சியளித்த மதுரை ஆதீனம், இளைய
ஆதீனம் பதவியை பறித்து நித்தியானந்தாவை
நிர்க்கதியாக்கினார்.
அடுத்த
ஆதீனம் நான்தான் என்ற
இறுமாப்பில் இருந்த நித்தியானந்தா ஆடிப்
போனார். பதவி பறிக்கப்பட்டு நித்தியானந்தா தலைமறைவானார்.
இளைய மடாதிபதி என்ற பட்டம் தன்னைக்
காப்பாற்றும் என்று நம்பி இருந்த நித்தியானந்தாவைப் பலிக்கடாவாக்கி
மடாதிபதி என்ற மகுடத்தைத் தக்கவைத்துள்ளார்
அருணகிரிநாதர்.
இளைய மடாதிபதி என்ற பதவியை நித்தியானந்தாவிடமிருந்து பறித்த பின்னரும் அருணகிரிநாதரால்
நிம்மதியாக
இருக்க முடியாதுள்ளது. அவருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராக
வேண்டிய நிலை உள்ளது. மதுரை
ஆதீனத்தின் சொத்துகளை தன்னிச்சையாக குறைந்த
விலைக்கு விற்பனை செய்தமை அரசியல்வாதிகளை
வரவேற்பதற்காக பணம் செலவளித்தமை போன்ற
வழக்குகளுக்கு பதில் கூற வேண்
டியதால் அதிர்ந்து போயுள்ளார் அருணகிரிநாதர்.
மெட்ரோநியூஸ் 26/10/12
No comments:
Post a Comment