Thursday, November 30, 2017

இரட்டை இலையும் இடைத்தேர்தலும்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய சின்னம். மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் மக்கள் தலைவனானதும் தன்னை நம்பிய தொண்டர்களுக்கு அடையாளம் காட்டிய சின்னம். வலது கையைத் தூக்கி இரண்டு விரல்களை விரித்து எம்.ஜி.ஆர் காட்டும்போது அது இரட்டை இலையின் அடையாளம் என்பதைத் தொண்டர்கள் புரிந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இரட்டை இலைச்சின்னம். தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை முடக்கப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாதான்  பின்னணியில் இருந்தார்  என்பதுதான் விதியின் விளையாட்டு.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலா அணி ஓ.பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, சிறைக்குச்செல்ல முன்பு தனது பிரதிநிதியாக டி.டி.தினகரனை நியமித்தார்.
சசிகலாவின் பெயர் மறைந்து தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி பேசாமடைந்தையானார்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அடையாளம் கட்டிய இரட்டை இரட்டை இலைச்சின்னம் வெற்றி தரும் என தினகரன் நம்பினார்.

தினகரனின் நம்பிக்கைக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டார். எடப்படியின் அணியில் இருந்த முக்கியஸ்தர்கள் சிலர் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். பன்னீர் அணியின் கோரிக்கையால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இரட்டை இலையின் மகாத்மியத்தைப்  புரிந்துகொண்ட எடப்பாடி அணி, பன்னீர்  அணியுடன் இணங்கிப்போக விரும்பியது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அறிய விசாரணைக் கமிஷன், சசிகலாவையும் மன்னார்குடி குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டினார்.

எடப்படியின் தலைமையில் இருந்தவர்கள் தினகரனின் தலைமையில் பிரிந்து சென்றார்கள். இரட்டை இலைச்சின்னத்தைத் தமக்குத் தரவேண்டும் என கொரிய பன்னீர் தரப்பு உரிய ஆவணங்களை தேர்தல்  தலைமை அலுவலகத்துக்குக்  கொடுத்தது. ஏட்டிக்குப் போட்டியாக எடப்படியும் தினகரனும் ஆவணங்களுடன் தேர்தல் தலைமை அலுவலகத்தை நாடினார்கள். இவர்களுக்கிடையில் தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

எடப்பாடி,பன்னீர்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்திருந்தது. ஒன்றரைக்கோடி தொண்டர்களும் தமது பக்கம் என்றே மூவரும் பிரசாரம் செய்தார்கள். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசைத் தூக்கி ஏறிய வேண்டும் என பன்னீரும் தினகரனும் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுக்காது, தமிழக அரசைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும்  கருத்துமாக இருந்தது.

எடப்பாடியையும் பன்னீரையும்  ஒற்றுமையாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்திருந்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என பாரதீய ஜனதா கருதியது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இருவரும் இணைத்து வைக்கப்பட்டார்கள். பிரிந்தவர்கள்  இணைந்தார்கள். கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கினப்புக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்ச்செல்வம்  ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் இரட்டை இலையும் இல்லாத தேர்தலை எதிர்கொள்ள அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தயங்கியது. எட்டு மாதங்களின் பின்னர் இரட்டை இலைச்சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பெயரும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனனின் அணிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. எடப்படியும் பன்னீரும் இணைந்தாலும் அறுதிப் பெரும்பனமைக்குரிய பலம் அவர்களிடம் இல்லை. ஆனால்,அதிகளவான  உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அவர்கள் பக்கம் இருப்பதால் சின்னமும் பெயரும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தையும் கழகப் பெயரையும் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்ட மறுநாள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச இயந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில்  இதுவரை கிடைக்கவில்லை.

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததால் வெற்றி பெறலாம் என எடப்பாடியும் பன்னீரும் நினைக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இல்லை. ஜெயலலிதா சொல்வதை அன்று அனைவரும் வேதவாக்காக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றைய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் சொல்லை நிர்வாகிகள் தட்டிக் கழிக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் மனுத் தாக்கல் செய்த மருது கணேஷையே திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அறிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி அணியில் தினகரனும் பன்னீர் தரப்பில் மதுசூதனனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தினகரன் இல்லாததால் மதுசூதனன் வேட்பளராக அறிவிக்கப்படுவார்  என்றே அனைவரும் பார்த்தனர். ஆனால், விரும்பு மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர். விருப்பு மனு என்ற  நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. மதுசூதனன் போட்டியிடுவதை எடப்பாடி அணி விரும்பவில்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 20 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் வேட்பளராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தெரிவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலத்த போட்டி நடைபெற்றது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை துளிர்ப்பதும் முடங்குவதும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தங்களுடைய புகாருக்கு விளக்கம் தெரிவிக்காமல் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு இரட்டை இலையைக் கொடுத்தது தவறு என தினகரன்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தினகரன் இப்படி ஒரு காரியம் செய்வர் என்பதை உணர்ந்த பன்னீர் தரப்பு முன்கூட்டியே  நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இரட்டை இஅலையெக் கேட்டு யாராவது முறையிட்டால்  எங்களைக் கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.  

இரட்டை இலைக்காகவே  எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். பிரிந்த அணிகள் இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்ற உண்மையை டிவிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பன்னீர் தரப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதே போன்ற பல உள் குத்துகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சோதனையில் பன்னீர் தரப்பு வெற்றி பெற்று விட்டது. இந்த வெற்றி நிரந்தரமா இல்லையா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

வர்மா 

No comments: