Sunday, March 22, 2015

19953 இல் வெளியான முதலாவது திரைப்பட விமர்சன நூல்


தேவரையாளிச் சூரனின்
""
பராசக்தி''
படவிமர்சனம் 

தெணியான்

(நன்றி ஈழமுரசு வாரமலர் 06.10.1985)


தமிழில் திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் அல்லது மதிப்பீடுகள் முழுமையாக வெளிவருவதென்பது மிக அபூர்வம், புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதும் வர்த்தக நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் பத்திரிகைகள் சில அவைபற்றி மதிப்பீடுகளை சுடச்சுடச் சிறுகுறிப்புக்களாக வெளிட்டு வருகின்றன. அரைகுறையான இந்த மதிப்பீட்டுக் குறிப்புக்களை பிரசுரிக்கும் வெளியீடுகள் முழுமையான ஒரு விமர்சனத்தை இரசிகர்களுக்கு வளங்குவதில்லை.
பெரும்பாலன தமிழ்த் திரைப்படங்கள் வர்த்தக நோக்கம் ஒன்றினையே தமது பிரதானமான குறிக்கோளாகக் கொண்டு வெளிவருவதனால் அத்தகைய ஜனரஞ்சகப் பொழுது போக்குத் திரைப்படங்களுக்குரிய மதிப்பீட்டுக் குறிப்புக்களும் அவற்றுக்கிணங்கிப் போகின்றவைகளாகவே அமைந்து விடுகின்றன. வெகுசனத் தொடர்புச் சாதனங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவொன்றாக விளங்கும் திரைப்படங்கள் ஆரோக்கியமான கலைப்படைப்பாக உருவாக வேண்டுமென்னும் உணர்வுடன் சமூகப்பொறுப்பு வாய்ந்த விமர்சனங்கள் மதிப்பீடுகள் வெளிவராதிருப்பது நமது துரதிஷ்ரமே இத்தகைய சூழ்நிலையிலும் ஒரு சில தமிழ்படங்கள் வர்த்தக நோக்கையும் சிறிய கலைத்துவம் கொண்டவையாக அமையும் போது இத்துறையில் அக்கறை பூண்டுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிலர் குறிப்பிட்ட திரைப்படம் பற்றிய தமது மதிப்பீட்டை இரசிகர்களுக்கு அவ்வப்போது வழங்கிவருகின்றார்கள்.

இத்தகைய தமிழ்த்திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சி.என்.அண்ணாத்துரையின் ""சொர்க்கவாசல்'' மு.கருணாநிதியின் ""பராசக்தி'' ஆகிய இருதமிழ்த் திரைப்படங்களுக்கும் தனித்தனியான விமர்சன நூல்கள் நாம் அறிந்த வகையில் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.
சி.என்.அண்ணாத்துரை தி. இல் இருந்து வெளியேறி தி.மு. வைத் தோற்றுவித்து தமது நாவினாலும், பேனாவினாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு தலைவர். தமிழ் நாட்டில் தி.மு.கவினால் ஓர் அரசை நிறுவி முதல் அமைச்சராக இருந்து ஆட்சி செய்து அதன் தொடர்ச்சியான அரசு இன்றும் நிலைத்து நிற்கத் தகுந்த வண்ணம் பலமான அத்திவாரத்தை இட்டுச்சென்றுள்ள பெரும் அரசியல்வாதி அவரும் அவர் வழிவந்த ""தம்பிகளும்'' தமது கொள்கைப்பிரசாரச் சாதனங்களாகத் தேர்ந்தெடுத்தவற்றுள் திரைப்படமும் ஒன்றாகும். இந்த அண்ணாத்துரையின் திரைப்படமான சொக்கவாசல் தனக்னெ ஒரு மதிப்பீட்டு நூலை வெளிக் கொணர்ந்தது புதுமையானதொன்றல்ல எனவும் கூறலாம். இந்த மதிப்பீட்டு நூல் சொர்க்கவாசலில் இடம்பெறும் உடுமலை நாராயணகவியின் பாடல்களையும், திரைப்படம் பற்றிய விதப்புரைகள் சிலவற்றைக் கொண்டதாகவுமே வெளிவந்திருக்கிறது எனவே இந்நூல் விமர்சனத்துக்காகவோ அல்லது மதிப்பீட்டுக்காகவோ மாத்திரம் வெளிவந்ததாகக் கொள்ளவியலாது. இதுவும் ஒருவகையில் தி.மு.கவினரின் கொள்கைப்பிரசார வெளியீடென்றே சொல்லலாம்.  ""சொர்க்கவாசல்,'' ""வேலைக்காரி'' ""பராசக்தி'' என்னும் தமிழ்த்திரைப்படங்கள், தமிழ்திரைப்பட வரலாற்றின் திருப்பு முனைகளாக அமைந்த போதும், அவை தி.மு.கவினரின் கொள்கைப்பிசாரக் கலைப் படைப்புகள் என்பது மறுப்பதற்கில்லை. 
அக்காலத் தி.மு. வினர் தீவிரமான மத எதிர்ப்புக் கொள்கையை முன்வைத்து அதனூடே பிராமணீய எதிர்ப்பை வளர்த்து வந்த நாத்திகர்களாகவே விளங்கினர். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய தமிழ்த்திரைப்படம் பராசக்தி அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் தமிழ்ப்பட இரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. தி.மு.கவினரின் நாத்திகக் கொள்கையை வரவேற்று மக்கள் மத்தியில் பெரும் புளகாங்கிதத்தையும், நாத்திகத்தையும் ஏற்றுக் கொள்ளாத இரசிகர்கள் மத்தியில் அவர்களே ஏனென்றறியாத பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்தத்திரைபடத்திற்கே ஈழத்தில் வாழ்ந்த சைவப் பெரியார் ஒருவர் அவரது நோக்கில் விமர்சன நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் என்பது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததும் வியப்புக்குரியது மல்லாவ? இவ்வெளியீடு பற்றி யாழ்பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் எஸ்.சிவலிங்கராஜா, தமது ""வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கி வளமும்'' என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.""தூய சைவ வாழ்வு வாழ்ந்த சூரன் அவர்கள் கவியியற்று வதிலும், பதிகங்கள் பாடுவதிலும் வல்லவர். பிற்காலங்கில் திரைப்பட விமர்சனங்கம் எழுதியுள்ளார். இவர் எழுதிய பராசக்தி படவிமர்சனமே நமக்குத் தெரிந்தவரையில் ஈழத்தில் முதன் முதலாக வெளிவந்த ஓர் படவிமர்சன நூலாகும்.''

இவ்வாறு குறிப்பிடப்படும் கா.சூரன் (18811956) கரவெட்டியைப்பிறப்பிடமாகக் கொண்டு வதிரியில் திருமணம் செய்து வாழ்ந்தவர். தேவரையாளி இந்துக்கல்லூயைத் தோற்றுவித்த பிதாமகர். ""இலங்கையில் ஒருவாரம்'' என்னும் கல்கியின் நூலில் ""கந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனார்''எனப்போற்றப்படுவர். இவரது சமய சமூக, கல்வித்தொண்டுகளும் பல்துறை ஆற்றலும் வாழ்வும் பற்றி பிறிதொரு சமயத்தில் நோக்கலாம். தற்போது, அவற்றை விடுத்து அன்னாரின் ""பராசக்தி படவிமர்சனம்'' எனும் நூல் பற்றி மேலும் நோக்குவோம்.

கா.சூரனின் ""பராசக்தி படவிமர்சனம்'' என்னும் இச்சிறுநூல் எட்டுப்பக்கங்களைக் கொண்டதாக வெளிவந்திருக்கின்றது. 1953இல் வெளிவந்திருக்கும் இச்சிறு பிரசுரத்தின் விலை பதினைந்து சதம் மாத்திரமே. அக்காலத்தில் தீவிரமாக நாத்திகம் பேசிய மு.கருணாநிதியின் ""பராசக்தி'' படத்துக்கென வெளிவந்திருக்கம் விமர்சன நூலின் முன்னட்டையில், ஒரு பிள்ளையார் சுழியும், சிவமயமும் அதன்கீழே பராசக்தியின் திருவுருவமும் இடம்பெற்றுள்ளது. இது ஒரு விமர்சன நூலாகவே கா.சூரனால் வெளியிடப்பட்டுள்ளபோதும், உண்மையில் அவ்வாறு இதனைக்கொள்ளலாமா என்பது வினாவுக்குரியதொன்றாகும். விமர்சனமென்ற சொல்லின் ஒத்த பொருளுள்ள இன்னொரு தொடராகவே திறனாய்வு என்ற பதம் பலராலும் பயன்படுத்தப்படுவதாகவும், திறனாய்வு என்பது திறனை சிறப்பினை ஆராய்ந்து சொல்லுவதாகவே பொருள்படும் எனப்பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவார். இந்த அடிப்படையில் நோக்கும்போது சூரனின் இச்சிறு வெளியீடு ஒரு திறனாய்வு நூலென்றே குறிப்பிடுதல் பொருந்தும். திறனாய்வு நூல் என்னும் போது திரைப்படத்தின் பல்வேறு அம்சங்களை நோக்கி திறனாய்வு செய்யப்பட்ட ஒரு நூலாகவும் கொள்வதற்கு இயலாது


இந்த நூல் வெளிவந்திருக்கும் அக்காலத்தில் (1953) தமிழில் விமர்சனத்துறையோ அல்லது திறனாய்வுத் துறையோ இன்றுள்ள அளவிலேனும் வளர்ச்சியுற்றிருக்கலில்லை. சமூக, வரலாற்று, அறிவியல் நோக்கிலோ அல்லது திரைப்படங்களின் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொண்டு இரசனைக் குறிப்பினையோ எழுதக்கூடிய ஒருவராகச் சூரன் இருந்தார் எனக் கொள்வதற்கியலாது. 

62வயதை அடைந்தவரான சூரன் தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்துத் திளைத்து அப்படங்களைப் பார்த்துத் திளைத்து அப்படங்கள் உள்ளத்தில் தோற்றுவித்த அருட்டுணர்வினால் திரப்பட விமர்சன நூல் ஒன்றினை எழுதி வெளியிடும் மனப்பாங்கோ அல்லது வாழ்வு நெறியோ உடையவரும் அல்லர். இத்தகைய ஒருவர் திரைப்படமொன்றுக்கு அவர் கருதுவது போன்று ஒரு விமர்சன நூலினை எழுதி வெளியிட்டதற்கான காரணத்தை இந்நூலின் ஆரம்பத்தில் அவரே குறிப்பிடுகின்றார்.
""பராசக்தி என்ற பேசும் படம் இந்து சமயத்தை ஏளனம் செய்கிறதென்பது சிலர் சொல்லக் கேட்டு நான் அப்படத்தை பார்க்கவிரும்பவில்லை. தற்செயலாக படக்கதைப்புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தேன். அக்கதையிலே சமய தூசணையின்றி எமது சமய சார்பான பல இரசியங்களைக் கண்டேன். அதன் பின்பு அப்படத்தை இரண்டுமுறை பார்த்தேன். படம் பார்ப்பதற்காக நான் கொடுத்த சிறுதொகைப்பணத்தால் விலைமதிப்பற்ற எமது சமயதத்துவ இரகசியங்கள் பலவற்றை நேரிற் கண்டறிந்தேன். அதாவது எமது சமய நூல்கள் உலகியல் அனுபங்கள் பற்றி எந்தெந்த விதமாக எடுத்துச் சொல்லுகின்றனவோ அந்தந்த விதமாகவே உலகம் இன்னும் நடைபெற்று வருதலை நாம் நேருக்குநேர் காண்கின்றோம்.''

இக்கூற்றின் மூலம் ஓர் உண்மை பெறப்படுகின்றது. இன்னும் இந்து சமயத்துக்குரியவர்களென முழுமையாக அங்கீகரிக்கப் பெறாத சாதியைச் சேர்ந்த சூரன், தமது சமயதின் மேற்கொண்ட பற்றுதலின் காரணமாகவே இந்நூலினை எழுதி வெளியிட்டுள்ளார். நல்லூர் ஞானப்பிரகாசருடன் கடித மூலம் சமயவாதம் புரிந்த சூரன் நாத்திகரான மு.கருணாநிதியின் ""பராசக்தி'' திரைப்படத்தை தமது சமயக் கண்ணோட்டத்தில் கருத்தியல் ரீதியான திறனாய்வைச் செய்து சமய உண்மையை நிலைநாட்டும் பொருட்டே இச்சிறுநூலினை வெளியிட்டுள்ளார்.

""பராசக்தி'' திரைப்படமும் அதனை ஒட்டி அக்காலத்தில் வெளிவந்த ஏனைய திரைப்படங்களும், அத்திரைப்படங்கள் கூறும் கதைகளைவிட அப்படங்களில் இடம்பெறும் விறுவிறுப்பான வசனங்களுக்கே முக்கியத்துவம் அளித்தன. மக்கள் மத்தியிலும் அக்காலத்து வசனங்கள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்த வசனங்களையோ அல்லது பாரதியின் ""நெஞ்சுபொறுக்குதில்லையே.....'' என்ற பாடலையோதானும் சூரன் நோக்காது அதன் கதையொன்றையே அடிப்படையாகக் கொண்டு கதைப்போக்கினைச் சார்ந்ததாக திறனாய்வினை மட்டும் செய்துள்ளமை அவரது நோக்கத்தை ஒட்டி எழுந்ததொன்றாகும். பராசக்தி மூலம் மக்கள் முன் வைக்கப்படும் நாத்திகக் கருத்தினால் இந்து மதம் சீரழிந்து போகாவண்ணம் பாதுகாத்தல் ஒன்றே அவரது குறிக்கோளாகும்.

ஐந்தாவது வகுப்புரை மாத்திரம் கிறிஸ்தவ பாடசாலையில் நியமமான அடிப்படைக் கல்வியைப் பெற்ற சூரன் தமது திறனாய்வுக்கு சைவசித்தாந்தக் கருத்துக்களை ஆதாரபலமாகக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளமை பெரும் வியப்புக்கும் போற்றுதலுக்கு முரியதெனலாம். இத்திரைப்படத்தில் நிகழுகின்ற சம்பவங்கள் யாவும் அவரவர்க்குரிய பிராரப்த கன்மம் காரணமாகவே நிகழுகின்றன என்றும் நெறிநின்று வாழ்வார்க்கு நேரும் இடையூறுகள் பராசக்தியின் அருளினாலேயே தீர்க்கப்படுகின்றன என்றும் தமது நூலில் நிறுவியுள்ளார்.
இந்த நிறுவுதல் என்பது தர்கவாதத்தின் அடிப்படையிலேயே அவர் புரிந்துள்ள இரகசியங்களாக அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் ஐந்தாம் வகுப்புவரையிலான ஆரம்பக்கல்வியை மாத்திரம் பெற்றுக்கொண்டவரான சூரனின் வாக்கியங்கள் குழப்பமின்றித் தெளிவாகவும், எளிமையாகவும், இலக்கணவழுவின்றி இயல்பான ஓட்டமுடையனவாகவும் காணப்படுகின்றன. ஒளவைப்பிராட்டி மணிவாசகப் பெருமான் போன்றோரின் மேற்கோள்களையும் தமது கருத்து நிறுவுவதற்கான ஆதாரங்களாக எடுத்து முன்வைத்துள்ளார்
.
நாம் அறிந்த வரையில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்த நூல் முதன்மையானதும், புதுமையானதுமாகும். ஆனால், இந்து சமயத்தை பேணிப்பாதுகாக்கவேண்டும் என்பதொன்றையே ஒரே நோக்கமாகக் கொண்டு எழுதப்பெற்ற இந்நூலை எத்தனை இந்துக்கள் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐயத்துக்குரியதே. ஈழத்துதமிழ் உலகம் சூரனின் திறனாய்வினை திரைப்படம் சார்ந்த கலைத்துறையினுள் இணைத்து நோக்காது விடினும் சமயம் சார்ந்த பங்களிப்பு என்ற வகையிலும் இன்னும் கருத்திற்கொள்ளாதிருப்பது வேதனைக் குரியதாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள திறனாய்வு மாத்திரமன்றி அன்னார் இந்து சமய வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு ஆற்றிய அரும்பணிகள் பல உண்டு. அப்பணிகள் பற்றி மேலும் ஆய்வுகள் செய்து அன்னாருக்குரிய ஓரிடம் தமிழ் சமூகமாற்றமொன்றை முதற்கண் மண்ணில் தோற்றுவிக்க வேண்டியதே நமது கடமையெனலாம்.


No comments: