Friday, March 22, 2019

விசுவாசிகளைக் கைவிட்ட பன்னீர்ச்செல்வம்.


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துனுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஓ. பன்னீர்ச்செல்வம், தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். சசிகலா,தினகரன்,எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் அதிகாரப்போக்கைப் பிடிக்காதவர்கள் பன்னீர்ச்செல்வத்தின்  பின்னால் அணிதிரண்டனர். ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய பலம் அவர்களுக்கு இல்லை. என்றாலும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை தொண்டர்கள் விரும்பவிலை. நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்  தனது மகன் ரவீந்திரநாத்துக்கு பன்னீர்ச்செல்வம் சீற்  வாங்கிக் கொடுத்ததால் அவரை நம்பிச்சென்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 37 தொகுதிகளில் வெற்ரி பெற்றது. பாரதீயஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும்  வெற்றி பெற்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் வசமே தற்போது உள்ளன. தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆறு எம்பிக்களுக்கு  மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்புக் கொடுத்துள்ளது. அந்த ஆறுபேரும் எடப்பாடியின் ஆதரவாளர்கள். பன்னீர்ச்செல்வத்தின் விசுவாசிகளான 10 எம்பிக்களில் ஒருவருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடப்பாடியின் கை ஓங்கி, கையறு நிலையில் பன்னீர் இருப்பதை இது  உணர்த்துகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்க  முயற்சிக்காத பன்னீர்ச்செல்வம் தனது மகன் போட்டியிடுவதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்ததை அவருடன் இருப்பவர்கள்  ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஓ.பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தபோது பிரிந்தவர்கள் இணைந்துவிட்டார்கள் மனங்கள் இன்னமும் இணையவில்லை என பன்னீரின் ஆதரவாளரான ராஜ்யசபா உறுப்பினர்  மைத்திரேயன் தெரிவித்தார். அது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஸ்டாலின்,கனிமொழி,அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னிறுத்தப்பட்டதால் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாத பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார். துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லபாவின் மகன் ராஜ் சத்தியன் ஆகியோர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை தமது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் மெளனமாக இருந்த தலைவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அதிருப்பியுற்ற முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். யாதவ இன வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமையால் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் மார்க்கண்டேயன் விழாத்திகுளம் சட்ட சபை இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 18 சட்டசபை இடைத்தேர்தலைக் குரிவைத்டு காய் நகர்த்தும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு ஸ்டாலினின் தலைமையில் தமிழகத் தலைவர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிப்பதற்கு தினகரன் சத்தமில்லாமல் காய் நகர்த்துகின்றார். தினகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கலை அரசன், ஸ்டாலினின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியலை ஆரம்பித்த கலை அரசன்  மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளார்.
எதிர்பார்புகள் நிறைவேறாமையால் கட்சிமாறும் படலம் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது இன்னும் சிலர் கட்சிமாற வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் சிலகட்சிகளில்  பாரிய மாற்றங்கள் ஏற்பாடும்.

சூரன் ஏ.ரவிவர்மா.

No comments: