Tuesday, November 7, 2017

மோடியின் மாநிலமான குஜராத்தைக் குறி வைக்குக் காங்கிரஸ்

  
இமாசலப் பிரதேசம்,குஜராத் ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் இந்த மாதமும்  அடுத்த மாதமும் நடைபெற உள்ளன. இந்திய ஆளும் கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சியின் மீது மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள் எனப் பரவலான கருத்துகள் இருந்தபோதும் இரண்டு சட்ட சபைத் தேர்தல்களிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இமாசலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது .குஜராத் தேர்தல் டிசம்பர் 9 ஆம் திகதியும் டிசம்பர் 14 ஆம் திகதியும் இரண்டு கட்டமாக நடைபெறும். இரண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 18 ஆம் திகதி வெளியிடப்படும்.

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது முதலில் இமாசலப் பிரதேசத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சர்ச்சைகள் பெரிதாவதற்குள்  குஜராத் தேர்தலை அறிவித்து தேர்தல் திணைக்களம் தப்பிவிட்டது. இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ,குஜராத்தில்   பாரதீய ஜனதாக் கட்சியும் ஆட்சியில் இருக்கின்றன. இரண்டு சட்டசபைகளிலும் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதாவும் காங்கிரஸும் வியூகங்களை அமைத்துள்ளன. .

மோடியின் தாய் வீடான குஜராத்தைக் கைப்பற்றுவதே காங்கிரஸின் பிரதான குறிக்கோள். 27  வருடங்களுக்கு முன்னர் குஜராத்தின் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது.   22  வருடங்களாக குஜராத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக காய்களை நகர்த்தி வருகிறது. மோடியின்  மாநிலத்தைக் கைப்பற்றி விட்டால் அது மற்ற  மாநிலங்களிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது. ஆகையால் குஜராத்தில் செல்வாக்குள்ளவர்களின் உதவியை நாடி உள்ளது.

குஜராத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் வியாபாரிகளும் தலித்களும் பாரதீய ஜனதாவுக்கு  எதிராக இருப்பதை தனக்குச்  சாதகமாக்குவதற்கு  காங்கிரஸ் முயற்சிக்கிறது. சாதி வாகுகளை மூலதனமாக்கி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. இந்து என்ற ஒற்றைச்சொல்லுடன் குஜராத்தில் களம் இறங்கிய பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ச்சியாக ஐந்து முறை குஜராத்தில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா  ஆறாவது முறையாகவும் ஆட்சி  பீடம் ஏறுவதற்கு முயற்சி செய்கிறது. இந்து என்ற அடையாளம் இப்போது வலுவிழந்துள்ளது. சாதி ரீதியிலான வாக்கு  வங்கி குஜராத்தில் தலை எடுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

குஜராத்தில் பலம்மிக்க பட்டேல் சமூகம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக நிற்கிறது.  குஜராத்தை ஆட்சி செய்த பாரதீய ஜனதா அரசு பட்டேல் சமூகத்தின் இளம் தலைவரான  ஹர்த்திக் பட்டேலுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறக்கூடாது என்பதில் ஹர்த்திக் பட்டேல் உறுதியாக இருக்கிறார். அவர் காங்கிரஸில் சேரவில்லை காங்கிரஸுக்கு  ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார். ஹர்த்திக் பட்டேல் தமது கட்சியில் சேர்வார் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 பாரதீய ஜனதாவின் வாக்கு வங்கியில் பட்டேல் சமூகம் பெரும் பங்கு வகிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய பட்டேல் சமூகத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடவைத்தவர்  ஹர்த்திக் பட்டேல். இவருடைய போராட்டத்தினால் பரதீய ஜனதாவுக்கு ஆதரவான பட்டேல் சமூகத்தின் வாக்கு வங்கி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அல்பேஷ்  தாகூர் என்ற இளம் தலைவரும்  பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்குப் பின்னாலும் பெரும் படை உள்ளது. ஆனால்,அவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக குஜராத்தில் போர்க்கொடித் தூக்கி உள்ள இன்னொரு பிரபலம் ஜிக்னேஷ் மேவானி. தலித் போராளியான அவர் 36  வயது நிரம்பிய வழக்கறிஞர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் போது இடங்களில் தலித்கள் தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டுப் போராடியவர் ஜிக்னேஷ் மேவானி. இவருடைய போராட்டத்தினால் அன்றைய முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் பதவி விலக நேர்ந்தது. இவருடைய அமைப்பு  பாரதீய ஜனதாவை எதிர்த்து செயற்படுகிறது.  
 
   பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக  குஜராத்தில் நடைபெறும் சம்பவங்களைத் தனக்குச் சாதகமாகப்  பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. வியாபாரிகள்,தலித்கள், விவசாயிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னமும் காங்கிரஸுக்கு ஆதரவானவர்களாக மாறவில்லை. அவர்கள் மாறுவார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

  பிரதமர் மோடியும், பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியத் தலவரான அமித்ஷாவும் குஜராத்தின் மைந்தர்களாக இருக்கும்  போது சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி மிக இலகுவாக வெற்றி பெறலாம். ஆனால், கள நிலவரம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் பாரதீய ஜனதாவுக்கு சார்பாக இருந்தாலும் மிகுந்த போராட்டத்தின்  மத்தியில்தான் வெற்றி பெரும் சூழ்நிலை உள்ளது.

குஜராத் சட்டமன்றத்  தேர்தலில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்துமுறை பாரதீய  ஜனதாக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 2014  ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளிலும் பாரதியஜனதா வெற்றி பெற்றது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இது அது போன்ற மோசமான தோல்வியை காங்கிரஸ்  சந்தித்ததில்லை.
குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்த கேசுபாய் பட்டேல் 2001 ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர் நரேந்திர மோடி முதலமைச்சரானார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சரானார். பிரதமரின்மநிலத் தேர்தலில் தோல்வியடையக்கூடாது என பாரதீய ஜனதாக் கட்சியினர் விரும்புகின்றனர்.

   இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி  வரை நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாரதீய ஜனதா  ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. 182 சட்டசபை தொகுதிகளில் பாஜகவிற்கு 115-125 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா ருடே கணித்துள்ளது. கடந்த 2007 தேர்தலில் 117 தொகுதிகளிலும்  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 116 தொகுதிகளிலும்  பாரதீய ஜனதா  வென்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2007 ஆம் ஆண்டு தேர்தலில் 59 தொகுதிகளிலும்,2012 ஆம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதிகளிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தியா ருடே கணித்துள்ளது.

 இமாசல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா  அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக   நவம்பர் 9ஆம் திகதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாரதீய ஜனதா  கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது பாரதீய ஜனதா  ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிக்கு 2 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மக்களின் மனதில் இருப்பது தொடர்பாக டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் பாஜக 5-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தற்போதைய தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிப்போம் என 52 % பேர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பாஜகவுக்கு 118 முதல் 134 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

   இத்தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 37 % பேர் கூறியுள்ளனர்.  காங்கிரஸுக்கு 49 முதல் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

 அதிகபட்சம் 3 இடங்கள் பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 11 % பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற கட்சிகளுக்கு அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ்வின் கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளன. தேர்தலின் போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பது டிசம்பர் 18 ஆம் திகதி தெரிந்துவிடும்.

வர்மா

No comments: