Tuesday, April 16, 2019

வாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.


இந்தியப் பொதுத் தேர்தலால் தமிழக அரசியல்களம் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசையும் மாநில அரசையும் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளரின் விரல் நுனியில் உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் கட்சிகளை வழிநடத்தும் தலைமைகள் வெற்றி பெற்று தமது தலைமைத்துவத்தை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் ஓய்வு இல்லாது சகல தொகுதிகளிலும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒருபக்கமாகச்சென்று பிரசாரம் செய்கிறார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தினகரனின் தலைமையிலான சுயேட்சை அணி களம் இறங்கியுள்ளது. சீனானும், கமலும் தமது செல்வாக்கை அறிவதற்காகத் தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றனர். பிரபலங்களும் அரசியல் வாரிசுகளும் தேர்தலில் போட்டியிடுவதால் பரப்புரைகள் புதிய பாதையில் செல்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில்    ஜெயலலிதாவின் வழிகாட்டலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. இம்முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டுமே மீண்டும் போட்டியிடுகிரார்கள். அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகமும் 20தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் யாருமே வெற்றி பெறவில்லை.  ஆகையால் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட அதிகளவான உறுப்பினர்களை வெற்றி பெறவைக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. இரண்டு பெரிய கட்சிகளும் வாரிசுகளையும் புதியவர்களையும் களம் இறக்கியுள்ளன.
 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்ற கருத்து உள்ளது. கமல்,சீமான் ஆகியோர் தமது செல்வாக்கை கணிப்பதற்கான களமாக பொதுத்தேர்தலை பார்க்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அக்கட்சியை தமிழ்கத்தில் மலரச்செய்த பெருமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே சாரும். எச்.ராஜா, தமிழைசை  ஆகியவர்கள் மீது தமிழக மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். தமிழிசையை எதிர்த்து கருணாநிதியின் மகள் கனிமொழி போட்டியிடுகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி,பாரதீய ஜனதாக் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக்  கட்சி ஆகியன தேர்தலுக்காக அவசரமாகக் கூட்டணி சேர்ந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாரதீய ஜனதாக் கட்சியையும் ஆட்சியில் ஒருந்து அகற்றுவதற்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன.
ஆட்சி அதிகாரம் ஒரு கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பதுக்கி வைத்த பணம் பறிக்கப்படுகிறது. ஆனாலும் தமக்குரிய ஆட்சியைத் தீர்மானிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.
தேர்தல்19.அரசியல்,இந்தியா,தமிழகம்

No comments: